மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோர் மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோர் குறித்த EUன் நிலைப்பாடு கவலையளிக்கின்றது

தற்போது மத்தியதரைக்கடல் பகுதியில் துன்பங்களை அனுபவிக்கும், நம் சகோதரர், சகோதரிகளின் வாழ்வு பற்றி கிறிஸ்தவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள், மத்தியதரைக்கடல் பகுதியில் காணாமல்போகும் புலம்பெயர்ந்தோரைத் தேடுவது மற்றும் அம்மக்களைக் காப்பாற்றுவது குறித்து, எந்த ஓர் உடன்பாட்டுக்கும் இசைவு தெரிவிக்காமல் இருப்பது, ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது என்று, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஜூலை 18, இவ்வியாழன், 19 இவ்வெள்ளி ஆகிய நாள்களில், ஹெல்சின்கி நகரில் ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக குடியமர்த்துவது குறித்து, பிரான்சும், ஜெர்மனியும் முன்வைத்த பரிந்துரைகளுக்கு ஒருமித்த உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இப்பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல்கள் வருகிற செப்டம்பரில் தொடர்ந்து நடைபெறும் எனவும், அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தனது ஏமாற்றத்தைப் பதிவுசெய்துள்ள, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள் அவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் (CCME)  பொதுச் செயலர் Torsten Moritz அவர்கள், மத்தியதரைக்கடல் பகுதியில் காணாமல்போகும் புலம்பெயர்ந்தோரைத் தேடுவது மற்றும் அவர்களைக் காப்பாற்றுவது குறித்து, மிகச்சிறிதளவு தீர்வுகளுக்குக்கூட இசைவு தெரிவிக்கப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள், கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருந்தவேளை, மக்கள் கைவிடப்பட்ட நிலையில், கடலில் இறந்துகொண்டிருந்தனர் என்றும், Moritz அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், மனித சமுதாயத்தின், குறிப்பாக, தற்போது, மத்தியதரைக்கடல் பகுதியில் துன்பங்களை அனுபவிக்கும், நம் சகோதரர், சகோதரிகளின் வாழ்வு பற்றி கிறிஸ்தவர்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்று, அப்பணிக்குழுவின் தலைவர் Christian Krieger அவர்கள் கூறினார். (ICN/ CCME)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2019, 14:31