புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான போராட்டங்கள் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான போராட்டங்கள் 

அமெரிக்க எல்லைப்புற தடுப்பு முகாம்கள் பற்றி கவலை

புலம்பெயரும் சிறார், மனிதமற்ற முறையில் நடத்தப்படுவதும், தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவதும், உலகளாவிய சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் சமுதாய வளர்ச்சியை நாடுகளில் ஊக்குவிப்பதால் மட்டுமே, அந்த நாடுகளைவிட்டு மக்கள் வெளியேறாமல் இருப்பதற்கு அமைக்கப்படும் ஒரே தடுப்புச் சுவர் என்று, மெக்சிகோ உயர்மறைமாவட்டம், ஜூலை 07, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களோடு ஒப்பிடுகையில்,  இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், மெக்சிகோ வந்துள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, ஏற்கனவே 232 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும், ஏறத்தாழ 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் ஆவணங்களின்றி, மெக்சிகோ நாட்டிற்கு வந்துள்ளனர் அல்லது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் ஏற்கனவே நுழைந்துள்ளனர் என்று, மெக்சிகோ தேசிய புலம்பெயர்ந்தோர் அலுவலகம் கணித்துள்ளது.

இதையொட்டி, "Desde la fe" வார இதழில் தலையங்கம் எழுதியுள்ள மெக்சிகோ உயர்மறைமாவட்டம்,  மெக்சிகோவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், புலம்பெயர்ந்தோர் அமைப்பு தோல்வியாகவே உள்ளது எனச் சொல்லி, புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகள் களையப்படுவதற்கு யுக்திகளையும் வெளியிட்டுள்ளது.

குடிமக்கள், புலம்பெயரக் காரணமாகும் நாடுகளின் பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் சமுதாய வளர்ச்சியால் மட்டுமே, புலம்பெயர்ந்தோருக்குத் தடுப்புச் சுவர் எழுப்ப முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளது, மெக்சிகோ உயர்மறைமாவட்டம். (Fides)

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் வைக்கப்பட்டுள்ள நிலை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று இத்திங்களன்று கூறியுள்ள, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet அவர்கள், புலம்பெயரும் சிறார், புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் வைக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயரும் சிறார், தங்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள Bachelet அவர்கள், சிறார் போதுமான நலவாழ்வு வசதிகளோ, உணவோ இன்றி, மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தில் தரையில் உறங்கும் நிலைக்கு உட்படுவது மிகவும் கவலை தருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயரும் சிறார், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதும், தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவதும், உலகளாவிய சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன எனவும், ஐ.நா. அதிகாரி Michelle Bachelet அவர்கள் கூறியுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2019, 15:11