தேடுதல்

கோஸ்டா ரிக்காவில் அரசுத்தலைவர் தேர்தல் கோஸ்டா ரிக்காவில் அரசுத்தலைவர் தேர்தல் 

தேசிய உரையாடலில் திருஅவை முக்கிய ஆலோசகர்

அனைத்து அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த திட்டங்களில், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்து, உண்மையான உரையாடல்கள் இடம்பெற வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கோஸ்டா ரிக்கா நாட்டில், தேசிய அளவில், பல்வேறு சமுதாய அமைப்புகளுடன் கலந்துரையாடலை நடத்துவது குறித்து, அந்நாட்டு அரசுத்தலைவர் Carlos Alvarado அவர்கள், ஆயர் பேரவைத் தலைவரான San José பேராயர் José Rafel Quirós அவர்களை, இரண்டு மணி நேரத்திற்குமேல் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஜூலை 3, இத்திங்களன்று, அரசுத்தலைவர் Carlos Alvarado அவர்கள் தலைமையிலான அரசு பிரதிநிதிகள் குழுவும், பேராயர் Quirós அவர்கள் தலைமையிலான தலத்திருஅவை பிரதிநிதிகள் குழுவும், இச்சந்திப்பில் கலந்துகொண்டன என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் இடம்பெறும், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தேசிய அளவிலான உரையாடல் கூட்டத்தில், கத்தோலிக்கத் திருஅவை முக்கிய ஆலோசகராகச் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும், அரசுத்தலைவர் Alvarado அவர்கள், பேராயர் Quirós அவர்களிடம் அளித்தார்.

இதற்கிடையே, ‘அமைதிக்காக உழைப்போர் பேறுபெற்றோர்’ என்ற தலைப்பில், கடந்த ஜூன் மாத இறுதியில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த திட்டங்களில், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்து, உண்மையான உரையாடல்கள் இடம்பெற வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமுதாய நீதி காக்கப்படல், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படல், அறநெறி விழுமியங்கள் காக்கப்படல், வளங்கள் சமமாகப் பகிரப்படல், சமுதாய உரையாடல் அவசியம் போன்றவற்றை ஆயர்கள், அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2019, 15:20