தேடுதல்

Vatican News
காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்கள் காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்கள்  (ANSA)

காஷ்மீரில் உரையாடல் மட்டுமே அமைதியைக் கொணரும்

காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் பிரிவினை அமைப்பின் தலைவர், Mirwaiz Umar Farooq அவர்கள், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க, தன் அமைப்பு, பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள தயாராக உள்ளது என்று அண்மையில் அறிவித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காஷ்மீர் மாநிலத்தில் குண்டுகளாலும், தோட்டாக்களாலும் அமைதியைக் கொணர முடியாது, உரையாடல்கள் மட்டுமே அமைதியைக் கொணரும் என்று ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் ஈவான் பெரெய்ரா அவர்கள் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் பிரிவினை அமைப்பின் தலைவர், Mirwaiz Umar Farooq அவர்கள், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க, தன் அமைப்பு, பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள தயாராக உள்ளது என்று அண்மையில் அறிவித்ததை வரவேற்று, ஆயர் பெரெய்ரா அவர்கள் இவ்வாறு கூறினார் என்று UCA செய்தி கூறியுள்ளது.

கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியால் உருவான கருத்து வேறுபாடுகள், மிகுதியான இரத்தம் சிந்தலைக் கண்டுள்ளது என்று கூறிய இஸ்லாமியத் தலைவர் Farooq அவர்கள், வன்முறையால் அல்ல, வாய் வார்த்தைகளால் இந்த மாநிலத்தில் அமைதியைக் கொணர முடியும் என்று கூறியுள்ளார். 

காஷ்மீரில் வாழும் மக்களிடம் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தாலும், அம்மாநிலத்தில் வாழும் மக்கள் ஏங்கிக் காத்திருக்கும் அமைதியை உருவாக்க, உரையாடல் மட்டுமே உன்னதமான வழி என்று, ஆயர் பெரெய்ரா அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தவர்கள் அனைவரும், காஷ்மீர் பிரச்னையை, தங்கள் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்று, மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பின் தலைவர், ஜோசப் டயஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1989ம் ஆண்டு முதல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் வன்முறைகளால், இதுவரை, ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றாலும், அரசின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி, 47,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுவதாக, UCA செய்தி கூறுகிறது. (UCAN)

04 July 2019, 15:23