தேடுதல்

Vatican News
இயேசு சபை துறவி Giuseppe Castiglione அவர்களால் வரையப்பட்ட Qianlong பேரரரசரின் ஓவியம் இயேசு சபை துறவி Giuseppe Castiglione அவர்களால் வரையப்பட்ட Qianlong பேரரரசரின் ஓவியம் 

இயேசு சபை துறவியரின் அரிய சீன ஓவியங்கள்

இதுவரை சீன நாட்டைவிட்டு வேறெங்கும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படாத ஓவியங்கள், முதல் முறையாக, வாஷிங்டன் நகர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

18ம் நூற்றாண்டில், சீனாவின் அரசவையில் ஓவியர்களாக விளங்கிய இரு இயேசு சபை துறவியரின் ஓவியங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் ஒரு கண்காட்சியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன.

இத்தாலிய நாட்டவரான Giuseppe Castiglione, மற்றும், ஜெர்மன் நாட்டவரான Ignatius Sichelbarth ஆகிய இரு இயேசு சபை துறவியரும், 18ம் நூற்றாண்டில் சீன அரசவையில் ஓவியர்களாக பணியாற்றிய வேளையில் வரைந்த ஓவியங்கள், இதுவரை சீன நாட்டைவிட்டு வேறெங்கும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

முதல் முறையாக, இவ்விரு இயேசு சபையினரின் ஓவியங்கள் வாஷிங்டன் நகரின் ஸ்மித்சோனியன் கண்காட்சியின் ஆசிய பிரிவில் மக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளன.

1400 முதல் 1900 முடிய ஆறு நூற்றாண்டுகள் சீனாவில் ஆட்சி செய்த பேரரசர்கள், மற்றும் அரசியர் ஆகியோரின் ஓவியங்களை, இயேசு சபை ஓவியர்கள் Castiglione மற்றும் Sichelbarth ஆகிய இருவரும், ஐரோப்பிய மற்றும் ஆசிய ஓவிய வடிவங்களை இணைத்து தீட்டியுள்ளனர் என்று, வரலாற்று ஆய்வாளரும், கண்காட்சியின் மேற்பார்வையாளருமான Jan Stuart அவர்கள் CNS செய்தியிடம் கூறினார். (CNS)

10 July 2019, 15:16