பேய் பிடித்திருந்தவர் தாமும் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். - மாற்கு 5:18 பேய் பிடித்திருந்தவர் தாமும் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். - மாற்கு 5:18 

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 7

பேய்களிலிருந்து விடுதலை பெற்றவர், இயேசுவோடு இருக்கவேண்டும் என்று விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தன்னை குணமாக்கியவர் அகன்றுபோனால், தீயஆவிகள் மீண்டும் வந்துவிடும் என்று அவர் அஞ்சினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 7

கெரசேனர் பகுதியில், தீய ஆவிகளால் வதைக்கப்பட்ட ஒருவரை, இயேசு குணமாக்கும் புதுமையில், கடந்த ஆறு வாரங்களாகப் பயணித்து வருகிறோம். இத்தேடல்களில், நாம் சிந்தித்தவை, பெரும்பாலும் மனதைப் பாரமாக்கிய எதிர்மறை எண்ணங்களாகவே இருந்துள்ளன. இத்தகைய எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளியேறி, இப்புதுமையின் இறுதிப்பகுதியில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை தரும் சொற்களை இந்த வாரம் சிந்திப்போம் என்று, சென்ற தேடலை நிறைவு செய்தோம். ஆனால், சென்ற வாரம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டு அரசுத்தலைவருக்கு அனுப்பிய ஒரு மடல், நம்மை, மீண்டும், இந்தப் புதுமையையும், சிரியா போன்று பல நாடுகளில், நிலவும் போர்ச் சூழலையும் ஒப்பிட்டுச் சிந்திக்க நம்மை அழைக்கிறது.

ஜூலை 22, கடந்த வாரம் திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டின் அரசுத்தலைவர், பஷார் அல்-அசாத் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியிருந்தார். சிரியாவில் போரிடும் இரு தரப்பினருக்கிடையே, இத்லிப் (Idlib) என்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் 30 இலட்சம் மக்களை மனதில் கொண்டு, திருத்தந்தை, தன் விண்ணப்பத்தை விடுத்திருந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், 2011ம் ஆண்டு, சிரியாவின் உள்நாட்டுப் போர் துவங்கியது. அப்போர் ஆரம்பித்த ஒரு சில நாட்களில், (மார்ச் 29, 2011) National Catholic Reporter என்ற இணையத்தள செய்தித்தாளில், "Expelling the demons of war" அதாவது, "போரின் பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், எழுத்தாளரும், அருள் பணியாளருமான John Dear என்பவர் பகிர்ந்த கருத்துக்கள், நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன. பாலஸ்தீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், Ched Myers என்ற விவிலிய அறிஞர் வழங்கிய ஓர் உரையிலிருந்து, அருள்பணி ஜான் டியர் அவர்கள், பல கருத்துக்களை, தன் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார்.

தீய ஆவிகளால் வதைக்கப்பட்ட மனிதரை இயேசு குணமாக்கிய புதுமையையும், போரில் ஈடுபடும் பல வல்லரசு நாடுகளையும் இணைத்து, Myers அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலின் தலைப்பு: “Binding the Strong Man: A Political Reading of Mark’s Story of Jesus” "சக்திவாய்ந்த மனிதரைக் கட்டிப்போடுதல்: மாற்கு கூறும் இயேசுவின் கதையை அரசியல் கண்ணோட்டத்துடன் வாசித்தல்".

போர் ஒருபோதும் தீர்வு ஆகாது என்று தன் கட்டுரையைத் துவக்கும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், தொடர்ந்து, அரசுகள், குறிப்பாக, வல்லரசுகள் கொண்டுள்ள போர் வெறியைக் குறித்துப் பேசுவது, நமக்கு வேதனையைத் தருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, நலவாழ்வு, வீடற்றோருக்கு குடியிருப்பு, அனைவருக்கும், நீரும், உணவும் கிடைக்கும் வழிகள் ஆகிய திட்டங்கள் குறித்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விவாதங்கள் எழும்போது, இத்திட்டங்களுக்குத் தேவையான அளவு நிதி இல்லை என்று தட்டிக்கழிக்கும் அரசுகள், போருக்கு மட்டும் கோடி, கோடியாய் பணத்தைக் கொட்டிக் குவிக்கின்றன என்ற கூற்றுடன் தன் கட்டுரையை ஆரம்பிக்கும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், Ched Myers அவர்களின் நூலிலிருந்து ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

தீய ஆவி அல்லது, ஆவிகள் பிடித்த ஒரு மனிதரை இயேசு குணமாக்கினார் என்று கருத்து மட்டுமே இப்புதுமையில் பொதுவாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தீய ஆவிகளை இயேசு விரட்டியபோது, உரோமைய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் செயல்பட்டார் என்ற கண்ணோட்டத்திலும், பேய் விரட்டும் புதுமைகளை நாம் பொருள்கொள்ள முடியும் என்று Myers அவர்கள் கூறியுள்ளார்.

தனி மனிதரின் ஒப்புதல் இன்றி, அவரை ஆக்கிரமிக்கும் தீய ஆவியை, அல்லது, ஆவிகளை, இயேசு விரட்டும்போதெல்லாம், ஒரு சமுதாயத்தின் சம்மதம் இன்றி, அவர்கள் வாழும் பகுதியை, அன்னிய நாட்டின் இராணுவம் ஆக்கிரமித்துள்ள அநீதியையும் இயேசு விரட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இப்புதுமையில், அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள், பன்றிகளில் புகுந்ததால், அவை கடலில் மூழ்கிய நிகழ்வு, இஸ்ரயேல் மக்களைத் துரத்தியவண்ணம் செங்கடலுக்குள் நுழைந்த எகிப்தியப் படைவீரர்கள், செங்கடலில் மூழ்கி இறந்ததையும் நினைவுறுத்துகிறது என்று, Myers அவர்கள் கூறியுள்ளார்.

இப்புதுமையின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள நம்பிக்கை வரிகளில் நம் தேடலைத் துவக்குவோம்:

மாற்கு 5:18-20

இயேசு படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

பொதுவாக, இயேசுவால் குணம்பெற்றவர்கள், தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்தனரே தவிர, இயேசுவைப் பின்தொடரவில்லை என்பதை, நற்செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தப் புதுமையில் மட்டுமே, குணம்பெற்றவர், இயேசுவுடன் வாழ விழைவதாகக் கூறுகிறார். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளாத இயேசு, அதற்கு மாறாக, குணமடைந்தவரை, தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பறைசாற்றும் பணியாளராக மாற பணிக்கிறார்.

மதுப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஆகிய தீமைகளிலிருந்து விடுதலை பெற்ற ஒருசிலர், அதேப் பழக்கங்களில் சிக்கிய மற்றவர்களுக்கு தங்கள் விடுதலையைப்பற்றி எடுத்துச்சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதை, தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும், கெரசேனர் கல்லறை மனிதர், ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

விடுதலை பெற்ற மனிதர், இயேசுவோடு இருக்கவிழைவதையும், அந்த விண்ணப்பத்தை இயேசு மறுப்பதையும் காணும்போது, உள்ளத்தில் நெருடல் ஏற்படுகின்றது. இந்த நெருடலைப் போக்க, இப்புதுமையில் இடம்பெறும் மூன்று விண்ணப்பங்களை புரிந்துகொள்ள முயல்வோம்.

அம்மனிதரில் குடிகொண்டிருந்த தீய ஆவிகளை, இயேசு விரட்டியபோது, அவை, "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று... இயேசுவை வேண்டின (மாற்கு 5:12). இது முதல் விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றினார்.

இயேசுவைச் சந்திக்க வந்த ஊர்மக்கள், பேய்பிடித்தவர் நலமடைந்து, ஆடையணிந்து, இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றனர். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். (மாற்கு 5:17) இது இரண்டாவது விண்ணப்பம். மக்கள் விடுத்த இந்த விண்ணப்பத்திற்கிணங்கி, இயேசு படகில் ஏறியதும், மூன்றாவது விண்ணப்பம் இடம் பெறுகிறது. அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார் (மாற்கு 5:18).

இந்த மூன்று விண்ணப்பங்களில், மூன்றாவது விண்ணப்பம், இயேசுவின் உள்ளத்தைத் தொட்டிருக்கவேண்டும்; அந்த விண்ணப்பத்தை அவர் நிறைவேற்றியிருக்கவேண்டும் என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறது. இயேசுவோ, கடினமான முதல் இரு விண்ணப்பங்களை நிறைவேற்றினார்; ஆனால், எளிதான, மனதுக்கு இதமான, மூன்றாவது விண்ணப்பத்தை மறுத்தார்.

விவிலிய விரிவுரையாளர்களில் ஒருவரான Alexander Maclaren அவர்கள், A Refused Bequest, அதாவது, 'மறுக்கப்பட்ட விண்ணப்பம்' என்ற தலைப்பில், இந்நிகழ்வைக் குறித்து வழங்கும் எண்ணங்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:

பேய்களிலிருந்து விடுதலை பெற்றவர், தன்னைக் குணப்படுத்திய இயேசுவோடு இருக்கவேண்டும் என்று விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர், புறவினத்தார் வாழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அதுவரை அவர் அறிந்திராத இயேசுவை அறிந்துகொண்டபின், அந்த அற்புத வாய்ப்பை, இழக்க விரும்பவில்லை. தன்னை குணமாக்கியவர் அகன்றுபோனால், தன்னிடமிருந்து வெளியேறிய தீயஆவிகள் மீண்டும் வந்துவிடும் என்று அவர் அஞ்சினார்.

இவ்வாறு, அம்மனிதர் எழுப்பிய மூன்றாவது விண்ணப்பத்திற்குக் காரணம் கூறும் Maclaren அவர்கள், அம்மனிதருக்கு எழுந்த அச்சத்தை, மனிதவாழ்வில் பொதுவாக நிகழும் சில அனுபவங்களுடன் பொருத்திப் பேசுகிறார்:

வழி தெரியாமல் தவிக்கும் ஒருவர், தன்னை அழைத்துச்செல்லும் வழிகாட்டியின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதைப்போல்... ஆபத்துக்கள் சூழும் நேரத்தில், தன் பெற்றோரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொள்ளும் குழந்தையைப்போல்... ஓர் அறுவைச் சிகிச்சை வழியே, அல்லது, குறிப்பிட்ட மருந்துகள் வழியே தனக்கு நலம் வழங்கிய மருத்துவர், தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்பும் நோயாளியைப்போல்... தீய ஆவிகளிடமிருந்து விடுதலை பெற்றவர், இயேசுவோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார் என்று Maclaren அவர்கள் கூறியுள்ளார்.

தன்னை நலமடையச் செய்த இயேசுவுடன் வாழ விரும்பிய மனிதரின் விண்ணப்பத்தை இயேசு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக அவருக்கு இயேசு வழங்கிய ஒரு பணியையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 14:24