தேடுதல்

Vatican News
அமேசான் மழைக்காடுகளில் தீ அமேசான் மழைக்காடுகளில் தீ   (AFP or licensors)

அமேசான் மழைக்காடுகளின் துன்பம், உலகின் துன்பம்

உலகின் நுரையீரல்களைக் காப்பாற்றுமாறு, அமேசான் பகுதி நாடுகளுக்கும், ஐ.நா. நிறுவனத்திற்கும், உலக சமுதாயத்திற்கும், இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகிலுள்ள காடுகளில் தீப்பற்றி எரிவது, அதனால் காடுகள் அழிக்கப்படுவது குறித்து, இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (CELAM)  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

அலாஸ்கா, சைபீரியா, கிரீன்லாந்து, கானரித் தீவுகள், குறிப்பாக, அமேசான் பருவமழைக்காடுகளில் தீ பற்றியெரிவது, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றுரைக்கும், அக்கூட்டமைப்பின் அறிக்கை, அமேசான் மழைக்காடுகள் தீப்பிடித்து எரிவது, மிகப்பெரும் அளவில், இயற்கைப் பேரிடராக உள்ளது என்று கூறியுள்ளது.

அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்களுடன் தங்களின் நெருங்கிய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ள, இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர்கள், இப்பெருந்துயரை அகற்றுவதற்கு, உலக சமுதாயத்தின் ஒருமைப்பாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகின் நுரையீரல்களாகிய பருவமழைக்காடுகள் காப்பாற்றப்படுமாறு உலகினருக்கு அழைப்பு விடுத்துள்ள, இலத்தீன் அமெரிக்க மற்றும், கரீபியன் ஆயர்கள், அமேசான் மழைக்காடுகள் துன்புற்றால், உலகமும் துன்புறும் என்றும் எச்சரித்துள்ளனர்.

வருகிற அக்டோபரில், வத்திக்கானில் அமேசான் குறித்து, நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கென தயாரிக்கப்பட்டுள்ள ஏட்டில், வளம்நிறைந்த பல்லுயிர்களைக் கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடுகள், இப்பூமிக்கோளத்திற்கு மிக முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை, ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய அமேசான் பருவமழைக்காடுகள், கடந்த இரு வாரங்களாக தீப் பிடித்து எரிந்துகொண்டிருக்கின்றன.

24 August 2019, 13:52