தேடுதல்

பிலிப்பீன்ஸ் அருங்கொடை மாநாடு பிலிப்பீன்ஸ் அருங்கொடை மாநாடு 

பிலிப்பீன்ஸ் இளையோர் விரும்பும் திருஅவை

வயதுவந்தோரின் ஒழுக்கநெறி சாட்சிய வாழ்வு, இளையோரின் வாழ்வு குறித்த கேள்விகளுக்குப் பதில்களைக் காணும் வகையில் அமைய வேண்டும் – பிலிப்பீன்ஸ் ஆயர் ஆன்ட்ரூ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவையில் இளையோர் பின்பற்றி வாழ்வதற்கேற்ற தலைவர்கள்  தேவைப்படுகின்றனர் என்று, அந்நாட்டில் நடைபெற்ற புதியவழி நற்செய்தி அறிவிப்பு (PCNE) கருத்தரங்கில் கூறப்பட்டது.

ஜூலை 21, இஞ்ஞாயிறன்று, தலைநகர் மனிலாவில் புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்த இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட ஐந்தாயிரத்திற்கு அதிகமான பிரதிநிதிகள், இளையோரின் வாழ்வில் உடனிருந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர் என்று, யூக்கா செய்தி கூறியது.

பிலிப்பீன்சில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு யூபிலி விழாவுக்கென, ஒன்பது ஆண்டு தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள தலத்திருஅவை, அத்தயாரிப்பின் ஒரு கட்டமாக, புதியவழி நற்செய்தி அறிவிப்பு கருத்தரங்கையும் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது.

புதியவழி நற்செய்தி அறிவிப்புக்கு பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை எவ்வாறு பதிலளிக்கின்றது என்பதை ஆய்வுசெய்வதற்கென, 2013ம் ஆண்டில், மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

ஆறாவது ஆண்டாக, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த இரண்டு நாள் கருத்தரங்கில், பிலிப்பீன்ஸ் இளையோரின் விசுவாச மற்றும் ஆன்மீக வாழ்வை உறுதிப்படுத்தி, வளப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

‘பிலிப்பீன்ஸ் இளையோர் இயேசுவோடு நடத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் ரெக்ஸ் ஆன்ட்ரூ அலர்கான் அவர்கள், இளையோர் தங்களின் உள்ளார்ந்த கேள்விகளுக்குப் பதில்களைக் காணும் வகையில், மூத்தவர்கள், தங்களின் ஒழுக்கநெறி சாட்சிய வாழ்வால் உதவி, எடுத்துக்காட்டாக வாழுமாறு பரிந்துரைத்தார்.  

இந்த யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்படும். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2019, 13:57