அமேசான் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட பேரணி அமேசான் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட பேரணி  

உலகின் நுரையீரல்கள் பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கை

அமேசான் பருவமழைக் காடுகள் தீப்பற்றி எரிவதால், பிரேசில், பொலிவியா, பரகுவாய் உள்ளிட்ட, பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டு அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அதேநேரம், பரகுவாய் நாட்டுப் பகுதியிலுள்ள அமேசான் மழைக்காடுகளும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன என்று, அந்நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

பிரேசில், பொலிவியா உள்ளிட்ட, பல இலத்தீன் அமெரிக்க நாடுகள், இக்காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, பரகுவாய் நாட்டின் மேற்கிலுள்ள Chaco மாநிலமும், இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று, அப்பேரவை தெரிவித்துள்ளது.   

இப்பேரிடரின் கடும் இழப்பை மறக்காமல், உலகின் நுரையீரலைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று, பரகுவாய் ஆயர் பேரவை இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, பிரேசில் மழைக்காடுகள் காப்பாற்றப்படுமாறு, பல்வேறு கத்தோலிக்க அரசு-சாரா அமைப்புகளும், பல்வேறு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும், பிரேசில் அரசுத்தலைவர் Jair Bolsonaro அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

பிரேசில் அரசுத்தலைவர் Bolsonaro அவர்களும், இந்தக் காட்டுத்தீயை அணைத்து, அங்கு வாழ்கின்ற பழங்குடி மக்களைக் காப்பாற்றுவதற்கு, இராணுவத்தை அனுப்பியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.  

அமேசான் பருவமழைக்காடுகள் தீப்பிடித்து எரிவதற்கு, 99 விழுக்காடு மனிதர்களே, குறிப்பாக, நிலங்களைப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகள், விலங்குகளை வளர்ப்பவர்கள் மற்றும் மரம் வெட்டுபவர்களே காரணம் என்று, சூழலியல் நிறுவனங்களும், ஆய்வாளர்களும் குறை கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2019, 14:04