தேடுதல்

சிரியாவில் கிறிஸ்தவர்கள் சிரியாவில் கிறிஸ்தவர்கள் 

கிறிஸ்தவர்களின் பிறரன்புப் பணிகளும், இஸ்லாமியரும்

போர் என்ன என்பதையும், மரணம் தரும் அச்சத்தையும் உணராதவர்கள் என்று சிரியாவில் எவரும் இல்லை என்று சொல்கிறார், கத்தோலிக்க அருள்பணியாளர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த எட்டு ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டோடு ஒப்பிடும்போது பாதிக்கும் கீழாகக் குறைந்துள்ளதாக அப்பகுதியின் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து, Zenit செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, தமாஸ்கஸ் புனித பவுல் நினைவகத் தலைவர், கப்புச்சின் துறவு சபை அருள்பணி Raimond Girgis அவர்கள், போர் என்ன என்பதையும், மரணம் தரும் அச்சத்தையும் உணராதவர்கள், அங்கு எவரும் இல்லை, அதனை தானும் அனுபவித்துள்ளேன்' எனக் கூறினார்.

தான் பணியாற்றும் ஆலயம், ஐந்து முறைகள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், எட்டு ஆண்டு போர்களின் நடுவிலும் பொறுமையுடன் பணிபுரியும் கிறிஸ்தவர்களைக் கண்டு இஸ்லாமியர்கள் ஆச்சரியமடைந்து பாராட்டுவதாகவும் கூறினார், அருள்பணி Raimond.

புனித பவுல், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய சவுலாக இருந்தபோது, தமாஸ்கசில் குதிரையிலிருந்து விழுந்து மனம்மாறக் காரணமான இடத்தில் கட்டப்பட்ட நினைவகத்திலிருந்து பணியாற்றும் அருள்பணி ரெய்மண்ட் அவர்கள் உரைக்கையில், தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு வெளி நாடுகளின் உதவி தேவைப்படுகின்றது என்றார்.

உள்நாட்டு மோதல்களின் மத்தியில் கிறிஸ்தவர்களின் பிறரன்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், கிறிஸ்தவர்கள் என்றால் யார் என, சிரியா இஸ்லாமியர்கள் தற்போது உணர்ந்து வருவதாகவும் கூறினார், கப்புச்சின் துறவு சபை அருள்பணி ரெய்மண்ட். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2019, 15:06