தேடுதல்

Vatican News
மியான்மாரின் கத்தோலிக்க சமுதாயப் பணியாளர்களும், இளையோரும் மரக்கன்றுகள் நடும் காட்சி மியான்மாரின் கத்தோலிக்க சமுதாயப் பணியாளர்களும், இளையோரும் மரக்கன்றுகள் நடும் காட்சி 

Laudato si' ஆண்டு நிறைவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாரமரிப்பது குறித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவு நாளில், மியான்மாரில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் பராமரிப்பில் குடிமக்கள் எல்லாரின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் நோக்கத்தில், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், அந்நாட்டின் கத்தோலிக்க சமுதாயப் பணியாளர்களும், இளையோரும் மரக்கன்றுகள் நடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மியான்மார் நாட்டின் வர்த்தக நகரமான Taikkyiக்குப் புறநகரிலுள்ள, அரசுக்குச் சொந்தமான வனத்தில், மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைக்கு, மியான்மார் ஆயர் பேரவையின் சமுதாய நலப்பணி அமைப்பான காரித்தாஸ் ஏற்பாடு செய்தது.

நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாரமரிப்பது குறித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவு நாளன்று, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 6, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்நடவடிக்கையில், யாங்கூன் பேராயர் கர்தினால் போ, யாங்கூன் மாநில முதலமைச்சர் Phyo Min Thein உட்பட, 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஏறத்தாழ இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நடவடிக்கை குறித்துப் பேசிய, கருணா மறைப்பணி எனப்படும், காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி Joseph Mg Win அவர்கள், மியான்மார் அரசு இந்த மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நடுவதற்கு இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்தது என்றும், அடுத்த ஈராண்டுகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது என்றும் தெரிவித்தார். (UCAN)

09 July 2019, 15:03