தேடுதல்

Vatican News
இலங்கை ஆலயத்தில் செபம் இலங்கை ஆலயத்தில் செபம்  (AFP or licensors)

இலங்கை தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு தனிப்பட்ட குழு

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள், ஒளிவுமறைவின்றியும், முழுமையாகவும் இடம்பெற வேண்டும் - கொழும்பு துணை ஆயர் ஜெயக்கொடி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து, புலன்விசாரணைகளை நடத்துவதற்கு, தனிப்பட்ட குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை தலைவர்கள், அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இத்தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமுற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள, கொழும்பு துணை ஆயர் அந்தோனி ஜெயக்கொடி அவர்கள், இது குறித்து நடத்தப்படும் விசாரணைகள், ஒளிவுமறைவின்றியும், முழுமையாகவும் இடம்பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 18, இவ்வியாழனன்று, செய்தியாளர்களிடம், இவ்வாறு தெரிவித்த ஆயர் ஜெயக்கொடி அவர்கள், உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தனிப்பட்ட குழு விசாரணை நடத்தினால்தான், உண்மை வெளிவரும் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஏப்ரல் 21ம் தேதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து, ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கைகள் வந்தபோதிலும், அரசு அதற்கேற்ப செயல்படத் தவறியுள்ளது என்று, இலங்கை உச்ச நீதிமன்றத்தில், அந்நாட்டு கத்தோலிக்க அருள்பணியாளர்கள், வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

இந்த வழக்கில், பிரதமர் இரணில் விக்ரமசிங்கே உட்பட 13 அரசு அதிகாரிகள் மீது புகார் சொல்லப்பட்டுள்ளது என்றும், இந்த அதிகாரிகள், தங்களது கடமையினின்று தவறியுள்ளனர் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கத்தோலிக்கர், தங்கள் வழிபாடுகளை நடத்துவதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதும், அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அரசுத்தலைவர் சார்பில் ஒரு குழு, பாராளுமன்றம் தேர்ந்தெடுத்த ஒரு குழு உட்பட, பல்வேறு முறையில் இலங்கை அரசு, புலன் விசாரணைகளை நடத்தி வருகின்றது என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

19 July 2019, 15:05