விவிலியம் விவிலியம் 

நற்செய்தி விழுமியங்களை ஒன்றிணைந்து அறிவிப்போம்

ஊடகப் பணியில், உண்மை, நேர்மை, ஒளிவுமறைவற்ற தன்மை ஆகிய, நற்செய்தி விழுமியங்களைக் கடைப்பிடிப்பதற்கு, ஆசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

போலியான, உண்மையில்லாத, மற்றும், உணர்ச்சிகளைத் தவறான வழியில் தூண்டக்கூடிய செய்திகளை வழங்குவதைத் தவிர்த்து, நற்செய்தி விழுமியங்களை அறிவிப்பதற்கு, ஆசிய கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில், ஆசிய "SIGNIS" அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அதன் இறுதியில் அறிக்கை வெளியிட்ட கத்தோலிக்க ஊடகவியலாளர்கள், திருமுழுக்குப் பெற்றுள்ளவர்கள் மற்றும் ஆண்டவரால் இப்பணிக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களாகிய நாங்கள், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்குவதிலிருந்து விலகி நின்று, நற்செய்தியை அறிவிப்போம் என்று உறுதி எடுத்துள்ளனர்.

“திருமுழுக்கு பெற்றுள்ளவர்கள் மற்றும், அனுப்பப்பட்டுள்ளவர்கள்: உலகின் மறைப்பணியில் கிறிஸ்துவின் திருஅவை” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படுவதைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்த அறிக்கை உள்ளது என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

திசு கலாச்சாரத்தில் அமைதி ஊடகவியல் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 12 நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

"SIGNIS" என்பது, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும், ஏனைய சமூகத்தொடர்பு சாதனங்களில் பணியாற்றும், கத்தோலிக்க ஊடகவியலாளர்களின் அமைப்பாகும். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2019, 16:11