தேடுதல்

Vatican News
Rohingya புலம்பெயர்ந்தோர் முகாம் Rohingya புலம்பெயர்ந்தோர் முகாம்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோரின் நெருக்கடி நிலைகள் களையப்பட திருஅவை

Rohingya புலம்பெயர்ந்தோரின் நெருக்கடி நிலைகள் அகற்றப்படுவதற்கு, அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு உதவிபுரிய தயாராக உள்ளோம் - ஆசிய கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாடு புகலிடம் வழங்கியுள்ள, Rohingya புலம்பெயர்ந்தோரின் நெருக்கடி நிலைகள் அகற்றப்படுவதற்கு, அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு, தாங்கள் உதவிபுரிய தயாராக இருப்பதாக, ஆசிய கத்தோலிக்கத் தலைவர்கள், பங்களாதேஷ் அமைச்சர் ஒருவரிடம் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில், Cox Bazar முகாம்களில் வாழ்கின்ற, மியான்மார் நாட்டின் Rohingya புலம்பெயர்ந்தோரைப் பார்வையிட்டதற்குப் பின்னர், பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் Asaduzzaman Khan அவர்களைச் சந்தித்த, ஆசிய கத்தோலிக்கத் தலைவர்கள், இம்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிநிலைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், மனிலா பேராயருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரும், யாங்கூன் பேராயருமான, கர்தினால் சார்லஸ் மாங் போ, பங்களாதேஷின் டாக்கா பேராயர், கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ ஆகிய மூவரும், Cox Bazar முகாம்களில் வாழ்கின்ற, Rohingya புலம்பெயர்ந்தோரைப் பார்வையிட்டனர்.

Cox Bazar முகாம்களைப் பார்வையிட்ட பின்னர் பீதேஸ் செய்தியிடம் பேசிய கர்தினால் போ அவர்கள், பங்களாதேஷிம், மியான்மாரும், 21ம் நூற்றாண்டின் புலம்பெயர்வின் புதிய பகுதிகள் என்று கூறினார்.

இதற்கிடையே, இப்பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தது பற்றி ஊடகங்களிடம் பேசிய, பங்களாதேஷ் அமைச்சர் Asaduzzaman அவர்கள், Rohingya புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, உலக அளவில் உந்துதல் அளிக்குமாறு வலியுறுத்தியதுடன், அப்பிரச்சனையைத் தீர்க்கும் வழிகள் பற்றி, கலந்தாலோசித்ததாகவும் கூறியுள்ளார்.

மியான்மாரில், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள், சொந்த இடங்களுக்கு, இன்னும் திரும்ப வேண்டியுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மியான்மார் நாட்டினர், ஆசியா எங்கும் பணியாற்றி வருகின்றனர். (Fides)

10 August 2019, 15:52