தேடுதல்

Vatican News
அருள்பணி மத்தேயோ ரிச்சி அருள்பணி மத்தேயோ ரிச்சி   (ANSA)

சாம்பலில் பூத்த சரித்திரம்: கிறித்தவமும் சீர்திருத்தமும்-பகுதி12

சீனப் பேரரசில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கிறிஸ்தவ மறைபரப்புப் பணியில் முழுமையாய் ஈடுபட்ட இயேசு சபை அருள்பணி மத்தேயோ ரிச்சி அவர்கள், தனது 57வது வயதில், 1610ம் ஆண்டில் பெய்ஜிங்கில் இறைபதம் சேர்ந்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

கி.பி.1545ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, வட இத்தாலியாவிலுள்ள த்ரெந்தோ (Trento) நகரில் துவங்கிய பொதுச்சங்கம், கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பொதுச்சங்கம், 1563ம் ஆண்டு டிசம்பர் 4ம் நாள் வரை, மூன்று கட்டமாக, 25 அமர்வுகளாகச் செயல்பட்டது. இதில் 255 ஆயர்கள் கலந்துகொண்டனர். இந்த திரிதெந்து பொதுச்சங்கம், கத்தோலிக்கத் திருஅவையைவிட்டுப் பிரிந்த சீர்திருத்த சபைகளுக்குப் பதில் அளிப்பதற்கும், கத்தோலிக்க கோட்பாடுகளை உறுதிப்படுத்தி, திருஅவையில் சீர்திருத்தம் கொணர்வதற்குமென திருத்தந்தை மூன்றாம் பவுல் அவர்களால் கூட்டப்பட்டது. இப்பொதுச்சங்கத் தீர்மானங்களின் அடிப்படையில், திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், துறவு சபைகளுக்கு அங்கீகாரம் அளித்தார். புனித இலொயோலா இஞ்ஞாசியார் தலைமையில் பிறந்த இயேசு சபையும் அவற்றில் ஒன்று.  இயேசு சபை, பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் கருத்தியல்களுக்கு மாற்றாக, கத்தோலிக்க கோட்பாடுகளை உறுதிப்படுத்தியது. இச்சபையினர், தொடக்கமுதல், பெரும்பாலும் கல்விக்கும், அறிவுப்புலமைக்கும் முக்கியத்துவம் அளித்து கல்லூரிகளை அமைத்தனர். அதேநேரம், அச்சபையில், மறையுரையாளர்களும், மறைக்கல்வி ஆசிரியர்களும் உருவாக்கப்பட்டு, இளையோர், நோயாளிகள், கைதிகள், பாலியல் தொழிலாளர்கள் மற்றும், படைவீரர்களுக்குப் பணியாற்றுவதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். ஐரோப்பாவில் அரச குடும்பங்களுக்கும், ஆட்சியாளர் குடும்பங்களுக்கும், ஒப்புரவு திருவருள்சாதனம் கேட்கும் பொறுப்பும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் மறைப்பணி

புனித இஞ்ஞாசியாரும், அவரது ஆறு தோழர்களும் பாரிசில் படிப்பை முடித்தபின், புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்குச் சென்றனர். அங்கு ஓராண்டுக்குமேல் காத்திருந்தும், புனித பூமிக்குச் செல்ல இயலவில்லை. அதனால் அந்த எழுவரும், புதிதாக அவர்களுடன் இணைந்தவர்களும் உரோம் நகர் வந்து திருத்தந்தையிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், மத்திய இத்தாலி முழுவதும் அவர்கள் ஆற்றிய போதனைகள் மற்றும், நோயாளிகளைப் பராமரித்த முறை எல்லாரையும் கவர்ந்தன. இதனால் பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களை தங்கள் பகுதிகளில் பணியாற்ற அழைத்தனர். இவ்வாறு விரும்பிய அரசர்களில் ஒருவரான, போர்த்துக்கல் நாட்டு அரசர் 3ம் ஜான் என்பவர், அவரது புதிய ஆசியக் காலனிகளில் நற்செய்தியை அறிவிக்கவும், கிறிஸ்தவர்களுக்கு மறைப்பணியாற்றவும், இயேசு சபையினரை அழைத்தார். இப்பணிக்கு புனித இஞ்ஞாசியார் தேர்ந்தெடுத்த இருவர், நோயால் தாக்கப்படவே, தனது முதல் ஆறு தோழர்களில் சிறந்த கொடையான, புனித பிரான்சிஸ் சவேரியாரையும், மேலும் மூவரையும், கீழை நாடுகளுக்கு அனுப்பினார். 1540ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, பிரான்சிஸ் சவேரியாரும், மற்றவரும் உரோமிலிருந்து முதலில் லிஸ்பன் சென்றனர். இவர்களில் சவேரியார் மட்டும், 1542ம் ஆண்டு மே 6ம் தேதி கோவாவுக்குப் பயணமானார். மற்றவர்கள் லிஸ்பனிலே தங்கி பணியாற்றினர். எனவே, இயேசு சபை திருத்தந்தையால் அங்கீகாரம் பெறுவதற்கு முன்னரே, அச்சபையினர் வெளிநாடுகளில் மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டனர். ஏனெனில் திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதிதான், இயேசு சபையை அதிகாரப்பூர்வமாக, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.

இயேசு சபையினர் ஆரம்பத்திலிருந்தே திருத்தூதுப் பணிகளில் மிகவும் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டுவந்தபோதிலும், அறிவியல் ஆய்வுகளிலும், புதிய உலகங்களுக்குப் பயணம் மேற்கொள்வதிலும் சுடர்விட்டனர். இத்தாலியரான மத்தேயோ ரிச்சி (Matteo Ricci அக்.6,1552-மே,11,1610), என்பவர், தனது மூத்த இயேசு சபையினரின் வாழ்வால் உந்துதல் பெற்று, புகழ்பெற்ற கணிதமேதை கிறிஸ்டோபர் கிளாவியுஸ் என்பவரின்கீழ் அறிவியல் கல்வி கற்றார். அதோடு, இவர், வெளிநாடுகளில் மறைப்பணியாற்றும் ஆர்வத்தால், கிழக்கு ஆசியாவுக்குச் செல்ல முன்வந்தார். 1577ம் ஆண்டு மே மாதத்தில், போர்த்துக்கல் நாட்டுக்குச் சென்று, கப்பல் பயணத்திற்காகக் காத்திருந்தவேளையில், Coimbra பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் படித்தார். பின், அதே ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி போர்த்துக்கீசியரின் முக்கிய இடமான கோவா சென்றார். அங்கு அருள்பணியாளருக்குரிய கல்வியை முடித்து, 1580ம் ஆண்டில், கொச்சின் நகரில் திருப்பொழிவு பெற்று, மீண்டும்  கோவா திரும்பினார். 1582ம் ஆண்டு ஏப்ரலில் சீனாவுக்குச் செல்லுமாறு அவர் பணிக்கப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்காவோ சென்றடைந்த அருள்பணி மத்தேயோ ரிச்சி.

சீனாவில் அருள்பணி ரிச்சி

மக்காவோ நகரில், உடனடியாக சீன மொழியைக் கற்கத் தொடங்கினார் ரிச்சி. அடுத்த ஆண்டில், இவரும், Michele Ruggieri அவர்களும், சீனாவின் Zhaoqing நகரில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Luo Mingjian என சீனாவில் அறியப்பட்ட Ruggieri அவர்கள், சீன இயேசு சபை மறைப்பணித்தளத்தை உருவாக்கியவர். இவர்கள் இருவரும், முதலில் கிறிஸ்தவம் பற்றி வெளிப்படையாகப் போதிப்பதற்குமுன், சீன இலக்கியம் மற்றும், சீன நடைமுறைகளைக் கற்று, எடுத்துக்காட்டான நல்வாழ்வால், சீன மக்களின் மனங்களில் இடம்பிடித்தனர். இவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டநிலையிலும், Ruggieri அவர்கள், சீன மொழியில் முதல் கத்தோலிக்க மறைக்கல்வி ஏட்டை வெளியிட்டார். ரிச்சி அவர்களும், 1602ம் ஆண்டில், “பத்தாயிரம் நாடுகளின் மாபெரும் வரைபடம்” என்ற புகழ்பெற்ற, உலக வரைபடத்தை, ஐரோப்பிய முறையில் சீன மொழியில் வெளியிட்டார். இதுவே, ஐரோப்பியர்கள் கிழக்கு ஆசியாவில் நுழைவதற்கு உதவியது. 1589ம் ஆண்டில்,  தற்போதைய Shaoguan (Shaozhou) நகரில் குடியேறிய ரிச்சி அவர்களுக்கு, கன்ஃபூசிய மத வல்லுனர் Qu Taisu அவர்களின் நெருங்கிய நட்பு கிடைத்தது. ரிச்சி, அவருக்கு கணிதம் கற்றுக் கொடுத்தார். அதற்குப் பிரதிபலனாக, Qu Taisu அவர்கள், சீனப் பேரரசின் உயர்மட்ட பொது மற்றும் இராணுவ அதிகாரிகளையும், கன்ஃபூசிய வல்லுனர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். இவரின் ஆலோசனையின்படி, ரிச்சி அவர்களும், புத்தமத துறவிகளின் ஆடைக்கு மாறினார். அதைத் தொடர்ந்து, வெளிநாட்டவர் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டிருந்த பெய்ஜிங் நகருக்குச் செல்ல முயற்சித்தார் ரிச்சி. ஆனால், சீன-ஜப்பானிய போரால், இவர் முதலில் Nanchangலும், பின்னர் Nanjingலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.  

பெய்ஜிங்கில் அ.பணி ரிச்சி

ரிச்சி அவர்கள், Nanchang நகரில் தங்கியிருந்த மூன்று ஆண்டுகளில் (1595-1598), இரு இளவரசர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதால், நட்பு பற்றி சீன மொழியில் தனது முதல் நூலை எழுதினார். Nanjingல் இவர் தங்கியிருந்தபோது (பிப்.1599), வானயியல் மற்றும் புவியியலில் கவனம் செலுத்தினார். இந்நகரில் அவருக்கு கிடைத்த வரவேற்பால், மீண்டும் பெய்ஜிங் செல்ல முயற்சித்தார். Wanli பேரரசரும், வானயியல், அறிவியல் நாள்காட்டி போன்ற விடயங்களில் ரிச்சி அவர்களின் உதவியைப் பெறும் நோக்கத்தில், 1601ம் ஆண்டு சனவரியில், அரண்மனை ஆலோசகராக, பெய்ஜிங் நகருக்கு அழைப்பு விடுத்தார். ஏனெனில் சீன உலகில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரியக் கிரணங்கள் பற்றி ரிச்சி அவர்கள், முன்னறிவித்த அவரது திறமையை பாராட்டும் விதமாக இப்பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பெய்ஜிங் நகரில் எங்கும் சுதந்திரமாகச் செல்வதற்கு இவர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தனிமையை விரும்பிய Wanli பேரரசரை மட்டும் இவர் ஒருபோதும் சந்திக்கவில்லை. எனினும் பேரரசர் அவருக்குத் தாராளமாக நிதி உதவி செய்தார் மற்றும், சீனாவின் முதல் உலக வரைபடம் முடிக்கப்பட ஆதரவளித்தார். ரிச்சி அவர்கள், இறப்புவரை பெய்ஜிங்கில் தங்கியிருந்தார். அச்சமயத்தில், பல நூல்களை The Secure Treatise on God (1603), The Twenty-five Words (1605), The First Six Books of Euclid (1607), The Ten Paradoxes (1608) சீன மொழியில் எழுதினார். கிரேக்க கணிதவியல் அறிஞர் Euclid அவர்களின் 13 கணித நூல்களை உள்ளடக்கிய ஆய்வுக்கட்டுரைகளை சீன மொழியிலும், கன்பூசியுஸ் அவர்களின் இலக்கியத்தை முதல்முறையாக இலத்தீனிலும் மொழிபெயர்க்க உதவிய Xu Guangqi, இன்னும், Li Zhizao, Yang Tingyun உட்பட பல முக்கிய சீன அதிகாரிகளையும், முன்னணி உறுப்பினர்களையும் இவர் கத்தோலிக்கத்திற்கு மனமாற்றினார். இந்த மூன்று அதிகாரிகளும், “சீனாவில் துவக்ககாலக் கிறிஸ்தவத்தின் மூன்று தூண்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், மறைப்பணியாளர்களுக்கு, குறிப்பாக, இலக்கியம் சார்ந்த பணிகளுக்கு அதிகம் உதவினர். ரிச்சி அவர்கள், போர்த்துக்கீசிய-சீன அகராதியை தயாரித்தார். இதுவே ஐரோப்பிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதல் அகராதியாகும். பெய்ஜிங்கில் அமலமரி பேராலயத்தை இவர் எழுப்பினார்.

சீனப் பேரரசில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கிறிஸ்தவ மறைபரப்புப் பணியில் முழுமையாய் ஈடுபட்ட இயேசு சபை அருள்பணி மத்தேயோ ரிச்சி அவர்கள், தனது 57வது வயதில், 1610ம் ஆண்டில் பெய்ஜிங்கில் இறைபதம் சேர்ந்தார். இவர் இம்மண்ணகம் விட்டு மறைந்த 400வது ஆண்டான, 2010ம் ஆண்டில், இத்தாலியில் அவர் பிறந்து வளர்ந்த Macerata மறைமாவட்டம், அவரைப் புனிதராக்கும் முயற்சியை மீண்டும் துவக்கியுள்ளது.

24 July 2019, 13:07