பிரித்தானிய பாராளுமன்றம் பிரித்தானிய பாராளுமன்றம் 

மனச்சான்றின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

கருக்கலைப்பை அங்கீகரிப்பது, குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை பறிப்பதாகும். வட அயர்லாந்து சார்ந்த பிரச்சனையை, அப்பகுதி மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உரிமையை வழங்கியுள்ள, புனித வெள்ளி ஒப்பந்தம் காக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வட அயர்லாந்தில், கருக்கலைப்பையும், ஒரே பாலின திருமணங்களையும் சட்டமுறைப்படி அங்கீகரிப்பதற்கென, பிரித்தானிய நாராளுமன்றத்தில் சட்டவரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, மனச்சான்று சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், ஸ்காட்லாந்து ஆயர்கள்.

இவ்விவகாரம் தொடர்பாக, ஸ்காட்லாந்து முதலமைச்சர் Nicola Sturgeon அவர்களுக்கு, கடிதம் அனுப்பியுள்ள, ஸ்காட்லாந்து ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Hugh Gilbert அவர்கள், பிரித்தானிய பாராளுமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு மிகவும் கவலை தருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து தங்களின் அதிர்ச்சியை வெளியிட்டுள்ள வட அயர்லாந்து ஆயர்கள், இந்த சட்டவரைவுக்கு இசைவு தெரிவிப்பதற்கு, பிரித்தானிய பாராளுமன்றம் காட்டிவரும் ஆர்வம் அதிர்ச்சியளிக்கின்றது என்றும், இது சட்டப்படி அங்கீரிக்கப்பட்டால், கருவிலே வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை பறிப்பதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

கருவிலே வளரும் குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையேயுள்ள அன்பு, ஒவ்வொரு சமுதாயத்தின் பொதுநலனுக்கு அடிப்படையானது என்று கூறியுள்ள வட அயர்லாந்து ஆயர்கள், கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களின் கருத்துக்கணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

வட அயர்லாந்து சார்ந்த பிரச்சனையை, அப்பகுதி மக்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உரிமையை வழங்கியுள்ள, புனித வெள்ளி ஒப்பந்தம் காக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், வட அயர்லாந்து சார்ந்த இந்த விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அவர்களையும், அவரது அரசையும் கேட்டுக்கொண்டுள்ளனர். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2019, 15:10