தேடுதல்

Vatican News
அமைதியைக் குறிக்கும் புறா வடிவம் அமைதியைக் குறிக்கும் புறா வடிவம்  (AFP or licensors)

கொலம்பியாவில் ‘அமைதிக்காக’ வார நிகழ்வு

கொலம்பியாவில், ‘அமைதிக்காக’ எனப்படும் வார நிகழ்வுகளின்போது, தேசிய மனித உரிமைகள் விருது வழங்கப்படும் மற்றும் தேசிய மனித உரிமைகள் நாள் சிறப்பிக்கப்படும். வாழ்வு மற்றும் அமைதிக்காக என, ஒரு நாள் அர்ப்பணிக்கப்படும்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கொலம்பியாவில் ஒவ்வொரு நாளும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ‘அமைதிக்காக’ எனப்படும் வார நிகழ்வு, இவ்வாண்டு வருகிற செப்டம்பர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை சிறப்பிக்கப்படவிருக்கின்றது.

அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள், அரசு-சாரா அமைப்புகள், சமய நிறுவனங்கள் சமுதாய இயக்கங்கள் போன்றவற்றின் சமுதாய ஆர்வலர்களைக் கொண்ட குழு, இந்நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகின்றது.

வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று இடம்பெறும் நிகழ்வில், ‘குறைந்தது ஆயிரம் பகுதிகளில் அமைதி’ என்ற அறிக்கை வெளியிடப்படவுள்ளது என, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

கொலம்பியாவில், கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நிகழ்வு, ‘நானும், நாமும் அமைதியின் பகுதி’ என்ற தலைப்பில், இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றது. (Fides)

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 1960களின் மத்திய பகுதியில், அரசுக்கும், புரட்சிக்குழுக்களுக்கும் இடையே துவங்கிய உள்நாட்டுப் போர், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, ஹவானாவில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தால், அப்போர் முடிவுற்றது. 

1958ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், இப்போரால் 2,20,000பேர் உயிரிழந்தனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (Fides)

19 July 2019, 15:08