2019.07.17 La riconsacrazione della cattedrale di Jolo 2019.07.17 La riconsacrazione della cattedrale di Jolo 

புனித கார்மேல் அன்னை மரியா பேராலயம், மறுமுறை அர்ச்சிப்பு

பிலிப்பீன்ஸ் நாட்டில், அடிப்படைவாதக் குழுவினரால் சேதமடைந்த ஜோலோ உயர் மறைமாவட்ட புனித கார்மேல் அன்னை மரியா பேராலயம், மறுசீரமைக்கப்பட்டு, அவ்வன்னையின் திருநாளன்று, மீண்டும் ஒருமுறை அர்ச்சிக்கப்பட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன் மேற்கொண்ட தாக்குதலால் சேதமடைந்த ஜோலோ பேராலயம், ஜூலை 16, இச்செவ்வாயன்று மறுசீரமைக்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை அர்ச்சிக்கப்பட்டது என்று பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கார்மேல் அன்னையின் திருநாளன்று நடைபெற்ற, ஜோலோ உயர் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித கார்மேல் அன்னை மரியா பேராலயத்தின் அர்ச்சிப்பை, அந்நாட்டின் திருப்பீடத் தூதர், Gabrielle Caccia அவர்கள் முன்னின்று நடத்தினார்.

பல்லாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த அர்ச்சிப்பு விழாவில், கர்தினால் Orlando Quevedo, பேராயர் Romulo Valles மற்றும், ஏனைய ஆயர்களும், அருள்பணியாளர்களும் கலந்துகொண்டனர் என்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

இவ்வாண்டு சனவரி 27ம் தேதி, ஜோலோ பேராலயத்தில் நடைபெற்ற தாக்குதலில், பொதுமக்களில் 15 பேரும், 5 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் என்றும், இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS அடைப்படைவாதக் குழு பொறுப்பேற்றது என்றும் Zenit நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பேராலயத்தின் மறு சீரமைப்புப் பணிகளுக்கு, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பும், ஏனைய அமைப்புக்களும் நிதி உதவி செய்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2019, 14:51