தேடுதல்

Vatican News
வெனெசுவேலா ஆயர்கள் வத்திக்கான் வந்திருந்தபோது வெனெசுவேலா ஆயர்கள் வத்திக்கான் வந்திருந்தபோது 

வெனெசுவேலா - துன்புறும் மக்களுக்கு ஆதரவாக திருஅவை

வெனெசுவேலாவில், பொதுநலப் பணிகள் குறைந்து, வன்முறைகளும் புலம்பெயர்வுகளும் அதிகரித்து வருவது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்து வருகின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வெனெசுவேலா அரசுத்தலைவர் நிக்கொலாஸ் மதுரோ அவர்கள் ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கடும் நெருக்கடிகளில், துன்புறும் மக்களுக்கு ஆதரவாக, தலத்திருஅவை எப்போதும் செயல்படும் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

வெனெசுவேலா ஆயர் பேரவையின் 102வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, Maracaibo பேராயரும், ஆயர் பேரவைத் தலைவருமான, பேராயர் José Luis Azuaje அவர்கள், அந்நாட்டில் நிலவும் கடும் நெருக்கடி நிலைகளுக்கு எதிரான கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

வெனெசுவேலாவில், பொதுநலப் பணிகள் குறைந்து, வன்முறைகளும் புலம்பெயர்வுகளும் அதிகரித்து வருவது, நாட்டின் நிலைமையை, குறிப்பிடத்தக்க வகையில் சீரழித்து வருகின்றன என்று, பேராயர் Luis Azuaje அவர்கள், கவலை தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கையை இழக்காமல் வாழுமாறு, குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள பேராயர் Luis Azuaje அவர்கள், குடிமக்களுக்கு, குறிப்பாக, துன்புறும் மக்களுக்கு ஆதரவாக, திருஅவை எப்போதும் செயல்படும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜூலை 12, இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், வெனெசுவேலா நாடு பற்றி, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் Michelle Bachelet அவர்கள், இம்மாதம் 4ம் தேதி வெளியிட்ட அறிக்கை பற்றி, ஆயர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறியது.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்குரிய கருவிகள் மற்றும், மருந்துகள் பற்றாக்குறைவால்,  2018ம் ஆண்டு நவம்பர் முதல், 2019ம் ஆண்டு பிப்ரவரி முடிய, 1,557 பேர் உயிர்துறந்துள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. பூர்வீக மக்களின் உரிமைகள் மீறப்படுவது, குற்றக்கும்பல்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களால் அம்மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் போன்றவை குறித்தும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)

12 July 2019, 15:06