தேடுதல்

Vatican News
மியான்மாரின் யாங்கூன் நகரில் தொழிலாளர்கள் மியான்மாரின் யாங்கூன் நகரில் தொழிலாளர்கள்  (AFP or licensors)

மியான்மாரில் நால்வருக்கு ஒருவர், கடும் வறுமையில்…

குறைவான வளங்கள், போதிய கல்வியின்மை மற்றும் கடன்கள், மியான்மாரில் நிலவும் வறுமைக்கு முக்கிய காரணங்கள் - காரித்தாஸ் இயக்குனர் Tun Kyi

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் நால்வருக்கு ஒருவர், ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான ஊதியத்தில், ஏழ்மைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வது, தலத்திருஅவையின் மறைப்பணிக்கு, சவாலாக உள்ளது என்று, அந்நாட்டின் காரித்தாஸ் இயக்குனர் Richard Win Tun Kyi அவர்கள் கூறியுள்ளார்.

கருணா மறைப்பணி சமுதாய ஒருமைப்பாடு (KMSS) என்ற பெயரில் செயல்படும், மியான்மார் காரித்தாஸ் அமைப்பின் பணிகள் பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கிய, Tun Kyi அவர்கள், குறைவான வளங்கள், போதிய கல்வியின்மை மற்றும் கடன்கள், மியான்மாரில் நிலவும் வறுமைக்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்தார். வருங்காலத் தலைமுறைகளுக்கு கல்வி வழங்குதலை, வருங்காலத் திட்டமாகக் கொண்டிருக்கும் காரித்தாஸ் அமைப்பு, நலவாழ்வு, கல்வி போன்ற பணிகளுக்கு அரசிடமிருந்து உதவி கேட்கவும் திட்டமிட்டுள்ளது என்று கூறினார், Tun Kyi.

மியான்மாரில், சிறுபான்மை சமுதாயமாகிய கத்தோலிக்கர், ஏறத்தாழ 7,50,000 பேர், அதாவது, மொத்த மக்கள் தொகையில், ஒரு விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாகும். 

இதற்கிடையே, ‘மியான்மார் மக்களின் வாழ்வுநிலை 2017’ என்ற தலைப்பில், உலக வங்கியும், ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்பும் (UNDP) நடத்திய புள்ளிவிவர கணக்கெடுப்பில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனத் தெரிகிறது.

2005ம் ஆண்டில், 48.2 விழுக்காடாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2017ம் ஆண்டில், 24.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. (AsiaNews)

02 July 2019, 15:22