அமேசான் பகுதி அமேசான் பகுதி 

அமேசான் பகுதியை அரவணைத்துக் காப்பது நம் கடமை

பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்காக, குறிப்பாக, அங்கு மிகவும் வதைக்கப்பட்டு வரும் பெண்களின் உரிமைகளுக்காக, REPAM என்றழைக்கப்படும் அனைத்து அமசோனிய திருஅவை கூட்டமைப்பின் உதவியுடன், இயேசு சபையினர் போராடி வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகின் நுரையீரலான அமேசான் பகுதி, அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதால், அதனை, கவனமாக அரவணைத்துக் காப்பது நம் கடமை என்ற மையக்கருத்துடன் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பணியாற்றும் இயேசு சபை துறவிகள், கருத்துப் பரப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்தக் கருத்துப் பரப்பு முயற்சியின் முதல் கட்டமாக, பெரு நாட்டின் லீமாவில் இயங்கிவரும் Antonio Ruiz de Montoya பல்கலைக் கழகத்தில், இலத்தீன் அமெரிக்க இயேசு சபையினர் கூட்டமைப்பின் தலைவர், அருள்பணி Roberto Jaramillo அவர்கள் தலைமையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

“Dejate Abrazar” அதாவது, 'உன்னையே நீ அணைத்துக்கொள்வாயாக' என்ற கருத்துடன் நடைபெறும் இந்த கருத்துப் பரப்பு முயற்சியில், பிரேசில், கொலம்பியா, வெனிசுவேலா, பெரு, பொலிவியா, பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளின் இயேசு சபைத் துறவிகள் பங்கேற்று வருகின்றனர்.

சமுதாய, கலாச்சார, மற்றும் கல்வித் துறைகளில் அமேசான் பகுதியைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் Dejate Abrazar என்ற தலைப்பில் ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று Zenit செய்தி கூறுகிறது.

அமேசான் பகுதியில் நிகழ்வது, இயற்கைக்கு எதிரான கொடுமை மட்டுமல்ல, அது, மனிதர்களுக்கு, குறிப்பாக, பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை என்பதை இளையோர் உணரவேண்டும் என்று, அண்மையில் நடந்த கருத்தரங்கில்  வலியுறுத்தப்பட்டது.

அமேசான் பகுதியை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு ஒரு தகுந்த தயாரிப்பாக, இந்த பிரச்னையை நோக்கி, இளையோரின் கவனத்தைத் திருப்புவது முக்கியம் என்று இக்கருத்துப் பரப்பு முயற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்காக, குறிப்பாக, அங்கு மிகவும் வதைக்கப்பட்டு வரும் பெண்களின் உரிமைகளுக்காக, REPAM என்றழைக்கப்படும் அனைத்து அமசோனிய திருஅவை கூட்டமைப்பின் உதவியுடன், இயேசு சபையினர் போராடி வருகின்றனர் என்று Zenit செய்தி கூறியுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2019, 14:56