தேடுதல்

வெனெசுவாலாவில் நெருக்கடிநிலை வெனெசுவாலாவில் நெருக்கடிநிலை 

அரசுத்தலைவர் பதவி விலகி பிரச்சனைக்குத் தீர்வு காண..

வெனெசுவேலா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து தலத்திருஅவை தொடர்ந்து பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருவதையே ஐ.நா. நிறுவனமும் உறுதிசெய்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் வெனெசுவேலா நாட்டு அரசுத்தலைவர் பதவி விலகி, அந்நாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

கரகாஸ் முன்னாள் பேராயர், கர்தினால் Urosa Savino அவர்கள், வெனெசுவேலா நாட்டின் நிலைகள் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில், வெனெசுவேலா நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, அரசுத்தலைவர் Nicolás Maduro அவர்கள் பதவி விலகிக்கொள்வதன் வழியாக உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து தலத்திருஅவை தொடர்ந்து பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருவதையே, ஐ.நா. நிறுவனமும் உறுதி செய்துள்ளது என கூறினார் கர்தினால் Urosa Savino.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பற்றாக்குறையாக இருக்கும் நாட்டில், அது குறித்து அறியாதவராக அரசுத்தலைவர் மதுரோ அவர்கள் செயல்படுவது மட்டுமல்ல, மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதால், அவர் பதவி விலக வேண்டியது அவசியம் என்றார் கர்தினால் Urosa Savino.

அரசியல் கைதிகள் சிறையிலேயே இறப்பது குறித்த கவலையை வெளியிட்ட கர்தினால், அரசு அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வெனெசுவேலா திருஅவை எழுப்பிவரும் விண்ணப்பத்திற்கு, முந்தைய Hugo Chávez அரசோ, Nicolás Maduro அரசோ எவ்வித பதில்மொழியையும் வழங்கியதில்லை எனவும், குற்றம் சாட்டினார் கர்தினால் Urosa Savino.

துன்புறும் வெனெசுவாலா நாட்டு மக்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள அண்மை நாடுகளுக்கு, குறிப்பாக, பெரு நாட்டிற்கு தன் நன்றியையும் வெளியிட்டார் கர்தினால்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2019, 14:17