அசிசி நகரின் Porziuncola சிற்றாலயத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அசிசி நகரின் Porziuncola சிற்றாலயத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அசிசி நகர் திருத்தலத்தில் மன்னிப்பின் விழா

அசிசி நகரின் புனித பிரான்சிஸ் திருத்தலத்தின் ஒரு முக்கிய இடமான Porziuncola சிற்றாயலத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரு நாள்கள் மன்னிப்பின் விழா கொண்டாடப்படுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டின் எல்லைகளைக் காப்பதில் அரசுகள் கடின முயற்சிகளை மேற்கொண்டு வரும் இன்றையச் சூழலில், கருணையும், மன்னிப்பும் மிக, மிக அவசியமானத் தேவைகளாக உள்ளன என்று, அசிசி நகர் திருத்தலத்தின் கண்காணிப்பாளரான, பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Simone Ceccobao அவர்கள் கூறினார்.

அசிசி நகரின் புனித பிரான்சிஸ் திருத்தலத்தின் ஒரு முக்கிய இடமான Porziuncola சிற்றாயலத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரு நாள்கள் மன்னிப்பின் விழா கொண்டாடப்படுவதையொட்டி, அருள்பணி Ceccobao அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இவ்விரு நாட்களும், அசிசி நகர் திருத்தலத்திற்கு இலட்சக்கணக்கான திருப்பயணிகள் வருகை தருகின்றனர் என்பதை தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட அருள்பணி Ceccobao அவர்கள், இவ்வுலகில், மன்னிப்பைத் தேடும் முயற்சிகள், எப்போதும் பொருளுள்ளதாகவே இருக்கும் என்று எடுத்துரைத்தார்.

1216ம் ஆண்டு புனித பிரான்சிஸ் Porziuncola சிற்றாயலத்தில், ஆழ்ந்த செபத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், அவருக்கு முன் தோன்றிய இயேசுவும், மரியாவும், அவர் விரும்பும் வரம் என்ன என்று கேட்ட வேளையில், தங்கள் பாவங்களுக்காக உண்மையான மன வருத்தத்துடன், மன்னிப்பு தேடி, இந்த சிற்றாலயத்திற்கு ஒப்புரவு அருளடையாளம் பெற வருவோர் அனைவருக்கும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பரிபூரண பலன் தரும் அவ்வரம் வழங்கப்படுவதாகவும், அதனை, புனித பிரான்சிஸ், திருத்தந்தையிடம் கூறவேண்டும் என்றும், இக்காட்சியில் சொல்லப்பட்டதையடுத்து, திருத்தந்தை மூன்றாம் ஒனோரியுஸ் வழியே இந்த சிறப்பு வரம் கத்தோலிக்கத் திருஅவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த வரம் அறிவிக்கப்பட்ட நாளைக் கொண்டாட, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 1,2 ஆகிய நாள்களில் Porziuncola சிற்றாயலத்தில், மன்னிப்பு விழா சிறப்பிக்கப்படுகிறது.

2016ம் ஆண்டு, இந்த சிறப்பு காட்சியின் 8ம் நூற்றாண்டு நிறைவு என்பதாலும், அவ்வாண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி நடைபெற்றதாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சிற்றாலயத்திற்கு, ஆகஸ்ட் 4ம் தேதி சென்று செபித்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2019, 15:06