பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ள Rohingya இன மக்கள் பங்களாதேஷ் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ள Rohingya இன மக்கள் 

Rohingya புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த இரு கர்தினால்கள்

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவரான கர்தினால் தாக்லே, இரண்டாவது முறையாகவும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் போ அவர்கள், முதல் முறையாகவும் Rohingya புலம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்களும், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களும், பங்களாதேஷ் நாட்டில் வாழும் Rohingya இனத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்தோரை, ஜூலை 29 கடந்த திங்களன்று சந்தித்தனர் என்று UCA செய்தி கூறுகிறது.

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவரான கர்தினால் தாக்லே அவர்கள், இரண்டாவது முறையாகவும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் போ அவர்கள், முதல் முறையாகவும் இந்த புலம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

அகில உலக காரித்தாஸ் அமைப்பும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பும் இணைந்து, Rohingya புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றும் பணிகள் குறித்து நேரடியாக அறிவதற்கு, இவ்விரு கர்தினால்களும் இப்பயணத்தை மேற்கொண்டனர்.  

ஜூலை 29, 30 ஆகிய இருநாள்கள் நடைபெற்ற இப்பயணத்தில், பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ, சிட்டகாங் பேராயர் மோசஸ் கோஸ்தா, மற்றும் இராஜ்ஷாஹி ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ அவர்களும் உடன் சென்றனர்.

பங்களாதேஷில், Cox’s Bazar என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 30 முகாம்களில், ஏறத்தாழ 10 இலட்சம் Rohingya இனத்தவர் வாழ்கின்றனர் என்றும், இவர்கள், 2016ம் ஆண்டு, மியான்மாரில், இராணுவத்திற்கும் இவ்வினத்தவருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின்போது, அந்நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என்றும், UCA செய்தி கூறுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2019, 14:51