பிரான்சின் லூர்து அன்னை திருத்தலம் பிரான்சின் லூர்து அன்னை திருத்தலம்  

துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக லூர்து நகரில் சிறப்புத் திருப்பலி

மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படும் சகோதரர், சகோதரிகளுடன் நாம் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாவிடினும், நம் செபங்கள் வழியே அவர்களுக்கு பெரும் ஆதரவாக நாம் இருக்கமுடியும் - கர்தினால் நிக்கோல்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும், தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக நாம் சிறப்பாக செபிக்கவேண்டும் என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், லூர்து நகர் மரியன்னை திருத்தலத்தில் ஆற்றிய ஒரு சிறப்புத் திருப்பலியில் அழைப்பு விடுத்தார்.

ஜூலை 24, இப்புதனன்று, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தின், புனித பத்தாம் பயஸ் பசிலிக்காவில் கூடியிருந்த பன்னாட்டு திருப்பயணிகளுக்கு சிறப்புத் திருப்பலியாற்றிய வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு கிறிஸ்தவர்கள் இன்று தங்கள் மத நம்பிக்கைக்காக பெரும் துன்பங்களையும், உயிரிழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர் என்று தன் மறையுரையில் கூறினார்.

மரியன்னையின் மீது கொண்டிருக்கும் பக்தியை வெளிப்படுத்தும் ஒரே நோக்கத்துடன், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நாம் இங்கு ஒரே குடும்பமாகக் கூடியுள்ளோம் என்று, தன் மறையுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா, ஐரோப்பா மற்றும் அமேரிக்கா ஆகிய கண்டங்களிலும், நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் அதிக துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிட்டார்.

துன்புறும் சகோதரர், சகோதரிகளுடன் நாம் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாவிடினும், நம் செபங்கள் வழியே அவர்களுக்கு பெரும் ஆதரவாக நாம் இருக்கமுடியும் என்றும், தங்கள் மத நம்பிக்கையைக் காப்பதற்கு அவர்கள் காட்டும் துணிவு நமக்கு பாடமாக அமையவேண்டும் என்றும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஜூலை 24ம் தேதி நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில், இங்கிலாந்தின் லிவர்பூல் உயர் மறைமாவட்டத்திலிருந்து 1,500க்கும் அதிகமானோரும், வெஸ்ட்மின்ஸ்டர் உயர் மறைமாவட்டத்திலிருந்து 700க்கும் அதிகமானோரும், மற்றும் 12 நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளும் கலந்துகொண்டனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2019, 14:37