தேடுதல்

Vatican News
இந்திய பாராளுமன்றத்தின் முடிவையடுத்து, காஷ்மீர் பெண்கள் மேற்கொண்ட தொழுகை இந்திய பாராளுமன்றத்தின் முடிவையடுத்து, காஷ்மீர் பெண்கள் மேற்கொண்ட தொழுகை 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தேவைப்படும் உரையாடல்கள்

அணு சக்தியைக் கொண்டுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளை, ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் வழியே தீர்ப்பது ஒன்றே, இரு நாடுகளுக்கும் நன்மை விளைவிக்கும் - ஆயர் பெரெய்ரா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் கடினமானச் சூழலுக்குத் தீர்வு காண, ஆக்கப்பூர்வமான உரையாடல் வழிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படவேண்டும் என்று, ஜம்மு-ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் ஆயர் ஈவான் பெரெய்ரா (Ivan Pereira) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய பாராளுமன்றம், இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை விலக்கியதையடுத்து, ஜம்மு காஷ்மீர் பகுதி தனிப்பட்ட மாநிலம் என்ற சிறப்பு நிலையை இழந்துள்ளதைக் குறித்து, ஆயர் பெரெய்ரா அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மக்களை வீதிகளுக்கு வரவழைத்துள்ளது என்றும், அதனை அடக்க, அரசு, மிகக் கடினமான நடவடிக்கைகளை, இராணுவத்தின் துணைகொண்டு எடுக்கிறது என்றும், ஆயர் பெரெய்ரா அவர்கள் கூறினார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்தே, காஷ்மீர் பள்ளத்தாக்கு குறித்த மோதல்கள் இருநாடுகளுக்கும் நிகழ்ந்துள்ளன என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய ஆயர் பெரெய்ரா அவர்கள், 1989ம் ஆண்டு முதல், மக்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில், இதுவரை, 70,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

அணு சக்தியைக் கொண்டுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளை, ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் வழியே தீர்ப்பது ஒன்றே, இரு நாடுகளுக்கும் நன்மை விளைவிக்கும் என்பதை, ஆயர் பெரெய்ரா அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

2015ம் ஆண்டு முதல் ஈவான் பெரெய்ரா அவர்கள் ஆயராகப் பணியாற்றும் ஜம்மு-ஸ்ரீநகர் மறைமாவட்டத்தில், ஏறத்தாழ 70,000 கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர் என்றும், 70 அருள்பணியாளர்கள் அங்கு பணியாற்றுகின்றனர் என்றும் வத்திக்கான் நாளிதழ் கூறுகிறது.

14 August 2019, 14:55