தேடுதல்

கத்தோலிக்கச் சீர்திருத்தம் 1521-1648 கத்தோலிக்கச் சீர்திருத்தம் 1521-1648 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும் - பகுதி 9

கத்தோலிக்க சீர்திருத்த நடவடிக்கைகள், போலந்து, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்ட்ரியா, தெற்கு ஜெர்மனி, தற்போதைய செக் குடியரசு, தற்போதைய பெல்ஜியம், குரோவேஷியா, சுலோவேனியா போன்ற பகுதிகளில், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் குறைவதற்குக் காரணமாயின

மேரி தெரேசா – வத்திக்கான்

பிரிந்த கிறிஸ்தவ சபைகளுக்குப் பதிலளிக்கும் முறையில், கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தங்களை முதலில் தொடங்கி வைத்தவர், திருத்தந்தை 3ம் பவுல் (1534–1549). கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்பு முறையில் சீர்திருத்தம் அவசியம் எனச் சொல்லி, திரிதெந்து பொதுச்சங்கத்தையும் (1545–1563), இவர் ஆரம்பித்து வைத்தார். ஊழல் ஆயர்கள், அருள்பணியாளர்கள் விவகாரம், பாவ மன்னிப்புகள் விற்பனை மற்றும், நிதி அமைப்புகளில் ஊழல்கள் போன்ற பிரச்சனைகள் நிறைந்த விவகாரங்களை அகற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார் இவர். திரிதெந்து பொதுச்சங்கம், மத்தியகால திருஅவையின் அடிப்படை அமைப்புமுறையை, அதாவது திருஅவையின் அருள்சாதன அமைப்புமுறை, துறவு சபைகள், கோட்பாடுகள், திருப்பலி சடங்குகள் போன்றவற்றை உறுதி செய்தது. பிரிந்த கிறிஸ்தவ சபையினருடன் உடன்பாட்டுடன் செல்வதைப் புறக்கணித்து, உரோமன் கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியது. பிரிந்த கிறிஸ்தவ சபையினர் வலியுறுத்தியது போன்று, விசுவாசத்தினால் மட்டும் ஒருவர் மீட்படைவதில்லை என்பதை தவிர்த்து,  விசுவாசம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் ஆற்றப்படும் பணிகள் வழியாக கிடைக்கும் திருவருளால் மீட்பு கிடைக்கின்றது என்பதையும் திரிதெந்து பொதுச்சங்கம் உறுதி செய்தது. ஏனெனில் புனித யாக்கோபு திருமுகத்தில் (2:22–26) கூறியிருப்பது போன்று, "மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர். உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே".

திரிதெந்து பொதுச்சங்கம்

புனித எரோனிமுஸ் அவர்கள், எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து இலத்தீனுக்கு மொழி பெயர்த்த விவிலியம், வுல்காத்தா எனப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பை திரிதெந்து பொதுச்சங்கம் கத்தோலிக்க திருஅவையின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பு என அறிவித்தது. வுல்காத்தா விவிலியத்தில், பழைய ஏற்பாட்டு நூலில், பிரிந்த கிறிஸ்தவ சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களையும், அப்பொதுச்சங்கம் அதிகாரப்பூர்வமாக ஏற்றது. உரோமன் மறைக்கல்வியை, திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனையாகவும், அப்பொதுச்சங்கம் அறிவித்தது. இந்த மறைக்கல்வி, 1992ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி நூல் வெளிவரும் வரை திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனையாக இருந்து வந்தது. திருஅவையின் நிர்வாகம் மற்றும் நன்னடத்தையை மேம்படுத்தவும், இப்பொதுச்சங்கம் முயற்சி செய்தது. இப்பொதுச்சங்கம், தனது புண்ணியச் செயல்களால், திருஅவையைத் தாக்கியிருந்த உலகப்போக்கு எழுச்சி கைவிடப்படும்படிச் செய்தது. துறவு சபைகளின் வாழ்வுமுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மற்றும், நன்னடத்தைகள் மேம்பட்டன. பங்குத்தளம் வலியுறுத்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக இடம்பெற்ற ஆயர் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடந்த காலத்தில், பல ஆயர்கள், பெரும் நிலப்பண்ணையாளர்களாக இருந்ததால், தங்கள் மறைமாவட்டங்களில் வாழாமல், உரோமையில் அல்லது எஸ்டேட்டுகளில் வாழும் நிலைக்கு உள்ளாயினர். இத்தகைய ஆயர்கள், "விடுப்பு ஆயர்கள்" என அழைக்கப்பட்டனர். இந்த வாழ்வுமுறையை திரிதெந்து பொதுச்சங்கம் இரத்து செய்தது. அதேநேரம்,  துறவு வாழ்வை மேற்பார்வையிடுவதற்கு ஆயர்களுக்கு அதிக அதிகாரமும் கொடுக்கப்பட்டது. மிலான் பேராயர் புனித சார்லஸ் பொரோமெயோ (1538–1584) அவர்கள் போன்ற, திருஅவை மீது மிகவும் பற்றார்வமுள்ள ஆயர்கள், ஒதுக்குப்புறங்களிலிருந்த பங்குத்தளங்களைப் பார்வையிட்டும், உயர்குடி வாழ்வைப் புறக்கணித்தும் வாழ்ந்து, மற்ற ஆயர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். 

கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தம்

திருத்தந்தை 6ம் அலெக்சாந்தர் (1492–1503) காலத்தில், திருஅவையில் அதிகமாக நிலவத் தொடங்கிய, உலகப்போக்கு சார்ந்த வாழ்வுமுறை, 16ம் நூற்றாண்டில் திருத்தந்தை 10ம் லியோ (1513–1521) காலத்தில் உச்சத்தை எட்டியது. வத்திக்கானில் புனித பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டுவதற்கு, நிதி திரட்டும் நடவடிக்கையில், பாவ மன்னிப்புக்கு நிதி வழங்கும் முறைக்கு இத்திருத்தந்தை ஆதரவளித்தார். இந்நடவடிக்கையே, மார்ட்டின் லூத்தர் அவர்கள், 1517ம் ஆண்டில், 95 கொள்கைகளை எழுதி, ஜெர்மனியின் விட்டன்பர்க் ஆலயத்தில் ஒட்டச் செய்தது. இதுவே, கத்தோலிக்கத் திருஅவையில், மேலும் ஒரு பிளவு ஏற்பட்டு, பிரிந்த கிறிஸ்தவ சபை உருவாகவும் காரணமானது. கத்தோலிக்கத் திருஅவை, இத்தகைய பிரச்சனைகளுக்கு, சீர்திருத்தத்தின் வழியாகத், தீவிரமாகப் பதிலளித்தது. கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தம் கொண்டுவர எடுத்த முயற்சிகளில், திருஅவையின் அடிப்படை மரபுகள் உறுதிசெய்யப்பட்டன. அருள்பணியாளர்களுக்கும், பொதுநிலையினருக்கும் இடையே வளர்ந்துவந்த இடைவெளி சரிசெய்யப்பட்டது. மேலும், கிராமங்களில் பங்குப்பணியாற்றிய பல அருள்பணியாளர்கள், போதுமான கல்வியறிவு பெறாமல் இருந்தனர். அவர்களுக்கு இலத்தீன் மொழி தெரியவில்லை மற்றும், முறையான இறையியல் பயிற்சிகளும் கிடைக்கவில்லை. எனவே, அருள்பணியாளர்கள், இறையியல் மற்றும் திருவெளிப்பாடுகளில் நன்கு கல்வியறிவு பெற வழிசெய்யப்பட்டது. அதேநேரம், கலை மற்றும் திருவழிபாட்டின் அர்த்தம், இயல்பு, மதிப்பு ஆகியவை பற்றி, விசுவாசிகளுக்கு விளக்குவதற்கு திருத்தந்தையின் அதிகாரிகள் முயற்சித்தனர். அருள்பணியாளர்கள், நல்லவர்களாகவும், ஒப்புரவு அருள்சாதனத்தை திறமையாக வழங்குபவர்களாகவும் விளங்குவதற்கு, கையேடுகள் வழங்கப்பட்டன.

பிரிந்த கிறிஸ்தவ சபைகளும், கத்தோலிக்கமும்

டச்சு கிளர்ச்சியில், கால்வனிச பிரிந்த கிறிஸ்தவ சபையினர், நெதர்லாந்தின் பல்வேறு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவேளை, கத்தோலிக்கர், இஸ்பெயின் அரசர் 2ம் பிலிப் அவர்களின் ஆதரவுடன், அதனை எதிர்த்தனர். இஸ்பானிய அரசரின் கட்டுப்பாட்டிலிருந்த நெதர்லாந்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட, Alexander Farnese என்பவர் 1578ம் ஆண்டு முதல், 1592ம் ஆண்டு முடிய, டச்சு கிளர்ச்சிக்கு எதிராய்ப் போராடி வெற்றி பெற்றார். அதன் பயனாக, தென் இஸ்பெயினிலிருந்த பெல்ஜியத்தில் முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டன. அவை, கத்தோலிக்க இஸ்பெயினிடம் திருப்பி அளிக்கப்பட்டன. கால்வனிச சபையினரின் கட்டுப்பாட்டிலிருந்து வேறுபல மாநிலங்களையும் இவர் கைப்பற்றினார். இறுதியில், Antwerp துறைமுக நகரைக் கைப்பற்றினார். 1585ம் ஆண்டில், அந்நகரின் அறுபதாயிரம் குடிமக்கள் சரணடைந்தனர். இதனால், தெற்கு நெதர்லாந்து, இஸ்பானியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பிரிந்த சபையினருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் கத்தோலிக்கத்தில் சேர்ந்தனர்.

அதேநேரம், வடக்கிலிருந்த கத்தோலிக்கப் புலம்பெயர்ந்தோர், கொலோன் மற்றும் Douai நகரங்களில் கூடி, புரட்சியாளர்களாக மாறினர். இது, பெல்ஜியம் நாடு உருவாக காரணமானது. 1583ம் ஆண்டிற்கும், 1589ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கும், கத்தோலிக்க குழுக்களுக்கும் இடையே கொலோன் போர் இடம்பெற்றது. அதில், அப்பகுதியை ஆட்சி செய்த பேராயர், பிரிந்த கிறிஸ்தவ சபைக்கு மாறியதால், கத்தோலிக்கர், பவேரியாவின் எர்னஸ்ட் என்பவரை, பேராயராக நியமித்தனர். இவர், எல்லாரையும் தோற்கடித்தார். பிரான்சிலும், ப்ரெஞ்ச் சீர்திருத்த கிறிஸ்தவ சபையினராகிய Huguenots என்பவர், கத்தோலிக்கருடன் போர்களை நடத்தினார். இதில், இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். பின்னர், 1685ம் ஆண்டில் வெளியிடப்பட்ட Fontainebleau அறிக்கையில், சமய சுதந்திரம் அளிக்கப்பட்டது.   

Ruthenian ஆர்த்தடாக்ஸ்

திரிதெந்து பொதுச்சங்கம் மற்றும், கத்தோலிக்கச் சீர்திருத்தங்களின் பயனாக, Ruthenian ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், தங்களின் பைசான்டைன் மரபுகளைக் கைவிடாமல் கத்தோலிக்கத் திருஅவையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 1596ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதியன்று, திருத்தந்தை 8ம் கிளமென்ட் அவர்கள், Ruthenian ஆயர்களை, கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைத்துக்கொண்டார். Ruthenian கிறிஸ்தவ மரபுப்படி, அருள்பணியாளர்கள் திருமணமானவர்கள் மற்றும், ஆயர்கள், அந்த கிறிஸ்தவ மரபின்படி திருப்பொழிவு செய்யப்பட்டவர்கள்.

16ம் நூற்றாண்டில் உருவான பிரிந்த கிறிஸ்தவ சபையினர் எழுப்பிய விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் முறையில் கத்தோலிக்கத் திருஅவையில் ஏற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள்,  போலந்து, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, இன்னும், Habsburg பேரரசரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஆஸ்ட்ரியா, தெற்கு ஜெர்மனி, தற்போதைய செக் குடியரசு, தற்போதைய பெல்ஜியம், குரோவேஷியா, சுலோவேனியா போன்ற பகுதிகளில், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் குறைவதற்குக் காரணமாயின. ஆயினும், இவை ஹங்கேரியில் முழுமையாக வெற்றிபெறவில்லை. அந்நாட்டில், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் சிறுபான்மையினராக இன்றும் உள்ளனர்.

ஹங்கேரியில் கிறிஸ்தவம்

ஹங்கேரி அரசர் முதலாம் ஸ்தேவான் அவர்கள், ஆயிரமாம் ஆண்டில், திருமுழுக்குப் பெற்று, அரசராகப் பதவியேற்றார். இவர், உரோமன் கத்தோலிக்கத்தை, அரசு மதமாக அறிவித்தார். ஆயினும், 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற பிரிந்த கிறிஸ்தவ சபை சீர்திருத்தத்தில், பெருமளவு மக்கள், முதலில் லூத்தரன் சபையிலும், பின்னர், கால்வனிச சபையிலும் இணைந்தனர். எனினும், 16ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், இயேசு சபையினரின் தலைமையில் இடம்பெற்ற சீர்திருத்தத்தால், ஹங்கேரி மக்கள், மீண்டும் கத்தோலிக்கத்தில் இணைந்தனர். ஆயினும் ஹங்கேரியின் சில பகுதிகள், பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் இடங்களாகவே இன்றும் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2019, 11:35