ஹாங்காங் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் ஆயர் ஜோசப் ஹாங்காங் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் ஆயர் ஜோசப் 

ஹாங்காங் அரசியல் நெருக்கடியின் தீர்வுக்கு கத்தோலிக்கர் செபம்

வன்முறை மேலும் வன்முறையையும், காழ்ப்புணர்வு, மேலும் காழ்ப்புணர்வையுமே கொணரும், அநீதி ஒருபோதும் நீதியைக் கொணராது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஹாங்காங்கில், காவல்துறைக்கும், போராட்டதாரர்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கு உதவும் கலந்துரையாடலுக்கென, இருதரப்பினரும் தங்களின் நடவடிக்கைகளை, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்குமாறு, ஹாங்காங் துணை ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹாங்காங்கில், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான சட்டவரைவு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசின் இந்நடவடிக்கையால், அரசுக்கும், பொது மக்களுக்கும் இடையே, வன்முறைநிறைந்த பதட்டநிலைகள் அதிகரித்துவரும்வேளை, அப்பகுதியின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணப்படுமாறு, இவ்வியாழன் இரவில் ஏறத்தாழ 1,200 கத்தோலிக்கர், நகரின் முக்கிய தெருக்களில் மெழுகுதிரி ஏந்திச் சென்று, கடைசியில் அமலமரி போராலயத்தின்முன் கூடினர்.

இவ்வழிபாட்டின் இறுதியில் உரையாற்றிய ஆயர் Joseph Ha அவர்கள், கடந்த இரண்டு மாதங்களாக, ஹாங்காங் நகரம் கலவரப்பூமியாக மாறியுள்ளது, இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவதற்கு, இருதரப்புக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட வேண்டும், இதற்கு கலந்துரையாடல் அவசியம் என்று தெரிவித்தார்.

பொது மக்கள் சமுதாயத்தின் விண்ணப்பத்திற்கு  அரசு செவிமடுக்காமல் உள்ளது என்று குறை கூறிய ஆயர் Ha Chi-shing அவர்கள், எல்லா குடிமக்களும் அன்புகூரப்படும் ஒரே நகரமாக அமைந்து, அங்கு, அனைவரும் சகோதரர், சகோதரிகளாக நடத்தப்படும் நிலைக்கு, ஹாங்காங் திரும்ப வேண்டும் என்று கூறினார்.

வன்முறை மேலும் வன்முறையையும், காழ்ப்புணர்வு, மேலும் காழ்ப்புணர்வையுமே கொணரும், அநீதி ஒருபோதும் நீதியைக் கொணராது என்றுரைத்த ஆயர் Joseph Ha அவர்கள், அமைதியும், அறிவோடு புரியும் செயலுமே, நீடித்த அமைதியைக் கொணரும் என்பதை வரலாறு கற்றுக்கொடுத்துள்ளது என்பதையும் நினைவுபடுத்தினார்.

ஹாங்காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை, கத்தோலிக்க இளையோர் இயக்கம், மறைமாவட்ட மாணவர் இயக்கம், புனித பெனடிக்ட் பங்குத்தளம் ஆகியவை இணைந்து இந்த செப ஊர்வலத்தை நடத்தின. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2019, 15:39