தேடுதல்

மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் 

ஆதரவற்ற புலம்பெயர்ந்தோரிடம் தோழமையுணர்வு

2018ம் ஆண்டில், ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை, புலம்பெயர்தோர்க்கு, குறுகிய கால உதவிக்கென, 12 கோடியே 55 இலட்சம் யூரோக்களை செலவழித்துள்ளது - பேராயர் ஹெஸ்ஸே

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இனவெறியும், அந்நியர் மீது வெறுப்பும், இயேசுவின் நற்செய்திக்கு முரணானவை என்று, ஜெர்மனியின் ஹாம்பர்க் பேராயர் ஸ்டீபன் ஹெஸ்ஸே அவர்கள் கூறினார்.

ஜெர்மனியின் எஸ்ஸன் நகரில், நான்காவது கத்தோலிக்க புலம்பெயர்ந்தோர் மாநாட்டை, ஜூலை 4, இவ்வியாழனன்று தொடங்கி வைத்து உரையாற்றிய பேராயர் ஹெஸ்ஸே அவர்கள், புலம்பெயர்ந்தோரையும், குடிபெயர்ந்தோரையும் வரவேற்பது மற்றும் அவர்களுக்கு உதவுவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

ஜெர்மனியின் தேசிய மற்றும், மறைமாவட்ட காரித்தாஸ் அலுவலகங்கள், புலம்பெயர்ந்தோரை ஏற்கும் குழுக்கள், தன்னார்வலர்கள் என, ஏறத்தாழ 150 பிரதிநிதிகள், இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

தங்கள் வீடுகளைவிட்டு புலம்பெயரக் கட்டாயப்படுத்தப்படும் மக்களுக்கு உதவும் பணிகளில், எதிர்கொள்ளப்படும் அந்நியர் வெறுப்பை எவ்வாறு களைவது என்பது குறித்து, இம்மாநாட்டில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.   

பாதுகாப்புத் தேடும் மக்கள் மீது அன்பும், தோழமையுணர்வும், குறிப்பாக, நெருக்கடி நேரங்களில் குறைந்து வருகின்றன என்றும், ஜெர்மன் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான, பேராயர் ஹெஸ்ஸே அவர்கள் தெரிவித்தார்.

2018ம் ஆண்டில், ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை, புலம்பெயர்தோர்க்கு, குறுகிய கால உதவிக்கென, 12 கோடியே 55 இலட்சம் யூரோக்களை செலவழித்துள்ளது என்பதையும், பேராயர் ஹெஸ்ஸே அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2019, 15:06