தேடுதல்

Vatican News
சனநாயக ஆதரவு ஆர்வலர் Joshua Wong  சனநாயக ஆதரவு ஆர்வலர் Joshua Wong   (AFP or licensors)

ஹாங் காங் இளையோர் அமைதி காக்க அழைப்பு

சட்டத்தை மீறி, அமைதியைக் குலைப்பதற்கும், வன்முறையை மேற்கொள்வதற்கும் எந்தக் குழுவினர் அழைப்பு விடுத்தாலும், அதனை ஏற்க மறுப்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹாங் காங் இளையோரின் முக்கிய கடமை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹாங் காங் சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள், அமைதி காத்து, தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டுமென்று, ஹாங் காங் பகுதியில் உள்ள அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கர்தினால் ஜான் டாங் ஹோன் (John Tong Hon) அவர்கள் தலைமையில் இணைந்துள்ள புத்தர்கள், கன்பூசிய மதத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர் அனைவரும் இணைந்து இளையோரிடம் இந்த விண்ணப்பத்தை முன் வைத்துள்ளனர்.

சட்டத்தை மீறுவதற்கும், அமைதியைக் குலைப்பதற்கும், வன்முறையை மேற்கொள்வதற்கும் எந்தக் குழுவினர் அழைப்பு விடுத்தாலும், அதனை ஏற்க மறுப்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோரின் முக்கிய கடமை என்று பல் சமய தலைவர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங் காங், 1997ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி, சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்நிகழ்வின் ஆண்டு நிறைவு நாளன்று, 5,50,000 பேர் சீன அரசின் அடக்கு முறைக்கு எதிராக, அமைதியாக ஊர்வலங்கள் மேற்கொண்டனர்.

இந்த ஊர்வலங்களில் செபங்களும், 'அல்லேலூயா' பாடல்களும் ஒலித்தன என்று ஊடங்கங்கள் கூறி வந்த வேளையில், ஒரு சில இளையோர், சட்ட மன்றத்தில் நுழைந்து, பொருள்களைச் சேதப்படுத்தினர் என்பதும், ஊடகங்களில் வெளியாயின.

இக்குழுவின் வன்முறைச் செயல்களால், உண்மையான போராட்டத்தின் முயற்சிகள் தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றன என்று கவலை வெளியிட்ட மதத் தலைவர்கள், சட்டங்களுக்கு உட்பட்டு, போராட்டங்களைத் தொடர்வதற்கு இளையோரிடம் விண்ணப்பித்துள்ளனர் (UCAN). 

03 July 2019, 15:19