திருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தை ஆறாம் பவுல்  

புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் - உகாண்டா அரசின் பாராட்டு

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் உகாண்டா நாட்டிற்காக மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள், அந்நாட்டில் கத்தோலிக்க திருமறை இன்னும் ஆழமாக வேரூன்ற உதவியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர்களின் கூட்டமைப்பான SECAM உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டம் உகண்டா நாட்டில் நிகழ்ந்தவேளையில், உகாண்டா பாராளுமன்றம், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்கு சிறப்பான மரியாதை வழங்கியது.

1964ம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்த வேளையில், உகாண்டா நாட்டின் 22 மறைசாட்சிகளை புனிதர்கள் என்று அறிவித்த புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டு உகாண்டா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், இப்புனிதர்களின் பெயரால் உருவாக்கப்பட்டிருந்த திருத்தலத்தையும் பார்வையிட்டார்.

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் மேற்கொண்ட இந்த சிறப்பு முயற்சிகள், உகாண்டா நாட்டில் கத்தோலிக்க திருமறை இன்னும் ஆழமாக வேரூன்ற உதவியது என்றும், திருத்தந்தையால் புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களின் பெயரால், உகாண்டாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3ம் தேதி மறைசாட்சிகளின் நாள் என்ற அரசு விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டது என்றும், உகாண்டா பாராளு மன்றத்தில் அண்மையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

மேலும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உகாண்டாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், 1969ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர்களின் கூட்டமைப்பான SECAM உருவாக வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SECAM அமைப்பு உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, இவ்வமைப்பைச் சேர்ந்த ஆயர்கள், ஜூலை 20 முதல் 29 கடந்த திங்கள் முடிய உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில், "திருஅவை-ஆப்ரிக்காவில் இறைவனின் குடும்பம், உங்கள் யூபிலியைக் கொண்டாடுங்கள், இயேசு கிறிஸ்துவை உங்கள் மீட்பர் என்று பறைசாற்றுங்கள்" என்ற மையக்கருத்துடன் தங்கள் பொன்விழாவைக் கொண்டாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2019, 15:20