தேடுதல்

Vatican News
கிரகோரியன் நாள்காட்டியை சீரமைத்தவர் அ.பணி கிறிஸ்டோபர் கிளாவியஸ் கிரகோரியன் நாள்காட்டியை சீரமைத்தவர் அ.பணி கிறிஸ்டோபர் கிளாவியஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: கிறித்தவமும் சீர்திருத்தமும்–பகுதி14

1750ம் ஆண்டுவரை உலகில் உள்ள 130 விண்கோள் ஆராய்ச்சி நிலையங்களில் 30 நிலையங்களை இயேசு சபையைச் சேர்ந்த அறிவியலாளர்கள் வெற்றியோடு நடத்தி வந்துள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

1773ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் கிளமென்ட் அவர்களால் தடை செய்யப்பட்ட உலகளாவிய இயேசு சபை, 1814ம் ஆண்டில், ஆகஸ்ட் 7ம் தேதி, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால் மீண்டும் அங்கீரிக்கப்பட்டு மறைப்பணியைத் துவங்கியது. 1814ம் ஆண்டு ஏப்ரலில், கூட்டணி படைகள், பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் அவர்களை, பதவியிலிருந்து இறக்கி, எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. இழந்த அரசை மீண்டும் கைப்பற்றிய நெப்போலியன், 1815ம் ஆண்டில் வாட்டர்லூ போரில் இறுதித் தோல்வியைச் சந்தித்தார். இதனால், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு, முதல் உலகப் போர்வரை, ஐரோப்பா அமைதியில் வாழ்ந்தது. பேரரசர் நெப்போலியனால் பலியானவர்களுள் திருத்தந்தையரும் உண்டு. திருத்தந்தை 6ம் பயஸ், நெப்போலியனின் கைதியாக, 1799ம் ஆண்டில் பிரான்சில் இறந்தார். இதையடுத்து கர்தினால்கள் அவை, வெனிஸ் நகரில், திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தது. இவர் மனவலிமையும், விடாமுயற்சியும் மிக்கவர். 1800ம் ஆண்டிலிருந்து 1823ம் ஆண்டுவரை இவர் திருஅவையை வழிநடத்தினார்.

பிரான்சில் மறைமாவட்டங்களையும், திருஅவை அமைப்புகளையும் மீட்டெடுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களும், பேரரசர் நெப்போலியனும் 1801ம் ஆண்டில் கையெழுத்திட்டனர். அதில், இருபால் துறவு சபைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், திருத்தந்தையின் அரசுகள் கலைக்கப்படுவது உட்பட, மேலும் சில காரியங்களை திருத்தந்தையிடமிருந்து விரும்பினார், நெப்போலியன். இதற்கு திருத்தந்தை அசைந்து கொடுக்காததால், பிரெஞ்சு இராணுவம், திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களைக் கைது செய்து, பிரான்சுக்கு அழைத்துச் சென்று, பல ஆண்டுகள் சிறையில் வைத்தது. 1814ம் ஆண்டு வசந்த காலத்தில் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெற்றியுடன் உரோம் திரும்பினார், திருத்தந்தை 7ம் பயஸ். இத்திருத்தந்தை, ஐரோப்பாவில் பலரால், வாழ்கின்ற மறைசாட்சி என நோக்கப்பட்டார். இத்திருத்தந்தை உரோம் திரும்பியதும், ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்த இயேசு சபையை, உலகெங்கும் மீண்டும் எழுச்சி பெறச் செய்யும் செயலில் இறங்கினார். நெப்போலியனால் பாதிக்கப்பட்டிருந்த திருஅவை, இத்திருத்தந்தையின் அசாத்திய திறமையால் மீண்டும் உயிர்பெற்றது. புனித இலொயோலா இக்னேசியஸ் அவர்களின் பாதையில், எல்லாவற்றிலும், இறைவனைக் கண்டு, இறைவனின் அதிமிக மகிமைக்காகவும், அனைத்து மனித சமுதாயத்தின் நலனுக்காகவும் உழைத்து வரும் இயேசு சபையினர்  சிலரின் சாதனைகள் இதோ...

 நாம் இன்று பயன்படுத்தும் கிரகோரியன் நாள்காட்டியை சீரமைத்து தந்தவர் அருள்பணி கிறிஸ்டோபர் கிளாவியஸ் (Christopher Clavius). ஜெர்மன் நாட்டவரும், கணித மற்றும் வானயியல் நிபுணருமான இவர், திருத்தந்தை 10ம் லியோ அவர்களுக்கு, வானயியல் அறிவியலாளராகப் பணியாற்றினார். இரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள எல்லைக்கோட்டை நிர்ணயித்தவர், பெல்ஜிய நாட்டு அருள்பணி Ferdinand Verbiest. 1629ம் ஆண்டு ஜூன் மாதம், சீனாவில் அரசவை விண்கோள் அறிவியலாளர்கள், சூரிய கிரகணம் எந்த நேரத்தில் நிகழும் என்று கணிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே, அந்த நிகழ்வை முன்னறிவித்து சாதனை படைத்தவர், இத்தாலியரான அருள்பணி மத்தேயோ ரிச்சி. இத்தாலிய அறிவியலாளர் கலிலேயோவுடன் பணியாற்றி நிலவின் வரைபடத்தை வரையறுத்து தயாரித்தவர்கள், இரு இயேசு சபை தோழர்கள். இந்த வரைபடத்தையே 1969ம் ஆண்டில் அப்போல்லோ விண்வெளிப் பயணிகள் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் மிகப் பெரிய ஐந்து நதிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்து, அவற்றில் பயணம் மேற்கொண்டவர்கள், ஐந்து இயேசு சபை அருள்பணியாளர்கள். 1709ம் ஆண்டில் குடையைப்போல் ஒரு சாதனத்தை வடிவமைத்து அதன்கீழ் வெப்பக் காற்றை அடைத்து ஓர் உயர்ந்த கோபுரத்திலிருந்து பறந்து சாதனை படைத்துள்ளவர் அருள்திரு பர்த்தலோமேயு தெகுஸ்மாவோ. வீனஸ் விண்கோள் சூரியனைக் கடந்து சென்றதைக் கண்டுபிடித்து அறிவித்தவர், அருள்பணி மாக்ஸ்மிலியன் ஹெல். நிலநடுக்கம், எரிமலைகள், கடல் அலைகள், வானிலை நடப்பு இவற்றை குறித்து ஆய்வு செய்து குறிப்புகளை எழுதிய முதல் அறிவியலாளர் என்ற பெருமை, இஸ்பானியாரன அருள்பணி José de Acosta அவர்களையே சாரும்.

உலகப்புகழ் பெற்ற நைல் நதியின் ஊற்றைக் கண்டுபிடித்து அங்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் அருள்பணி பீட்டர் பயேஸ். மூட்டு வலியை குறைக்க காந்தக்கல்லோடு காந்தத் தகடுகளை இணைத்து, ஒரு புதிய முறையை முதன்முறையாக கண்டுபிடித்தவர் அருள்பணி மாக்ஸிமிலியன் ஹெல். சூரியனில் புள்ளிகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்த முதல் அறிவியலாளர் அருள்பணி கிறிஸ்டோபர் ஷைனர். இவர், கண்ணில் உள்ள ரெட்டினா என்ற வலைதான், பார்வைக்கு ஊற்று என்பதையும் ஆராய்ந்து அறிவித்தார். தொலைதூரக் கண்ணாடியையும் இவர் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார். கொடைக்கானல் ஏரியை இயேசு சபை துறவற சகோதரர் ஒருவர் வடிவமைத்து தந்திருக்கிறார் என்று, வரலாற்று குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1750ம் ஆண்டுவரை உலகில் உள்ள 130 விண்கோள் ஆராய்ச்சி நிலையங்களில் 30 நிலையங்களை இயேசு சபையைச் சேர்ந்த அறிவியலாளர்கள் வெற்றியோடு நடத்தி வந்துள்ளனர். நிலவில் காணப்படும் மலைமேடுகளில், ஏறத்தாழ 35 மலைமேடுகளுக்கு இயேசு சபை அறிவியலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அறிவியலாளர்களாக பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர்களைப் பாராட்டி 2000ம் ஆண்டில், சீனாவில் ஒரு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் உள்ள காப்பிட்டோல் என்ற இடத்தில், பல மிக முக்கியமானவர்களின் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதில் இயேசு சபை அருள்பணியாளர்கள் யூசேபியோ கீனோ, லாக் மார்க்கெட் ஆகிய இருவரின் சிலைகளும் உள்ளன.

இயேசு சபையினரின் மேலும் பல சாதனைகளை, இணையதளங்களில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

07 August 2019, 15:41