பெரு ஆயர்கள் பெரு ஆயர்கள் 

பெரு நாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கல்வி

பெரு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில், ஆயர்களோடு ஒரு மணி நேரம் உடன்பிறப்பு உணர்வுடன் கலந்துரையாடினார், அந்நாட்டு அரசுத்தலைவர் Martín Vizcarra Cornejo

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டில் அதிகரித்துவரும் இலஞ்ச ஊழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண உதவும் நோக்கில், கத்தோலிக்கக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பெரு நாட்டில் அண்மைக்கால அரசுத்தலைவர்களில் பெரும்பாலானோர், ஊழல் வழக்கில் கைதாகியுள்ள நிலையில், இப்பாடத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆயர்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவரும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவருமான பேராயர் Miguel Cabrejos அவர்கள், பெரு ஆயர் பேரவையும், பெரு நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து, ஊழல் ஒழிப்புப் பாடத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

நாளைய பெரு நாட்டை வடிவமைக்க உள்ளவர்கள் இளையோர் என்பதை மனதில் கொண்டு, அவர்களில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்த பேராயர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இந்நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்திற்குப்பின் இத்திட்டம் குறித்த எண்ணம் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான வழிமுறைகளைப் போதிக்கும் இந்த பாடத்திட்டத்தை ஏற்கனவே தங்கள் கல்வித்திட்டத்தில் இணைக்க பெரு நாட்டின் 11 பல்கலைக்கழகங்கள் முன்வந்துள்ளன.

இதற்கிடையே, தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பெரு ஆயர் பேரவையின் கூட்டத்திற்கு, இப்புதனன்று வந்திருந்து ஒரு மணி நேரம் ஆயர்களோடு சகோதரத்துவ உணர்வுடன் உரையாடிச் சென்றார், அந்நாட்டு அரசுத்தலைவர் Martín Vizcarra Cornejo.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2019, 15:18