தேடுதல்

Vatican News
Waghaவில் ஒலிவ மரக்கன்றை நடுகிறார் பேராயர் செபஸ்டியான் ஷா Waghaவில் ஒலிவ மரக்கன்றை நடுகிறார் பேராயர் செபஸ்டியான் ஷா  

உரையாடல் வழியாக பிரச்சனையை தீர்க்க அழைப்பு

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், இந்துக்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவுடன், பாகிஸ்தான் மற்றும், இந்திய எல்லையிலுள்ள Waghaவில், ஒலிவ மரக்கன்றை நட்டார், பேராயர் செபஸ்டியான்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கலந்துரையாடல் வழியாக, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், கடினமாக உழைத்து அமைதியைக் கட்டியெழுப்பவும் வேண்டுமென, பாகிஸ்தான் மற்றும், இந்திய அரசுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், பாகிஸ்தான் பேராயர் ஒருவர்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே அரசியல்முறையில் சகிப்பற்றதன்மை நிலவிவரும் சூழலில், காஷ்மீர் மக்கள் அதற்குரிய விலையாக, உச்சகட்ட துன்பங்களை  அனுபவிக்கின்றனர் என்று, லாகூர் பேராயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுவின் தலைவருமான, பேராயர் செபஸ்டியான் பிரான்சிஸ் ஷா அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், இந்துக்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவுடன் சென்ற, பேராயர் செபஸ்டியான் அவர்கள், பாகிஸ்தான் மற்றும், இந்திய எல்லையிலுள்ள Waghaவில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும், நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கும், ஒரு சிறப்பு செய்தியை வெளியிட்டார்.

ஒப்புரவு மற்றும், அமைதி ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையில், அந்த எல்லையில் ஒலிவ மரக்கன்றையும் நட்டார், பேராயர் செபஸ்டியான்.

காஷ்மீர் விவகாரத்தை, போர் மற்றும், வன்முறை வழியாகத் தீர்க்க முடியாது, இதனால் அப்பாவி மக்களே கொல்லப்படுவர், இது மனித சமுதாயத்தின் தோல்வியாகவே எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ள லாகூர் பேராயர், இவ்விரு அரசுகளும், உரையால் பாதையைத் தேர்ந்தெடுத்து, பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி மற்றும், சமுதாய நல்லிணக்கத்தை எட்டுவதே, இவ்விரு நாடுகளுக்கும் உண்மையான வெற்றியாக எப்போதும் அமையும் என்றுரைத்துள்ள பேராயர் செபஸ்டியான் அவர்கள், பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவர்களும், ஏனைய மதத்தவரும்,  இக்கருத்துக்காக உருக்கமாக மன்றாடுமாறு கூறியுள்ளார். (Fides)

24 August 2019, 13:48