நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது, கிறிஸ்தவக் கடமை நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது, கிறிஸ்தவக் கடமை 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது சிறப்பு கவனம் செலுத்த...

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்கவும், நுகர்வுத்தன்மையைக் குறைத்து, எளிய வாழ்வு வாழவும், கத்தோலிக்கரைத் ஊக்கப்படுத்தியுள்ள ஆயர்கள், பள்ளிப் பாடத்திட்டத்தில், திருத்தந்தையின் Laudato si' திருமடல் இடம்பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது, கிறிஸ்தவக் கடமை மட்டுமல்ல, மாறாக, அது அறநெறி சார்ந்த கடமையாகும் என்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, மேய்ப்புப்பணி மடல் ஒன்றை எழுதியுள்ளது, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை.

ஜூலை 16, இச்செவ்வாயன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இம்மடலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது அனைத்து மறைமாவட்டங்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

"சுற்றுச்சூழல் மனமாற்றத்திற்கு உடனடி அழைப்பு: காலநிலை மாற்றம் விடுக்கும் அவசரகால அழைப்பை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளல்" என்ற தலைப்பில் மேய்ப்புப்பணி மடல் ஒன்றை வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் ஆயர்கள், காலநிலை மாற்றம், அப்பாவி மக்களை, குறிப்பாக ஏழைகளை அதிகம் பாதிப்பதால், இதனைத் தடுப்பதற்கு சமுதாய அளவில் காட்டப்படும் புறக்கணிப்பு, அறநெறிக்கு மாறானது என்று சாடியுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்புடைய பேரிடர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டை அச்சுறுத்துவதால், இந்த மாற்றங்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்றும், தலத்திருஅவைத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

நிலக்கரியால் மின்சக்தி தயாரிக்கப்படும் நிலையங்களுக்கும், சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கும், அழிவை ஏற்படுத்தும் ஏனைய திட்டங்களுக்கும் ஆதரவாக, கத்தோலிக்க நிறுவனங்களின் நிதி வளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2019, 15:25