தேடுதல்

Vatican News
இந்திய இளையோருக்கு வேலைவாய்ப்பு தரும் தொழில் கல்வி இந்திய இளையோருக்கு வேலைவாய்ப்பு தரும் தொழில் கல்வி  (AFP or licensors)

வேலையில்லா நிலை அதிகம் உள்ள இந்திய கிறிஸ்தவர்கள்

இந்தியாவில் வாழும் ஏனைய மதத்தவரைக் காட்டிலும், கிறிஸ்தவர்களிடையே வேலையில்லா நிலை அதிகம் உள்ளது - இந்திய சிறுபான்மையினர் துறையின் அமைச்சர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் வாழும் ஏனைய மதத்தவரைக் காட்டிலும், கிறிஸ்தவர்களிடையே வேலையில்லா நிலை அதிகம் உள்ளது என்று, இந்திய மக்களவையில், சிறுபான்மையினர் துறையின் அமைச்சர், Mukhtar Abbas Naqvi அவர்கள், அறிக்கையொன்றை சமர்ப்பித்தார்.

2017 மற்றும் 2018ம் ஆண்டு திரட்டப்ட்ட புள்ளிவிவரங்களின்படி, கிராமங்களில் வாழும் கிறிஸ்தவர்களிடையியே 6.9 விழுக்காடும், நகரங்களில் வாழும் கிறிஸ்தவர்களிடையே 8.8 விழுக்காடும் வேலையில்லா நிலை உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்துக்கள், இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்தவர் என்ற வெவ்வேறு மதத்தவருக்கிடையே மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிறிஸ்தவர்களிடையில், குறிப்பாக, கிறிஸ்தவ பெண்களிடையில் வேலையில்லா நிலை அதிகம் உள்ளதென்று கூறப்படுகிறது.

பொதுவாக, இந்திய இளையோரிடையே, வேலையில்லா திண்டாட்டம், பெரும் பிரச்சனை என்றாலும், அவர்களில், கிறிஸ்தவர்கள், குறிப்பாக, தலித்துக்கள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கத்தோலிக்க செய்தியாளர் ஜான் தயாள் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 96 கோடியே, 60 இலட்சம் மக்கள் இந்துக்கள், 17 கோடியே 20 இலட்சம் மக்கள் இஸ்லாமியர், மற்றும், 2 கோடியே 90 இலட்சம் பேர், கிறிஸ்தவர்கள், என்ற புள்ளி விவரங்களை, பீதேஸ் செய்தி வெளியிட்டுள்ளது. (Fides)

04 July 2019, 15:08