தேடுதல்

ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினார் - தொடக்க நூல் 18: 2 ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினார் - தொடக்க நூல் 18: 2 

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நமது வழிபாட்டு வாசகங்கள், உறவுகளை வளர்க்கும் விருந்தோம்பலை மையப்படுத்தியிருப்பதால், இந்த வாசகங்களையும், அப்போல்லோ விண்கலத்தின் பயணத்தையும் இணைத்துச் சிந்திக்க முயல்வோம். சில வாழ்க்கைப் பாடங்களைப் பயில்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 16ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

1969ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி, அப்போல்லோ 11 என்ற விண்கலம், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து, நிலவை நோக்கி தன் பயணத்தைத் துவக்கியது. 3,84,000த்திற்கும் அதிகமான கி.மீ. தூரத்தை 76 மணி நேரங்களில் கடந்து, ஜூலை 20ம் தேதி, அந்த விண்கலம், நிலவில் தரையிறங்கியது. மனித வரலாற்றில் ஒரு புதிய சாதனையை உருவாக்கிய இந்நிகழ்வின் பொன்விழா, ஜூலை 20, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வுக்காக, நாம் இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். அதே வேளையில், இப்பயணத்துடன் தொடர்புடைய ஒரு சில நிகழ்வுகளும், கூற்றுகளும் மனித சமுதாயத்தில் நிலவும் மதிப்பீடுகளைக் குறித்து சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன. குறிப்பாக, இந்த ஞாயிறு, நமது வழிபாட்டு வாசகங்கள், (தொடக்க நூல் 18: 1-10; லூக்கா 10: 38-42) உறவுகளை வளர்க்கும் விருந்தோம்பலை மையப்படுத்தி அமைந்திருப்பதால், இந்த வாசகங்களையும், அப்போல்லோ விண்கலத்தின் பயணத்தையும் இணைத்துச் சிந்திக்க முயல்வோம். சில வாழ்க்கைப் பாடங்களைப் பயில்வோம்.

மென்மையான மனித உணர்வுகளின் அடையாளமாக, நாம் நிலவைக் கருதிவருகிறோம். பாசத்துடன் குழந்தைக்கு உணவூட்ட முயலும் அன்னை, நிலவைக் காட்டுவது வழக்கம். இன்றோ, குழந்தையின் பிஞ்சுக்கரங்களில் ஒரு 'ஸ்மார்ட் போனை'த் திணித்து, அந்தத் திரையில் தோன்றும் நிழல்களைக் காட்டி, உணவு ஊட்டப்படுகிறது. வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து, நாம் பகிர்ந்துகொண்ட 'நிலாச்சோறு' உறவுகளை ஆழப்படுத்தியது. நிலவை மையமாக்கி, பல்லாயிரம் காதல் கவிதைகளை நாம் உருவாக்கியுள்ளோம். இவ்வாறு, பாசம், காதல் போன்ற உன்னத மனித உணர்வுகளுடன் நாம் நிலவைத் தொடர்புபடுத்தினோம்.

தூரத்தில் இருந்து பார்த்து இரசித்த நிலவை அடைவதற்கு, 20ம் நூற்றாண்டின் நடுவில் முயற்சிகள் ஆரம்பமாயின. நிலவில் இறங்கிய முதல் மனிதர், நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், அங்கு தன் முதலடியை பதித்தபோது, “That's one small step for a man, one giant leap for mankind,” அதாவது, "இது, ஒரு மனிதனின் சிறிய காலடி; மனிதகுலத்தின் மிக, மிகப் பெரிய தாண்டுதல்" என்று கூறினார். தான் நிலவில் காலடி பதிப்பதற்கு உதவியாக, பின்புலத்தில், 4,00,000த்திற்கும் அதிகமானோர் பணியாற்றினர் என்பதையும், இந்த முயற்சி வெற்றியடைய மனதார வாழ்த்திய கோடான கோடி மக்களையும் நினைவில் கொண்டு, தான் அச்சொற்களைப் பதிவு செய்ததாக, ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பின்னர் கூறியுள்ளார். அதுவரை மனித வரலாற்றில் யாருமே செய்திராத ஒரு சாதனையை நிறைவேற்றிய வேளையில், அவ்வெற்றியை தனித்துக் கொண்டாடாமல், பல கோடி மனிதரோடு இணைந்து அவர் கொண்டாடியது, நம் மனதைத் தொடுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங், மற்றும், பஸ் ஆல்ட்ரின் என்ற இரு விண்வெளி வீரர்களும், நிலவில், அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கொடியை நட்டுவைத்தனர். அத்துடன், உலக வரைப்படமும், ஒரு முக்கிய செய்தியும் பொறிக்கப்பட்ட தகட்டையும் அங்கு பதித்துவைத்தனர். அத்தகட்டில், "பூமிக்கோளத்திலிருந்து வந்த மனிதர்கள், இவ்விடத்தில், - கி.பி. 1969, ஜூலை - முதல்முறையாக காலடி பதித்தனர். மனித குலம் அனைத்திற்காக, அமைதியில் நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மனித குலம் அனைத்திற்கும் அமைதி என்ற எண்ணத்துடன் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக இத்தகட்டில் கூறப்பட்டிருந்தாலும், விண்வெளி பயணம், ஒரு போட்டியினால் உருவான முயற்சி என்பதை அறியும்போது, அந்த உன்னத வரலாற்றில் ஒரு கீறல் விழுவதை உணர்கிறோம்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், நாடுகளைக் கட்டுப்படுத்துவதில், வல்லரசுகளான அமெரிக்க ஐக்கிய நாடும் (USA), சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியமும் (USSR) 'பனிப்போரை' மேற்கொண்டன. இவ்விரு அரசுகளும், 1960களில், விண்வெளியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் முயற்சிகளைத் துவக்கின. இந்தப் போட்டியின் விளைவாகவே, 1969ம் ஆண்டு, அப்போல்லோ 11 பயணத்தை, அமெரிக்க ஐக்கிய நாடு, வெற்றிகரமாக முடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, விண்வெளியின் பல கோளங்களுக்கு மனிதர்களை அனுப்பும் பயணங்களை அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், மூன்று ஆண்டுகள் சென்று, 1972ம் ஆண்டு, மனிதர்களை அழைத்துச் சென்ற விண்வெளிப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. இந்தத் தொய்வு ஏன் ஏற்பட்டது என்று, ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் கூறிய பதில், நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. "When we lost the competition, we lost the public will to continue" அதாவது, "நாம் போட்டியை (அதாவது, USSRஉடன் உருவான போட்டியை) இழந்தபோது, விண்வெளிப்பயணத்தைத் தொடரவேண்டும் என்ற பொது மக்களின் ஆர்வத்தையும் இழந்தோம்" என்று அவர் பதில் அளித்தார்.

விண்ணிலுள்ள கோளங்களை அடைவது, தன்னிலேயே நிறைவு தரும் ஒரு நிகழ்வு என்றாலும், அங்கும் போட்டிகள் இருந்தால் மட்டுமே அறிவியல் முயற்சிகள் உருவாகும் என்று சொல்வது, நமக்குள் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் தவறான மதிப்பீடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. காதலுக்கும், பாசத்திற்கும் அடையாளமாக விளங்கும் நிலவில் காலடி பதித்த நாம், நமக்குள் இருக்கும் உறவுகளையும் காலடியில் போட்டுவிட்டு, போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்துள்ளோமோ என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், Bob Moorehead என்பவர் எழுதிய வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன: பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்த வீட்டுக்காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். விண்வெளியை வென்றுவிட்டோம், ஆனால், ஆழ்மன வெளியை வெல்லவில்லை.

உறவுகளை வளர்க்க மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கிய கொடைகளில் ஒன்று, விருந்தோம்பல். விருந்தோம்பலின் பல்வேறு வடிவங்களை நாம் வாழ்வில் உணர்ந்திருப்போம். இன்று அவற்றை சிறிது அசைபோடுவது, சில தெளிவுகளைத் தரும். வசதி நிறைந்த செல்வந்தர்கள், நடுத்தர வருமானம் உள்ளவர்கள், வசதியற்ற வறியோர் என்று, சமுதாயத்தின் பல நிலைகளில் உள்ளவர்களின் இல்லங்களில் விருந்துண்ணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும். ஒப்புமைப்படுத்துவது நல்லதல்ல என்றாலும், செல்வம் மிகுந்தோர் படைத்த விருந்தையும், வறியோர் இல்லங்களில் பகிர்ந்த விருந்தையும் இணைத்துச் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை.

செல்வம் மிகுந்தோர் இல்லங்களில் நடக்கும் விருந்தில், விருந்தினரை விட, பரிமாறப்படும் விருந்து, அதற்கான செலவு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. வறியோர் இல்லங்களில் நடைபெறும் விருந்தில், விருந்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

விருந்து முக்கியமா, விருந்தினர் முக்கியமா என்ற கேள்விக்கு பதில் தருவதுபோல் அமைந்துள்ளது, லூக்கா நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து நமக்குத் தரப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி (லூக்கா 10: 38-42). மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளின் இல்லத்திற்கு விருந்தினராக சென்றிருந்த இயேசுவுக்கு வகை, வகையாக உணவு தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார், மார்த்தா. அவருக்கு இயேசு முக்கியம்தான். ஆயினும், அவருக்குக் கொடுக்கவிருந்த விருந்து, மார்த்தாவின் எண்ணங்களை அதிகம் நிறைத்திருந்தது. மரியாவுக்கோ, இயேசு முக்கியமாகிப்போனார். விருந்தா, விருந்தினரா... எது முக்கியம் என்ற கேள்விக்கு, "மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவரிடமிருந்து எடுக்கப்படாது" (லூக்கா 10: 42) என்று இயேசு தரும் பதில், நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

நற்செய்தி சொல்லித் தரும் பாடங்களைப் போலவே, தொடக்க நூல் 18ம் பிரிவில் நாம் வாசிக்கும் நிகழ்வும் (தொடக்க நூல் 18: 1-10) விருந்தோம்பலைப் பற்றி சில பாடங்களைச் சொல்லித்தருகின்றது. இன்றைய முதல் வாசகத்தின் ஆரம்பத்தில், "பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. வெப்பம் மிகுதியாகும்போது, மனமும், உடலும் சோர்ந்துபோகும். ஒருவேளை, ஆபிரகாம், அத்தகைய ஒரு சோர்வுடன், தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்த நேரத்தில், மூன்று பேர் அவர் முன் வந்து நின்றனர். இப்படி, நேரம், காலம் தெரியாமல் வருபவர்களை, அதுவும், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை, விரைவில் அனுப்பிவிடுவதில் நாம் பெரும்பாலும் கவனம் செலுத்துவோம். அதற்குப் பதில், ஆபிரகாம், வழியோடு போனவர்களை, வருந்தி அழைத்து, விருந்து படைக்கிறார்.

ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், அன்று, அங்கு நடந்தது, இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித்தரும் என்பதை நாம் மறக்கக்கூடாது. மறுக்கவும் கூடாது.

முதலில்... முன்பின் தெரியாதவர்களை, வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப்பற்றிச் சிந்திக்கலாம். நாம், பெரு நகரங்களில் வாழ்பவர்களாக இருந்தால், வீட்டின் அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்டக் கதவை, சிறிதளவு திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை, அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், அவருக்கு விருந்து படைப்பது என்பது, எட்டாத கனவுதான்! விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே, நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான்.

ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், விருந்தினர்கள் வந்த பிறகுதான் ஏற்பாடுகள் ஆரம்பமாகின்றன.

ஓர் எளிய, அல்லது, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண் முன் விரிகிறது. தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர்களுக்கு நல்ல உணவைப் பரிமாறுபவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் வந்துவிடும் விருந்தினருக்காக, தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி, ஒரு பழரசமோ, காப்பியோ வாங்கிவந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை இப்படி நாம் செய்திருக்கிறோம்? தங்கள் அன்பை, பாசத்தை வெளிப்படுத்துவதே, இந்த முயற்சிகள். நம்மை வரவேற்று, இவ்விதம் அன்பு விருந்தளித்த அனைவரையும், இன்று, இறைவன் சந்நிதியில் நினைவு கூர்ந்து நன்றிகூறுவோம்.

இந்தியாவில் விருந்தினருக்கு மேன்மையானதோர் இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு, சமஸ்கிருத மொழியில் கூறப்படும் ஒரு சொற்றொடர் எடுத்துக்காட்டு. ‘Atithi Devo Bhava’ என்ற இச்சொற்களின் பொருள், 'இறைவனின் சாயலே விருந்தினர்'. இன்றைய உலகில் அடுத்தவரை, ஆண்டவனாகக் கருதாவிட்டாலும், மனிதராகவாகிலும் வரவேற்க வேண்டும். அதற்குப் பதில், அடுத்தவரைத் தடுப்பதற்கு, பெரும் முயற்சிகள் நிகழ்கின்றன. அறிமுகம் இல்லாத அன்னியருக்கு விருந்து வழங்கிய ஆபிரகாம், மனித குடும்பத்தில் நிலவவேண்டிய மாண்பை வெளிப்படுத்தினார் என்றால், அறிமுகம் இல்லாதவரை தடுத்து நிறுத்த சுவர்கள் எழுப்பும் முயற்சிகள், மனிதக் குடும்பம் எவ்வளவு தாழ்ந்துவிட்டது என்ற கோரத்தை வெளிப்படுத்துகின்றன.

உண்மையான விருந்தோம்பலை உயிர்பெறச் செய்யும் மனதை, உலகோர் அனைவருக்கும் இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் விருந்து படைப்போர் மத்தியில், வானத்தூதர்களும் இருக்கலாம். வானத்தூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு பெறவும், வானத்தூதர்களாக இவ்வுலகில் நாம் மாறவும் வேண்டுமென்று, உருக்கமாக மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2019, 15:05