இயேசு சபை அருள்பணியாளர், Paolo Dall’Oglio கடத்தப்பட்டதன் ஆறாம் ஆண்டையொட்டி அவரது குடும்பத்தினர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டம் இயேசு சபை அருள்பணியாளர், Paolo Dall’Oglio கடத்தப்பட்டதன் ஆறாம் ஆண்டையொட்டி அவரது குடும்பத்தினர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டம் 

அருள்பணி Dall’Oglio காணாமல்போய் 6 ஆண்டுகள்....

சிரியாவில் காணாமல்போன கிறிஸ்தவ ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் 5 பேரைக் குறித்த விவரங்களை வழங்குவோருக்கு 50 இலட்சம் டாலர் வெகுமதி அறிவிப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர், Paolo Dall’Oglio உட்பட, சிரியாவில் காணாமல் போயிருக்கும் கிறிஸ்தவ ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் 5 பேரைக் குறித்த விவரங்களை வழங்குவோருக்கு 50 இலட்சம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் நீதித்துறை அறிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடலை வளர்க்கும் நோக்கத்துடன் Deir Mar Musa al-Habashi என்ற குழுமத்தை நிறுவிய இயேசு சபை அருள்பணியாளர் Dall’Oglio அவர்கள், 2013ம் ஆண்டு சிரியாவில், அடிப்படைவாதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் அருள்பணியாளர் Maher Mahfouz, சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர் Gregorios Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos Yazigi மற்றும், ஆர்மீனிய கத்தோலிக்க அருள்பணியாளர் Michael Kayyal ஆகியோர் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட இவர்களது விடுதலைக்கு உதவும் தகவல்களை வழங்குவோருக்கு 50 இலட்சம் டாலர்கள் வெகுமதி அளிக்க, அமெரிக்க அரசின் நீதித் துறை தீர்மானித்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, அருள்பணி Dall’Oglio அவர்கள் கடத்தப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தபின்னரும், அவரைக் குறித்தோ, அவரைக் கடத்தியவர்கள் குறித்தோ எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று மிகுந்த கவலையுடன் கூறினார், அலெப்போ நகரின் கல்தேய வழிபாட்டு முறை ஆயர் Antoine Audo.

6 ஆண்டுகளுக்கு முன், 2013ம் ஆண்டு, ஜூலை மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களுக்கு இடைப்பட்ட இரவில், இயேசு சபை அருள்பணியாளர் Dall’Oglio அவர்கள் கடத்தப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 16:18