தேடுதல்

Vatican News
தமிழக கிறிஸ்தவர்கள் போராட்டம் தமிழக கிறிஸ்தவர்கள் போராட்டம் 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை

பேராயர் அந்தோனி பாப்புசாமி - இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் தெரிவித்திருப்பது, தவறானது மற்றும், ஆதாரமற்றது என்று கூறியுள்ளார், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் அந்தோனி பாப்புசாமி.

நீதிபதி வைத்தியநாதன் அவர்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராகத் தெரிவித்துள்ள இரு கருத்துக்களும், மிகவும் வருத்தத்துக்குரியவை எனவும், நீதித்துறையில், உயர்நிலையில் உள்ள ஒருவரிடமிருந்து இக்கருத்துக்கள் வெளிவந்திருப்பது, பொதுமக்கள் முன்னிலையில், எம் நிறுவனங்களின் புகழை, கடுமையாய்ப் பாழ்படுத்துவதாகும் எனவும், மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நீதிபதியின் கருத்துக்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள, பேராயர் அந்தோனி அவர்கள், நீதிமன்ற வழக்குகள் குறித்து, திருஅவைத் தலைவர்கள், அரிதாகவே பேசுகின்றனர் என்றும், நாட்டின் தற்போதைய சூழலில், நீதிபதியின் இந்தக் கருத்துக்கள், பொதுமக்களின் எண்ணத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், நாங்கள் எமது மனநிலையை வெளிப்படுத்த விரும்புகின்றோம் என்றும் கூறியுள்ளார்.

பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் அவர்கள் மீதுள்ள வழக்கு, எந்த விதத்திலும் மத மாற்றத்தோடு தொடர்பில்லாதது என்றும், சொல்லப்பட்டுள்ள மதமாற்றம் பற்றிய கருத்து, ஆதாரமற்றது என்றும் கூறியுள்ள, பேராயர் அந்தோனி அவர்கள், இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

நீதிபதி வைத்தியநாதன் அவர்கள்

சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் அவர்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையின் முடிவில், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாக, பொதுவான கருத்து நிலவுகிறது என்றும், இந்த நிறுவனங்கள், கட்டாய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக, பல்வேறு புகார்களைச் சந்திக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், ஆண்களைப் பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைத் தடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர இதுவே சரியான தருணம் என்றும், அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். (AsiaNews)

இதற்கிடையே, நீதிபதி வைத்தியநாதன் அவர்களின் இந்தக் கருத்துக்கு, பெண்கள் அமைப்புகள் சார்பிலும், கிறிஸ்தவ நிறுவனங்கள் சார்பிலும், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தன்னுடைய கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 August 2019, 16:01