தேடுதல்

Vatican News
குவாத்தமாலா குடிபெயர்வோர் குவாத்தமாலா குடிபெயர்வோர்  

குடிபெயர்வோர் காத்திருக்கும் இடமாக குவாத்தமாலா?

பல்வேறு நாடுகளின் மக்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடிபெயரும் அனுமதிக்காக குவாத்தமாலாவில் காத்திருக்கும் காலத்தில், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அரசால் முடியுமா? ஆயர்கள் கேள்வி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடிபெயர விரும்பும் மக்களின் விண்ணப்பங்களை அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும்வரை, அம்மக்களை தங்கள் நாட்டில் வைக்க, குவாத்தமாலா நாடு கையெழுத்திடவிருக்கும் ஒப்பந்தம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர், குவாத்தமாலா ஆயர்கள்.

அனுமதியின்றி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் குடிபெயர முயலும் மக்களை, தடுத்து நிறுத்தி வைப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட, குவாத்தமாலா அரசுத் தலைவர் Jimmy Morales அவர்கள் முன்வந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கருத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய காத்திருக்கும் மக்களுக்கு குவாத்தமாலா அடைக்கலம் வழங்கும்போது, அவர்களின் தேவைகளை குவாத்தமாலா நாட்டால் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என கேட்டுள்ளனர்.

அனுமதியின்றி நுழைய முயலும் மக்களின் விண்ணப்பங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளால் ஆய்வுச் செய்யப்படும்வரை, அவர்களை குவாத்தமாலாவில் வைத்து காப்பாற்றும்படி அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளதால், இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் மக்கள், தங்கள் அனுமதிக்காக, குவாத்தமாலாவில் காத்திருக்கும் காலத்தில், அவர்களின் பாதுகாப்பு, நலஆதரவு, உறைவிடம், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை குவாத்தமாலா அரசால் வழங்கமுடியுமா என்பது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர், குவாத்தமாலா ஆயர்கள்.

15 July 2019, 16:23