"சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்" என்ற வழிகாட்டி நூல் "சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்" என்ற வழிகாட்டி நூல் 

"சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்" - வழிகாட்டி நூல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் "சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்" என்ற வழிகாட்டி நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள அனைத்து பங்குத்தளங்கள், மற்றும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில், "சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில், வழிகாட்டி நூல் ஒன்றை, அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்திலும், இஸ்பானிய மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று அவர்களை சந்திக்கும் வழிமுறைகளை சொல்லித்தரும் பயிற்சிப் பாசறைகளைத் தொகுத்து வழங்கியுள்ளது.

ஐந்து வாரங்கள் நீடிக்கும் இந்தப் பயிற்சிப் பாசறைகள், சிறு சிறு குழுக்களில் துவங்கி, பங்கு சமுதாயம் வரை, கத்தோலிக்கர்கள், சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கூறியுள்ளது.

அமெரிக்க ஆயர் பேரவையின் இஸ்பானிய விவகாரங்கள் பணிக்குழுவின் மேற்பார்வையில், இஸ்பானிய Encuentro அமைப்பைச் சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள இந்த வழிகாட்டி நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

காணுதல், முடிவெடுத்தல், செயல்படுதல், கொண்டாடுதல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள், இந்த வழிகாட்டி நூலில் பின்பற்றப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2019, 14:52