பொலிவியா நாட்டின் அமேசான் பகுதி நெருப்பு பொலிவியா நாட்டின் அமேசான் பகுதி நெருப்பு 

நம் பொதுவான இல்லம் எரிந்துகொண்டிருக்கின்றது

எரிந்துகொண்டிருக்கும் நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் - பொலிவியா நாட்டின் அமேசான் பகுதி ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பருவமழைக் காடுகள் தீப்பிடித்து எரிவதால், சூழலியலுக்கு ஏற்படுத்தும் பேரிடர்களின் கடும்விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அதேநேரம், எரிந்துகொண்டிருக்கும் நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, பொலிவியா நாட்டின் அமேசான் பகுதி ஆயர்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

பொலிவியா நாட்டின் அமேசான் பகுதி மக்கள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டு, ஆகஸ்ட் 26, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், பொலிவிய அரசின் இயற்கைப் பாதுகாப்பு குறித்த கொள்கைகள் செயல்படுத்தப்படுமாறும், பொருளாதாரத்தை மையப்படுத்திய முதலீடுகள் குறித்து சிந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் 26ம் தேதியை, வயது முதிர்ந்தவர்களின் மாண்பு நாளாக பொலிவிய அரசு உருவாக்கியிருப்பது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த, பொலிவிய காரித்தாஸ் அமைப்பின் முதியோர் திட்டப் பிரிவின் Elizabeth Calizaya அவர்கள், மூத்த குடிமக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டு, அவர்கள் நன்மதிப்புடன் நடத்தப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.

காரித்தாஸ் அமைப்பு, 2013ம் ஆண்டிலிருந்து முதியோர் நலனுக்காகச் சிறப்பாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றது என்றும், அரசியல், மற்றும் சமுதாய அளவில், முதியோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட கொள்கைகள் வகுக்கப்படுமாறு உழைத்து வருகின்றது என்றும் தெரிவித்தார், Calizaya.

காரித்தாஸ் அமைப்பு, 2015ம் ஆண்டிலிருந்து பொலிவியா நாட்டு நீதி அமைச்சகத்துடனும் இணைந்து முதியோர் நலனுக்காகச் செயல்பட்டு வருகின்றது என்றும், அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2019, 15:36