தேடுதல்

Vatican News
தொல்லை கொடுக்கும் அடுத்தவீட்டுக்காரர் - William Hunt ஓவியம் தொல்லை கொடுக்கும் அடுத்தவீட்டுக்காரர் - William Hunt ஓவியம் 

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நேரம், காலம் கருதாமல், மனம் தளராமல், உங்கள் முழு வலிமையோடு இடைவிடாமல் செபியுங்கள் என்பதே, நள்ளிரவில் வந்த நண்பர் என்ற உவமை வழியே இயேசு சொல்லவந்த கருத்து.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

"இறைவனை அடைவதற்கு நான் என்ன முயற்சிகள் செய்யவேண்டும்?" என்று, சீடர், குருவிடம் கேட்டார். "சூரியன் உதிப்பதற்கு நீ என்ன முயற்சிகள் செய்யவேண்டும்?" என்று, குரு, மறு கேள்வி கேட்டார்.

எரிச்சலடைந்த சீடர், "பின் எதற்கு இத்தனை செபப் பயிற்சிகளைக் கற்றுத்தருகிறீர்கள்?" என்று சூடாகக் கேட்டார். "சூரிய உதயத்தின்போது, நீ விழித்திருக்கவே, இந்த பயிற்சிகள் எல்லாம்" என்று அமைதியாய்ப் பதில் சொன்னார் குரு. (Fr.Brian Cavanaugh எழுதிய "The Sower's Seeds" என்ற நூலில் காணப்படும் கதை)

ஏன் செபிப்பது? எப்படி செபிப்பது? எப்போது செபிப்பது? எங்கே, எதற்காக செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் அடிக்கடி எழுகின்றன. இயேசுவின் சீடர்களுக்கும் இக்கேள்விகள் எழுந்தன. அவற்றை இயேசுவிடம் கேட்க, அவர்கள், நல்லதொரு தருணத்திற்காகக் காத்திருந்தனர். அன்று, இயேசு, ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும், அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். (லூக்கா நற்செய்தி 11: 1) இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது.

இப்படிப்பட்ட ஒரு விண்ணப்பத்திற்குக் காத்துக்கொண்டிருந்தவரைப் போல் இயேசு, செபிப்பது பற்றிய அழகான பாடத்தைச் சொல்லித் தந்தார். அவர் சொல்லித்தந்த பாடம், செபத்தைப் பற்றிய நீண்ட, அறிவுப்பூர்வமான விளக்கமாக அமையவில்லை. மாறாக, அவர் சொல்லித் தந்ததெல்லாம்... ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று.

‘இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடும்’ என்று சீடர் எழுப்பிய விண்ணப்பத்திற்கு விடையாக, "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: ..." (லூக்கா 11: 2) என்று கூறிய இயேசு, தொடர்ந்து வெளியிட்ட சொற்கள், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது.

அழகிய இச்செபத்தைச் சொல்லித்தந்த இயேசு, அதைத் தொடர்ந்து, அழகியதோர் உவமையைச் சொன்னார். இறைவனிடம் எவ்விதம் வேண்டுவது என்பதைத் தெளிவுபடுத்த, இயேசு இந்த உவமையைக் கூறியிருந்தாலும், இக்கதையில், இயேசு சித்திரிக்கும் எளிய வாழ்வு, வேறுசில பாடங்களையும் சொல்லித் தருகின்றது. இயேசு கூறும் காட்சி, மனதில் இதமான எண்ணங்களையும், உணர்வுகளையும் உருவாக்குகின்றது. அதே நேரம், நாம் வாழும் இன்றைய சமுதாயத்திற்குச் சவால்களையும் முன்வைக்கிறது.

இஸ்ரயேல் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் பயணம் செய்யும் ஒருவர், ஓர் ஊரை அடைகிறார். இருள் பரவ ஆரம்பித்ததால், அவர் அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்கிறார். அதுவும், அவ்வூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், இரவு சென்று சேர்கிறார். எந்நேரம் ஆனாலும் சரி, தன் நண்பர் வீட்டில் தனக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதில் அத்தனை நம்பிக்கை அவருக்கு. பயணக் களைப்புடன், பசியுடன், வீடுதேடி வந்த நண்பருக்கு கொடுக்க உணவு எதுவும் இல்லை. எனவே, அவர் தன் அடுத்தவீட்டு நண்பரிடம் உணவு கேட்டுச் செல்கிறார், நடு இரவில். அடுத்தவீட்டு நண்பரை, அந்த நடு இரவில் எழுப்பலாமா, வேண்டாமா என்ற தயக்கம் ஏதுமில்லாமல், அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார், நம் உவமையின் நாயகன்!

அறிவிப்பு ஏதுமின்றி வரும் விருந்தினர், அவருக்கு உணவு பரிமாற, அடுத்த வீட்டினரை இரவில் எழுப்பும் நண்பர் என்று, இக்கதையில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள்... இப்படியும் நடக்கமுடியுமா என்ற வியப்பை நம்முள் உருவாக்குகின்றன.

நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும், இதையொத்த நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவை, வசதிகள் நிறைந்த மாளிகைகளில் நடப்பது அரிது. எளிய, குடிசைகளில் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. எளியோர் நடுவே நிலவும் விருந்தோம்பல் குறித்து, சென்ற வாரம் சிந்தித்தோம்; இன்று, மீண்டும் ஒருமுறை, எளியோரின், பாசம், பகிர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகிய அற்புதப் பண்புகளை உணர்ந்து பார்க்க, இவ்வுவமை, நம்மை அழைக்கிறது.

நள்ளிரவில் தன் நண்பனிடம் உதவி கேட்டுச் சென்ற நம் நாயகனைப் புரிந்துகொள்ள முயல்வோம். William Holman Hunt என்ற ஆங்கிலேய ஓவியர், 1895ம் ஆண்டு தீட்டிய ஓர் அற்புதமான ஓவியத்தின் பெயர் - The Importunate Neighbour - ஆதாவது, ‘நேரம் காலம் தெரியாமல் வந்து தொல்லை கொடுக்கும் அடுத்தவீட்டுக்காரர்’. நாம் இன்று சிந்திக்கும் உவமையின் நாயகனுக்கு ஓவியர் William Hunt அவர்கள் வழங்கியுள்ள பட்டம் அது.

நிலவொளி வீசும் ஒரு குறுகியத் தெருவில், மூடப்பட்ட ஒரு கதவின் மீது சாய்ந்தபடி, அதைத் தட்டிக்கொண்டு நிற்கிறார், நமது உவமையின் நாயகன். அவர் அக்கதவை தட்டிக்கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதில், முட்டிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லும் வகையில், ஓவியர், நமது நாயகனைத் தீட்டியுள்ளார்.

இன்றைய நற்செய்தியில், "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற புகழ்பெற்ற சொற்களை இயேசு கூறியுள்ளதைக் காண்கிறோம். 'தட்டுங்கள்' என்ற சொல்லுக்குப்பதில், 'முட்டுங்கள்', அதாவது, 'விண்ணகக் கதவை முட்டுங்கள், அது முழுமையாகத் திறக்கும்' என்று இயேசு கூறியிருந்தாலும் வியப்பில்லை. நேரம், காலம் கருதாமல், மனம் தளராமல், உங்கள் முழு வலிமையோடு இடைவிடாமல் செபியுங்கள் என்பதே, இயேசு இந்த உவமை வழியே சொல்லவந்த கருத்து.

செபிப்பதற்குத் தேவையான பல அம்சங்களில், மூன்று அம்சங்களை, நமது நாயகன் சொல்லித்தருகிறார். 1- நமது கதை நாயகன், தன் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்ல, தன் நண்பரின் பசியைத் தீர்க்க, அடுத்தவரை நாடிச் செல்கிறார். 2- அடுத்தவரிடம், தன் உண்மை நிலையை, ஒளிவு மறைவின்றி எடுத்துச் சொல்கிறார். 3- நண்பர், கதவைத் திறக்காதபோதும், நம்பிக்கையுடன், தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார். இம்மூன்று அம்சங்களையும், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதல் அம்சம்... தன் பசிக்காக அல்ல, தன் நண்பரின் பசியைப் போக்க, அடுத்தவர் உதவியைத் தேடிச்சென்ற நமது நாயகனைப் போல, நமது செபங்களில், அடுத்தவர் தேவைகளை ஏந்திச்செல்வது அழகு. சுயநலத்தில் சுகம்காண்பதற்கும், நம் சுயநலத்தேவைகளை, ஆசைகளை கூட்டிக்கொண்டே செல்வதற்கும் சொல்லித்தரும் இன்றைய உலகப்போக்கிற்கு ஒரு மாற்று அடையாளமாக, நமது உவமையின் நாயகனை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

21ம் நூற்றாண்டு, "நான், என்னுடையது, எனக்கு" என்பதை, தேவைக்கதிகமாக வலியுறுத்தும் நூற்றாண்டாக மாறிவருகிறதோ என்ற கவலை உலகில் பரவியுள்ளதைப் பார்க்கிறோம். இந்தக் கவலையை மையப்படுத்தி, TIME வார இதழ், 'The ME ME ME Generation' - அதாவது, 'எனக்கு, எனக்கு, எனக்கு தலைமுறை' என்ற முதல்பக்கக் கட்டுரை ஒன்றை 2013ம் ஆண்டு மே மாதம் (May 20, 2013) வெளியிட்டது.

இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தங்களைச் சுற்றியே உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்தில் அதிகம் வளர்ந்துள்ளனர் என்று, கட்டுரை ஆசிரியர் Joel Stein அவர்கள் கூறுகிறார். தண்ணீரில் தோன்றிய தன் பிம்பத்தின் அழகை இரசிப்பதில், தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட, 'Narcissus' என்ற கிரேக்கப் புராண நாயகனுடன், இத்தலைமுறையினரை ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர்.

30 வயதுக்குட்பட்ட பல இளையோர், தங்களை, தங்கள் வாகனங்களை, தங்கள் செல்ல மிருகங்களை புகைப்படம் எடுத்து, அவற்றை Facebook, Twitter, Instagram வழியே வெளியிடுகின்றனர். அந்தச் சுயவிளம்பரத்தை, எத்தனை பேர் விரும்பினர், விரும்பவில்லை என்பதை அறிய, அப்பக்கங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்கின்றனர் என்று Joel Stein அவர்கள் கூறியுள்ளார். தன்னைச் சுற்றியே இவ்வுலகம் இயங்குகிறது என்ற ஒரு மயக்கத்தில் வாழும் தலைமுறை இது என்பதை, அவர் பல புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளார்.

'Narcissus' என்ற அந்த புராண நாயகனின் பெயர், 'narke' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த ஒரு பெயர். 'narke'ன் பொருள்... 'உறக்கம், மயக்கம், அல்லது, மரத்துப்போன ஒரு நிலை.' நான், எனது, எனக்கு என்ற மயக்க நிலையில், மரத்துப்போன மனசாட்சியுடன் வாழும் நமக்கு, இன்றைய உவமையின் நாயகன் சொல்லித்தரும் ஓர் உன்னத பாடம், நமது செபங்களில், நம் தேவைகளைவிட, அடுத்தவர் தேவைகளை ஏந்திச் செல்வது அழகு, என்ற பாடம்.

"எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்" என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது இன்னும் அழகானது. அடுத்தவரது தேவைகள், நம் எண்ணங்களையும், மனதையும் நிறைக்கும்போது, நமது தேவைகள், குறையவும், மறையவும் வாய்ப்புண்டு.

நம் உவமையின் நாயகன், அடுத்தவீட்டு நண்பரிடம் கூறிய சொற்கள், உண்மையான செபத்தின் இரண்டாவது அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. அதுதான், தனது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்தல். "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" (லூக்கா நற்செய்தி 11: 5-6) என்பதே, நமது கதை நாயகன் எழுப்பும் வேண்டுதல். நெருங்கிய நண்பருக்கு முன், தன் குறையை எடுத்துரைக்க, மிகுந்த பணிவும், துணிவும் தேவை.

நம்மில் பலர், நமது உண்மை நிலையை, குறிப்பாக, நமது குறைகளை மறைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது உண்மை நிலையை மறைத்து வாழ்வதற்கு, நாம் முகமூடிகள் அணிய வேண்டிவரும். உண்மையான நண்பர்கள் மத்தியில், இத்தகைய ஒளிவு மறைவுகள் வளரும்போது, நட்பிலும் விரிசல்கள் விழும்.

'நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்ற வேண்டுதலை எழுப்பும் நம் உவமையின் நாயகன், நம்மிடம் உள்ள நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையைக் கற்றுத்தருகிறார்.

மூடிய கதவு, உதவி செய்ய மறுப்பு என்ற பல தடைகளையும் எதிர்கொண்டு, தன் முயற்சியைத் தொடர்ந்த நம் கதையின் நாயகன், மனம் தளராமல் செபிக்கவேண்டும் என்ற மூன்றாவது அம்சத்தைச் சொல்லித்தருகிறார். ஒரு சில வேளைகளில், நமது செபத்தில் இறைவனுடன் போராடுவதுபோலத் தோன்றினாலும், மனம் தளராமல் செபிக்க வேண்டியிருக்கும். இதற்கு, இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 18: 20-32) நாம் சந்திக்கும் ஆபிரகாம் ஒரு கூடுதல் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, கடவுளுடன் எழும் வாக்குவாதமாகவும் மாறும். ஒரு நகரத்தைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். கடவுள் மட்டில், ஆபிரகாமுக்கு, பாசமும் உண்டு, பயமும் உண்டு. எனவே, 50 பேர் இருந்தால் சோதோம் நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்குக் கடவுளை இழுத்துவருகிறார் ஆபிரகாம். கடவுளுக்கும், ஆபிரகாமுக்கும் இடையே நிகழும் இந்தப் போட்டி, தனக்கு வேண்டியதைப் பெற அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை நினைவுக்குக் கொணர்கிறது.

பொதுவாகவே, குழந்தை மனதை வளர்த்துக் கொண்டால், செபம் எளிதாகும். குழந்தைகளைப் போல் நாம் மாறவேண்டும் என்று இயேசு சொன்னதற்கு, இதுவும் ஒரு காரணம். இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், குழந்தை-தந்தை உறவைப் பற்றியும், விண்ணகத் தந்தையைப் பற்றியும், ஒரு தெளிவை எடுத்துச்சொல்லி, இறைத்தந்தையிடம் வேண்டுவது எப்படி என்ற தன் பாடங்களை நிறைவு செய்கிறார். நாமும் இந்தப் பாடங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

லூக்கா 11: 9-13

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

27 July 2019, 15:23