தேடுதல்

இத்தாலிய ஆயர் பேரவை - திருத்தந்தையுடன் சந்திப்பு இத்தாலிய ஆயர் பேரவை - திருத்தந்தையுடன் சந்திப்பு 

தென் சூடான் மக்களுக்காக, 10 இலட்சம் யூரோக்கள்

இத்தாலிய ஆயர் பேரவை, கடந்த நான்கு ஆண்டுகளாக தென் சூடான் மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய ஆயர் பேரவை, தென் சூடான் மக்களுக்காக, 10 இலட்சம் யூரோக்கள் நிதி உதவியை, ஜூலை 9, இச்செவ்வாயன்று வழங்கியுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை அடைந்த தென் சூடான் மக்கள், இன்றளவும், பல்வேறு வழிகளில், பாகுபாடுகளையும், துன்பங்களையும் அடைந்து வருகின்றனர் என்று கூறியுள்ள இத்தாலிய ஆயர் பேரவை, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நாட்டிற்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

தென் சூடான் நாட்டில், 70 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்றும், 19 இலட்சம் மக்கள் நாட்டுக்குள்ளும், 23 இலட்சம் மக்கள் நாட்டுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்துள்ளனர் என்றும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது.

திருத்தந்தையின் அழைப்பின் பேரில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம், தென் சூடான் நாட்டின் தலைவர்கள் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு முக்கியமான சந்திப்பில், தென் சூடான் நாட்டில் கொழுந்துவிட்டெரியும் பிரிவினை நெருப்பு முற்றிலும் அணைக்கப்பட்டு, அங்கு மனிதரின் முன்னேற்றம் ஆரம்பமாக வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான வேண்டுகோள் விடுத்தார்.

தென் சூடான் தலைவர்கள், ஒப்புரவையும், அமைதியையும் கொணருமாறு இந்தச் சந்திப்பின் இறுதியில் கேட்டுக்கொண்டதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு தலைவரின் காலடிகளை முத்தம் செய்து, இவ்வேண்டுகோளை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:58