தேடுதல்

வெனெசுவேலா நாட்டிற்காக செபிக்கும்படி திருத்தந்தையிடம் வேண்டும் பதாகை வெனெசுவேலா நாட்டிற்காக செபிக்கும்படி திருத்தந்தையிடம் வேண்டும் பதாகை 

வெனெசுவேலாவிற்கு திருத்தந்தை அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி

வெனெசுவேலா, திறமையற்றவரால் ஆளப்பட்டு வருகிறது என்றும், நாடு எதிர்நோக்கும் கடும் பிரச்சனைகளுக்கு, நாட்டு மக்களே, உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவுடன், தீர்வு காண வேண்டும் என்றும், பேராயர் Azuaje Ayala அவர்கள் கூறினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கடும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வெனெசுவேலா நாட்டு மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் தோழமையுணர்வுக்கு, அந்நாட்டு ஆயர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடுமையாய்த் துன்புறும் வெனெசுவேலா மக்களுடன், தான் மிகநெருக்கமாக இருப்பதாக, ஜூலை 14 இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்ததையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Jose Luis Azuaje Ayala அவர்கள், வெனெசுவேலா மக்களுக்கு, திருத்தந்தை அளித்துவரும் ஆதரவுக்கு, ஆயர்கள் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். 

அரசுத்தலைவர் நிக்கொலாஸ் மதுரா அவர்கள் நடத்தும் சட்டத்திற்கு முரணான மற்றும், முறையற்ற ஆட்சி, அறுபது இலட்சம் மக்களை, அவசரகால மனிதாபிமான தேவைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது என்று கவலை தெரிவித்தார், Maracaibo பேராயர் Azuaje Ayala.

வெனெசுவேலா, திறமையற்றவரால் ஆளப்பட்டு வருகிறது என்று குறை கூறிய பேராயர் Azuaje Ayala அவர்கள், நாடு எதிர்நோக்கும் கடும் பிரச்சனைகளுக்கு, நாட்டு மக்களே, உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவுடன், தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

மதுரா அவர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் மனிதாபிமான உதவிகளுக்கு, கடந்த ஏப்ரலில், அனுமதியளித்திருக்கின்றபோதிலும், இந்த உதவி, மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற இயலாது என்றும் கூறினார், பேராயர் Azuaje Ayala.

வெனெசுவேலாவில் நடைபெற்ற தேர்தல்கள், சட்டத்திற்குப் புறம்பாகவும், விதிமுறைகள் முழுவதும் மீறப்பட்டும் இடம்பெற்றன என்பதால், நாட்டில் அரசியல் மாற்றம் தேவை என ஆயர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்று கூறிய பேராயர் Azuaje Ayala அவர்கள், அரசுத்தலைவர் மதுரா அவர்கள், பதவி விலகுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, வெனெசுவேலாவில் அரசியல் அளவில் கலந்துரையாடல்கள் இடம்பெறுமாறு  இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, அந்நாட்டினருக்காகச் செபிப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2019, 15:19