தேடுதல்

Vatican News
சமாரியர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார்.  லூக்கா 10:34 சமாரியர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார். லூக்கா 10:34 

பொதுக்காலம் - 15ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

நல்ல சமாரியர் உவமையின் இறுதியில் இயேசு சொன்ன சொற்கள், நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் சொற்கள்... "நீரும் போய் அப்படியே செய்யும்."

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 15ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

“இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல” (“All characters and events in this story are purely fictitious… Any resemblance with either dead or living is purely co-incidental”) என்பது, நம் கதைகளில் முன்னுரையாக நாம் காணும் ஓர் அறிக்கை. கதையை உருவாக்கியவர் மீது யாரும் வழக்கு தொடுத்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வறிக்கை விடப்படுகிறது. இத்தகைய அறிக்கையை, இயேசு, தன் உவமைகளுக்கு முன் கூறியிருக்கமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். அவரது கதைகள் வழக்காக மாறினாலும், உண்மை வெளிவரவேண்டும் என்பதற்காக, இயேசு, தன் கதைகளைக் கூறினார். தான் கூறிய உவமைகளுக்கு முன்னுரையாக, அவர் அறிக்கை வெளியிட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்கும்: "இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. இவை, ஒவ்வொரு நாளும், உலகின் பல இடங்களில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள். இக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நாம் அனைவருமே" என்ற அறிக்கையே, இயேசுவின் உவமைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக, இந்த ஞாயிறு நமக்கு வழங்கப்பட்டுள்ள 'நல்ல சமாரியர்' உவமையில், (லூக்கா 10:25-37) இந்த அறிவிப்பை, இயேசு, தெளிவாக, நேரடியாகவே கூறியுள்ளார். "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (லூக்கா 10:29) என்று, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலாக, 'நல்ல சமாரியர்' உவமையைக் கூறிய இயேசு, இறுதியில் அவ்வறிஞரிடம், "நீரும் போய் அப்படியே செய்யும்" (லூக்கா 10:37) என்ற சவாலை முன்வைத்தார். நம் அயலவர், அடுத்திருப்பவர் யார் என்ற கேள்விக்கு, அறிவு சார்ந்த விடைகளைத் தேடி, திருப்தி அடைவதற்குப் பதில், அந்தக் கேள்வி நம்மை செயல்களில் ஈடுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு, இன்று, நம் ஒவ்வொருவரையும் பார்த்து, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறுகிறார்.

பொது இடம் ஒன்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வுடன், இயேசு தன் உவமையைத் துவக்குகிறார். எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற ஒருவர், வழியில், கள்வர்களால் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்று, இயேசு தன் உவமையை அறிமுகம் செய்கிறார். இவ்வறிமுக வரிகளில் சித்திரிக்கப்படும் கொடூரம், ஒவ்வொரு நாளும், பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன என்பதை நாம் அறிவோம்.

நியூயார்க் பெருநகரின் புறநகர் பகுதி ஒன்றில் நிகழ்ந்த ஒரு வேதனைச் சம்பவம் இது. 28 வயது நிறைந்த இளம்பெண் Kitty Genovese, 1964ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி விடியற்காலை 3.30 மணியளவில், தன் காரை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தன் அடுக்கு மாடி குடியிருப்பை நோக்கி நடந்தார். அப்போது திடீரென ஒருவர் அவரை இடைமறித்து, கத்தியால் குத்தினார். உடனே, Kitty, "என்னைக் கத்தியால் குத்திவிட்டான். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அலறினார். அவர் அலறலைக் கேட்டு, அந்த 10 மாடிக் கட்டடத்தின் பல வீடுகளில் விளக்குகள் எரிந்தன. ஒருவர் சன்னல் வழியே, "அந்தப் பெண்ணை விட்டுவிடு" என்று கத்தியதும், கத்தியால் குத்தியவர், அவ்விடம் விட்டு அகன்றார். Kitty, இரத்தக் காயங்களுடன் தடுமாறியபடி தன் வீடுநோக்கி நடந்தார். எரிந்த விளக்குகள் அணைந்தன. மீண்டும், அம்மனிதர் திரும்பி வந்து, Kittyஐக் கத்தியால் குத்தினார். மீண்டும் Kitty குரல் எழுப்ப, மீண்டும் விளக்குகள் எரிந்தன. பல வீடுகளில், சன்னல்கள் திறந்தன. கத்தியால் குத்தியவர், தான் வந்திருந்த காரில் ஏறிச்சென்றார். விளக்குகள் அணைந்தன. 15 நிமிடங்கள் சென்று, அதே ஆள், மீண்டும் அவ்விடம் வந்தார். இம்முறை, இளம்பெண் Kitty, அடுக்குமாடிக் கட்டடத்தின் வாசலில் விழுந்துகிடப்பதைக் கண்டார். மீண்டும் அவரைக் கத்தியால் குத்தினார். இளம்பெண் அலறினார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த ஒருவர் காவல்துறைக்கு 'போன்' செய்ததால், காவல் துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர். அதற்குள், கத்தியால் குத்தியவர் தப்பித்துவிட்டார். இளம்பெண் Kitty Genovese, இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். இளம்பெண்ணை அந்த மனிதர் கத்தியால் குத்தியதை தங்கள் வீடுகளிலிருந்து 38 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று, இந்நிகழ்வை துப்பறிந்தவர்கள் கண்டறிந்தனர்.

2013ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி, ஜெய்ப்பூர் நகரின் முக்கிய சாலையொன்றில், ஓர் இளம் தம்பதியர், தங்கள் இரு குழந்தைகளுடன் 'ஸ்கூட்டரி'ல் பயணம் செய்தனர். அவ்வழியே வேகமாக வந்த ஒரு லாரி, 'ஸ்கூட்டர்' மீது மோதி, அந்த நால்வரும் கீழே விழுந்தனர். இளம் தாயும் அவர் கரங்களில் வைத்திருந்த 8 மாதக் குழந்தையும் அதிகம் அடிபட்டனர். இளம் தந்தை கன்னையாவும், அவரது இரண்டு வயது மகனும், குறைவான காயங்களுடன் தப்பித்தனர். கன்னையா அவர்கள், அந்த முக்கிய சாலையில் பறந்துகொண்டிருந்த அத்தனை வாகனங்களையும் நிறுத்த முயன்று, தோற்றுப்போனார். 20 நிமிடங்கள் சென்று 'ஆம்புலன்ஸ்' வந்தது. மருத்துவ மனைக்குப் போகும் வழியில், இளம் தாயும், 8 மாதக் குழந்தையும் இறந்தனர்.

2016ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, சென்னையில், சுவாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். வெட்டப்பட்ட சுவாதியின் உடல், 2 மணி நேரமாக இரயில் நிலையத்திலேயே கிடந்தது. அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட இராம்குமார் என்ற இளையவர், சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி, காவல்துறை, வழக்கை முடித்துவிட்டது.

1964ம் ஆண்டு - நியூ யார்க், 2013ம் ஆண்டு - ஜெய்ப்பூர், 2016ம் ஆண்டு - சென்னை... வெவ்வேறு ஆண்டுகள், வெவ்வேறு நகரங்கள். ஆனால், மூன்று நிகழ்வுகளிலும், பலர் சூழ்ந்திருந்தும், உதவிகள் கிடைக்காமல், இவ்வுயிர்கள் மரணம் அடைந்தன என்ற கொடூரம், ஒரு பொதுவான, வேதனையான உண்மை.

அண்மையக் காலங்களில், ஒரு கூடுதல் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. ஜூலை 8ம் தேதி, கடந்த திங்களன்று, விளாத்திக்குளம் அருகே, பள்ளி ஆசிரியர் ஒருவரை, அவரது உறவினர் பொது இடத்தில், வெட்டிக் கொலை செய்தார். அவ்வழியே சென்றவர்கள், அக்கொலையை, கைப்பேசியில் பதிவுசெய்து வெளியிட்டனர். கண்முன் நடக்கும் கொடூரங்களைத் தடுக்கவோ, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவோ முயற்சி செய்வதைவிட்டு, அக்கொடூரத்தை பதிவுசெய்து, அதை மற்றவர்களோடு பகிரும் போக்கு பெருகியுள்ளது. கொடுமைகளைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளர்கள், பல மடங்காக அதிகரித்திருப்பது, வேதனை தரும் உண்மை.

நல்ல சமாரியர் உவமைக்குத் திரும்புவோம். இக்கொடுமையைச் செய்தது, கள்வர்கள் என்று, இயேசு, உவமையின் துவக்கத்தில் தெளிவாகக் கூறுகிறார். ஆனால், அந்தக் கள்வர்கள் மீது நம் கவனத்தைத் திருப்பாமல், அடிபட்டவரைக் கண்டு விலகிச் சென்றவர்கள், உதவி செய்தவர் ஆகியோரின்மீது நம் கவனத்தைத் திருப்புகிறார், இயேசு.

அவர் இவ்விதம் செய்வது, ஓர் உண்மையை நம் உள்ளங்களில் ஆழப் பதிக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் மனிதர்கள் அடிபட்டு வீழ்வது, அடிக்கடி நிகழும் கொடுமை. அவ்வேளைகளில், அவர்கள், ஏன், எவ்வாறு, யாரால் அடிபட்டனர் என்று கண்டுபிடிப்பதில் நம் சக்தியையும், நேரத்தையும் வீணாக்குவதற்குப் பதில், அடிபட்டு கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் நம் கவனம் திரும்பவேண்டும் என்பதே, இயேசு இவ்வுவமையில் நமக்குச் சொல்லித்தரும் முதன்மையானப் பாடம்.

அம்மனிதர் அடிபட்டுக் கிடந்தப் பாதையில், ஒரு குரு, ஒரு லேவியர், மற்றும் ஒரு சமாரியர் சென்றனர். இயேசு, இம்மூவரையும் அறிமுகப்படுத்தும்போது, அவர்கள், அடிபட்டிருந்தவரை எவ்வாறு கண்டனர் என்பதை, முக்கியமான வேறுபாடுகளுடன் கூறுகிறார். (லூக்கா 10 31,32,33)

குரு, போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரும், அங்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். அம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம். இதயத்தில் உருவான பரிவு, சமாரியரை, செயலில் ஈடுபட வைத்தது.

பரிவினால் உந்தப்பட்ட சமாரியர், அடிபட்டிருந்தவரின் காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் ஊற்றி, அக்காயங்களை கட்டினார் என்றும், தாம் பயணம் செய்துவந்த விலங்கின் மீது, அவரை ஏற்றி, ஒரு சாவடிக்குக் கூட்டிச்சென்றார் என்றும், இயேசு விவரிக்கிறார். சமாரியர் ஆற்றியச் செயல்களையெல்லாம் இணைத்துப் பார்த்தால், அவரைப் பற்றி ஒரு சில விவரங்கள் தெளிவாகின்றன. வர்த்தக மையமாக விளங்கிய எரிகோவில், திராட்சை மதுவும், எண்ணெயும் விற்பதற்காகச் சென்றவர், அந்தச் சமாரியர். கணிசமான அளவு இவற்றை அவர் எடுத்துச் சென்றதால், ஒரு விலங்கும் உடன் சென்றது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை ஒன்று திரட்டினால், அவ்வழியாக வந்த சமாரியர், வசதி வாய்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கள்வர் பயம் அதிகம் இருந்த அப்பகுதியில், தான், தனது பாதுகாப்பு, தனது பொருட்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு, அச்சமாரியர் முதலிடம் கொடுத்திருந்தால், குருவையும், லேவியரையும் விட, அவர்தான் மிக அவசரமாக அப்பாதையைக் கடந்திருக்கவேண்டும். ஆனால், நடந்தது என்ன? அவர், தன்னையும், தன் வர்த்தகப் பொருட்களையும், விலங்கையும் ஆபத்துக்கு இலக்காக்குகிறார். தன்னை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை மறந்து, செயலில் இறங்குகிறார். ஏனெனில், அவர் எண்ணங்களையும், மனதையும், சூழ்ந்திருந்ததேல்லாம் பரிவு ஒன்றே.

முதலுதவிகள் செய்ததும், தன் கடமை முடிந்ததென்று எண்ணாமல், தான் துவங்கிய உதவியை முழுமையாகத் தொடர்ந்தார், சமாரியர். அடிபட்டவரை, தான் பயணம் செய்துவந்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுச் சென்றார்.

அடுத்தவருக்கு உதவி என்பதை பல வழிகளில் செய்யலாம். நமது தேவை போக, அதிகமாக, சேமிப்பில் இருக்கும் செல்வத்திலிருந்து பிறருக்கு உதவிகள் செய்யலாம்.  வழியில் நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு நாம் அளிக்கும் தர்மம், இவ்வகையைச் சேரும். அல்லது, நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவிகள் செய்யலாம். “உங்களுக்கு வலிக்கும்வரை வாரி வழங்குங்கள்” “Give till it hurts” என்பது, புனித அன்னை தெரேசா அவர்கள் வழங்கிய ஓர் அற்புத அறிவுரை. அதாவது, நமது சுகங்களைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு வழங்குவதில்தான் பொருள் உள்ளது என்பது, அன்னையின் கருத்து.

குரு, லேவியர், சமாரியர் என்ற இம்மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி Martin Luther King Jr. அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிடுகையில், ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனதில் எழுந்த கேள்வி இதுதான்: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?" இந்தக் கேள்வி, அவர்களுக்குள் உருவாக்கிய அச்சம், அவர்களை, அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. பொது இடங்களில் அடிபட்டவர்கள் மீது அக்கறை காட்டுவது, கோர்ட், கேஸ் என்று, நம்மை இக்கட்டில் மாட்டிவிடும் என்ற அச்சம்தானே, நம்மையும் தயங்கச் செய்கிறது.

இதற்கு நேர்மாறாக, அடிபட்டவரைக் கண்டதும், சமாரியர் மனதில் எழுந்த கேள்வி: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?" இந்த வேறுபாடுதான், முதல் இருவருக்கும், இறுதியில் வந்த சமாரியருக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பாதாளத்தை உருவாக்கியது. அந்தச் சமாரியரைப்போல் நாமும் செய்யவேண்டும் என்பதே, இயேசு சொல்லித்தர விரும்பும் ஒரே பாடம்.

இந்த உவமையின் இறுதியில் இயேசு சொன்ன சொற்கள், நமது முகத்தில் தண்ணீர் தெளித்து, தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து, நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் சொற்கள்... "நீரும் போய் அப்படியே செய்யும்."

என்ன செய்ய வேண்டும்? அன்பு செய்ய வேண்டும்.

எப்படிச் செய்ய வேண்டும்? சமாரியர் செய்ததுபோல் செய்யவேண்டும்.

அதாவது,

நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், நமது பயணங்களை நிறுத்த வேண்டும்.

தேவைகளில் இருப்போரை, நமது பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அல்லது, சுமந்துசெல்ல வேண்டும்.

தேவைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்.

"நீரும் போய் அப்படியே செய்யும்." நாமும் போய் அப்படியே செய்வோம்.

13 July 2019, 14:58