இயேசு தீய ஆவி பிடித்தவரிடம் “உம் பெயர் என்ன?” என்று கேட்க, அவர், “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொன்னார் இயேசு தீய ஆவி பிடித்தவரிடம் “உம் பெயர் என்ன?” என்று கேட்க, அவர், “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொன்னார் 

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 4

6000 பேர் ஒரு மனிதரில், ஒரு மனதில் குடிகொள்ள முடியுமா? முடியும். நாம் பிறக்கும்போது தனித்தனி மனிதராகப் பிறந்தாலும், வளரும்போது, அவரைப்போல, இவரைப்போல என்று, எத்தனை பேராக மாறத் துடிக்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 4

கெரசேனர் பகுதியில் இயேசு காலடி வைத்ததும், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர், அவரைச் சந்திக்க வந்தார் என்று, நற்செய்தியாளர்கள், மாற்கும், லூக்காவும் குறிப்பிடுகின்றனர். கெரசேனர் என்றழைக்கப்பட்ட அப்பகுதி, புறவினத்தார் வாழ்ந்த பகுதி. எனவே, அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு, இயேசு அறிமுகமானவர் அல்ல. ஆனால், அப்பகுதியில் வாழ்ந்த தீய ஆவி, இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு, அவரைச் சந்திக்க வந்தது.

தீய ஆவி, அல்லது தீய சக்தி, பல்வேறு வேடங்களில் வலம்வரும்போது, அவற்றை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், அவை விரிக்கும் வலையில் நாம் வீழ்கிறோம். அதேவேளையில், தீய ஆவிகளோ, அவைகளுக்கு எதிராக எழும் நல்ல சக்திகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு, அச்சக்திகளை அடக்குவதற்கு எழுகின்றன. இத்தகைய ஒரு சூழல், இப்புதுமையில் இடம்பெறுகிறது. தீய ஆவிக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பை, நற்செய்தியாளர் மாற்கு, பின்வரும் வரிகளில் சித்திரிக்கிறார்:

மாற்கு 5: 6-10

தீய ஆவி பிடித்தவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்கவேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.

தீய ஆவிக்கும் இயேசுவுக்குமிடையே நிகழ்ந்த இச்சந்திப்பு, பல கோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தீய ஆவி, இயேசுவைக் கண்டதும், அவரை நோக்கி ஓடிவந்து, பணிந்து நின்றது என்பதை வாசிக்கும்போது, நம் எண்ணங்கள், இயேசு, அலகையால் சோதிக்கப்பட்ட அந்தக் காட்சிக்கு செல்கின்றன. அங்கு, அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச்சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், "நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது. (மத்தேயு 4:8; காண்க. லூக்கா 4:5-7).

இயேசு, நாற்பது நாள்களாய் மேற்கொண்ட கடினமான தவ முயற்சிகளால் தளர்ந்திருந்தார், தனித்திருந்தார் என்பதை அறிந்த அலகை, தன்னை வலிமைமிக்கதாய் விளம்பரப்படுத்தி, தன்னை வணங்கும்படி இயேசுவைத் தூண்டியது. இங்கோ, இயேசு, தீய ஆவியின் மீது முழு அதிகாரம் செலுத்தி, அதனை விரட்ட முயன்றபோது, அது, இயேசுவுக்கு முன் பணிந்து போவதுபோல் நடிக்கிறது.

தீய ஆவி பிடித்தவர், இயேசுவை நெருங்கியதும் எழுப்பும் கேள்வி, நம் கவனத்தை ஈர்க்கிறது. “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை?” (மாற்கு 5:7) என்ற கேள்வியின் வழியே, இயேசுவுக்கு, அப்பகுதியிலோ, அந்த மனிதரிடமோ வேலை எதுவும் இல்லை என்பதையும், அம்மனிதர் தன் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளார் என்பதையும், தீய ஆவி தெளிவுபடுத்துகிறது. மாற்கு நற்செய்தி முதல் பிரிவில் இயேசு தொழுகைக்கூடத்தில், தீய ஆவி பிடித்த ஒருவரைக் குணமாக்க முயன்றபோதும், இத்தகைய ஒரு கேள்வியை தீய ஆவி எழுப்பியதைக் காணலாம்: அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை?" என்று கத்தியது. (மாற்கு 1:24) என வாசிக்கிறோம்.

தீய ஆவியின் கேள்வியையும், அலறல்களையும் பொருட்படுத்தாமல், இயேசு, தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த அம்மனிதரின் பெயரைத் தெரிந்துகொள்ள விழைகிறார். "உம் பெயர் என்ன?" (மாற்கு 5:9) என்று இயேசு கேட்கும் கேள்வியை இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

ஒருவர் மற்றவருக்கு பெயர் வழங்குதல், அல்லது, அவரது பெயரைத் தெரிந்துகொள்ளுதல் ஆகிய செயல்கள் வழியே, அம்மனிதர் மீது ஒருவர் கொண்டிருக்கும் சக்தி அல்லது தாக்கம் கூடுதலாக இருக்கும் என்பது, யூத சமுதாயத்தில் நிலவிவந்த கருத்து. தன்னை சந்திக்கவந்த மனிதர் மீது இன்னும் கூடுதல் அதிகாரம் கொள்வதற்காக, இயேசு அம்மனிதரின் பெயரைத் தெரிந்துகொள்ள விழைகிறார்.

"உம் பெயர் என்ன?" என்று இயேசு கேட்ட கேள்வியை, மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். அதாவது, அம்மனிதர் தன் சுய அடையாளத்தை இழந்துவிட்டதால், அவரை, மீண்டும், அவரது இயல்பு நிலைக்குக் கொணர்வதற்காக, இயேசு, இக்கேள்வியை, அவரிடம் கனிவுடன் கேட்டார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.

இயேசுவின் இக்கேள்விக்கு, “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று அம்மனிதர் பதிலளித்தார். ‘இலேகியோன்’ என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு – என்ற குறிப்பு, நற்செய்திகளில் இணைக்கப்பட்டுள்ளது.

‘இலேகியோன்’ எனப்படும் முழுமையான உரோமையப் படைப்பிரிவில், 6,826, அல்லது, 6666 ஆண்கள் இருந்தனர் என்று, சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். படைப்பிரிவைக் குறித்து இயேசு கெத்சமனி தோட்டத்தில் பேசுவதை நாம் மத்தேயு நற்செய்தியில் வாசிக்கிறோம். கெத்சமனி தோட்டத்தில் உரோமைய வீரர்களால் பிடிப்பட்டபோது, இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு... நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே" என்றார். (மத்தேயு 26:51-54)

6000 பேர் ஒரு மனிதரில், ஒரு மனதில் குடிகொள்ள முடியுமா? முடியும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது தனித்தனி மனிதராகப் பிறக்கிறோம். ஆனால், வளரும்போது, அவரைப்போல, இவரைப்போல என்று, எத்தனை பேராக மாறத் துடிக்கிறோம். நம் குடும்பத்தில், அல்லது, பள்ளியில், அடுத்தவரோடு நம்மை ஒப்புமைப் படுத்தி, “அவனப்பாரு, அவளப்பாரு... நீயும் இருக்கியே” என்று குற்றப் பத்திரிக்கைகள் வாசிக்கப்படும்போது, அவனாக, அவளாக மாற விரும்புகிறோம். இல்லையா?

பலர் வளரும்போது, அவர்களது பெயர்களே மறைந்து, மறந்துபோகும் அளவு, மற்ற கீழ்த்தரமான பெயர்களால், அடைமொழிகளால் அழைக்கப்படுகின்றனர். இப்படி வளரும் ஒரு குழந்தை, தன் சொந்த உருவை, தன் சொந்த பெயரை, தன் சொந்த இயல்பை புதைத்துவிட்டு மற்ற முகமூடிகளை அணிந்துகொள்ள முற்படுகிறது. இந்த முகமூடிகளே, அக்குழந்தையின் அடையாளங்களாக மாறும்போது, அவராக, இவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடன் ஆரம்பித்து, ஆயிரமாயிரம் அடையாளங்களைத் தாங்கி வாழ அக்குழந்தை கற்றுக்கொள்கிறது. ஒரு வேளை, இப்புதுமையில் நாம் சந்திக்கும் இம்மனிதரும், அப்படி பலராக வாழப்பழகி, அதுவே, அவரது வாழ்வாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தன் சுய அடையாளத்தை இழந்துவிட்டு, அல்லது, மறைத்துவிட்டு, பலராக வாழ்வதை, மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால், Split Personaltiy, அல்லது Multiple personality Disorder என்று அழைப்பர்.

பேய் பிடிப்பது, அல்லது தீய ஆவியால் ஆட்கொள்ளப்படுவது, ஒரு நாளில் நிகழும் கொடுமை அல்ல, அது, பல ஆண்டுகளாக மெல்ல, மெல்ல நமக்குள் ஏற்படும் நோய் என்று சென்ற வாரத் தேடலில் குறிப்பிட்டோம். அதே வண்ணம் Multiple personality Disorder என்ற நிலையும், சிறிது, சிறிதாக உருவாகும் ஒரு நோய். 2008ம் ஆண்டு Tim Melton என்பவர், கெரசேனர் மனிதரை மையப்படுத்தி Crazy Bill: The Gerasene Demoniac Revisited என்ற தலைப்பில் ஓர் அழகிய கவிதை எழுதினார். நாம் எவ்வாறு மற்றவர்கள் நம்மீது சுமத்தும் அடையாளங்களால், கேலியான பட்டங்களால், நம் சொந்த அடையாளங்களை இழந்து போகிறோம் என்பதை, இக்கவிதை விவரிக்கிறது:

அப்போது என் பெயர் வில்லியம்.

நான் மதியுள்ளவர்கள் நடுவில் வாழ்ந்து வந்தேன்.

ஆனால், என் அயலவர்கள் - சுத்தமான உடையணிந்தவர்கள்

என்னை 'பைத்தியம் பிடித்த பில்' என்றழைக்கத் துவங்கினர்.

அவர்களில் பலர், பல்வேறு பெயர்களைச் சூட்டினர்.

'கடவுளாலும், மனிதராலும் சபிக்கப்பட்டவன்'

'தந்தையால் சபிக்கப்பட்டவன்', 'அன்னையால் வெறுக்கப்பட்டவன்'

'இயற்கை உருவாக்கிய தவறு' 'அணைந்துபோன அன்பு'...

இந்தப் பட்டங்கள் எல்லாம் எனக்குள் நுழைந்தன

அவர்களது ஒன்று சேர்ந்த குரல்களால்,

நான் 'இலேகியோன்'ஆக மாறினேன்.

6000 பேரை தன் உடலிலும், மனதிலும் தாங்கி போராடிவந்த ஒருவரை, இயேசு குணமாக்குகிறார். படையாக வந்த தீய சக்திகள் சாதாரணமாகப் போகவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் பன்றிகளை அழித்துவிட்டுச் சென்றன. அந்த மனிதருக்குக் கிடைத்த விடுதலையையும், அதனால் இயேசுவுக்கு எழுந்த எதிர்ப்பையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2019, 15:11