தேடுதல்

Vatican News
புனித லொயோலா இஞ்ஞாசியார் புனித லொயோலா இஞ்ஞாசியார் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும்-பகுதி 11

இயேசு சபை ஆரம்பித்த 16 ஆண்டுகளில், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் புதிய உலகில், அச்சபையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் இருந்தனர்.

மேரி தெரேசா – வத்திக்கான்

16ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெற்ற பெரும் பிரவினைச் சூழலில், லூத்தரன் சபையினர், கால்வனிச சபையினர், மற்றும் ஆங்லிக்கன் சபையினரின் கருத்தியல்களுக்குப் பதிலளிக்கும் முறையில், கத்தோலிக்கத் திருஅவையில் மாற்றுச்சீர்திருத்தங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக,  அப்போதைய  திருத்தந்தை 3ம் பவுல் (திருத்தந்தையாக 1534–1549) அவர்கள், புதிய துறவு சபைகளுக்கு அனுமதியளித்தார். அச்சபைகளில் ஒன்று இயேசு சபை. 1540ம் ஆண்டில், புனித லொயோலா இஞ்ஞாசியாரால் துவங்கப்பட்ட இச்சபை, கத்தோலிக்கத் திருஅவையின் மாற்றுச்சீர்திருத்தத்தில் முக்கிய முகவராகச் செயல்பட்டது. இச்சபை, முதல் கிறிஸ்தவர்கள் வாழ்வுமுறையைப் பின்பற்றி, உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வலியுறுத்தியது. உலகப்பொருள்களையும், ஆடரம்ப வாழ்வையும் துறந்து, ஆழமான பற்றுறுதியுடன், ஆன்மீக வாழ்வை வாழத் தூண்டியது. அக்கால நிலவரத்தில், இளையோர் கல்வி, சீர்திருத்த எண்ணங்களை விதைப்பதற்கு தடங்கலாக இருந்ததை உணர்ந்து, கல்லூரிகளை உருவாக்கி நடத்த ஆரம்பித்தது அச்சபை. எனவே, இயேசு சபை கல்லூரிகள், பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் கோட்பாடுகளுக்குப் பதிலளிப்பதற்கு முதன்மைக் கருவிகளாகச் செயல்பட்டன. மேலும், இயேசு சபையினர், தங்களின் சீர்திருத்த கருத்தியல் தொகுப்புகளில் ஒன்றாக, திருத்தந்தைக்கு, தங்களின் முழுமையான ஆதரவையளித்தனர். பெருங்கடல் பயணம், மற்றும் புதிய உலகக் கண்டுபிடிப்பின் புதிய யுகத்தில், பல நாடுகளில் பயனுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அச்சாரம் இட்டனர்.

புனித லொயோலா இஞ்ஞாசியார்

இயேசு சபையை தோற்றுவித்த, இனிகோ எனப்படும் இஞ்ஞாசியார் அவர்கள், இஸ்பெயின் நாட்டின் வடக்கேயுள்ள பாஸ்கு பகுதியில், 1491ம் ஆண்டு, உயர்குலத்தில் பிறந்தவர். இவர், தனது இளமைகால வாழ்வை, தனது குடும்ப லொயோலா அரண்மனையையும், பம்பலூனா கோட்டையையும், பிரான்ஸ் நாட்டுப் போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் போர்ப் பணியிலேயே செலவழித்தார். 1521ம் ஆண்டில், எதிரியின் பீரங்கிக்குண்டுகள், பம்பலூனா கோட்டையைத் தகர்த்ததுடன், கர்ச்சிக்கும் சிங்கமென எதிர்த்துப் போரிட்ட இஞ்ஞாசியாரின் காலையும் துளைத்துச் சென்றன. அவரின் முறிந்த எலும்புகளை எடுத்து வைத்துக்கட்டி மருத்துவம் பார்த்தனர். ஆனால் அவை சரியாகப் பொருந்தாததால், மீண்டும் ஒருமுறை சிகிச்சையளிக்கப்பட்டது. மயக்கமருந்து கொடுக்கப்படாமல் அளிக்கப்பட்ட அச்சிகிச்சையில், கடும் வேதனையை அனுபவித்தார் அவர். பல நாள்களாக படுக்கையில் இருந்த அவருக்கு, வழக்கமாக விரும்பி வாசிக்கும் காதல்கதை நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால், அந்த அரண்மனையிலிருந்த பல புனிதர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களும், கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நூல்களும் வாசிக்கக் கொடுக்கப்பட்டன. பொழுதுபோக்குக்காக இந்நூல்களை வாசிக்கத் தொடங்கிய இவர், அவற்றை ஆழ்ந்து வாசிக்க வாசிக்க, இவ்வுலகப் பொருள்கள், பதவிகள், உயர்குல ஆடம்பர வாழ்வு போன்றவற்றின் நிலையற்ற தன்மையை உள்ளூர உணர்ந்தார். அதுமுதல், இறைவனின் மிகஉன்னத மகிமைக்காக உழைக்க வேண்டும் என்பது, அவரது ஆணித்தரமான குறிக்கோளாக உருவெடுத்தது. புனிதர்கள் தொமினிக், அசிசி நகர் பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வு பற்றி வாசித்தபோது, இவர்களால் செய்ய முடிந்தால், ஏன் என்னாலும் முடியாது, நானும் செய்வேன் என உறுதிபூண்டார், அந்த மாபெரும் போர்வீரர். இந்த இரு புனிதர்கள் ஆரம்பித்திருந்த மாபெரும் துறவு சபைகளுக்குச் சமமாக, தானும் ஒரு சபையைத் தொடங்குவேன் என உறுதி எடுத்தார். ஆயினும் இதற்கு, நீண்டகாலம் தன்னையே தயார் செய்தார், இஞ்ஞாசியார். படுக்கையிலிருந்த அவருக்கு, அன்னை மரியா, குழந்தை இயேசுவுடன் அளித்த காட்சியும் மாபெரும் ஊக்கமளித்தது.

ஆன்மீகப் பயிற்சிகள்

இவர் குணமான ஓராண்டுக்குப் பின்னர் எருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்குச் சென்ற வழியில், பார்சலோனாவிற்கு புறநகரிலிருந்த Montserrat புனித அன்னை மரியா ஆலயம் சென்று, மூன்று நாள்கள், நோன்புடன் கடும்தவம் மேற்கொண்டார். பெனடிக்ட் சபை துறவிகளிடம் தியானமும் செய்தார். தன் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருளடையாளத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர், தனது உயர்குல ஆடைகளை, ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, தனது இடைவாளையும் அந்த ஆலயத்தில் தொங்கவிட்டார். அதற்கு அடுத்த 11 மாதங்கள், பார்சலோனாவிற்கு அருகிலிருந்த மன்ரேசா (Manresa) குகையில் தங்கி, மருத்துவமனையில் சேவைபுரிவதிலும், தவத்திலும் செலவழித்தார். மன்ரேசா குகையில் தங்கியிருந்த அந்த நாள்களில் அவர் கண்ட பல இறைக்காட்சிகள் மற்றும், அனுபவித்த ஆன்மீக அனுபவங்களை, எழுதினார். அவையே புனித இஞ்ஞாசியாரின், ஆன்மீகப் பயிற்சிகள் என, இன்றளவும் பலரால், ஆன்மீக வாழ்வின் சொத்தாகப் போற்றப்பட்டு வருகின்றன. மனமும் இதயமும் மாற்றம் அடைந்து இயேசு கிறிஸ்துவை நெருங்கிப் பின்செல்வதற்கு இவை உதவுகின்றன. இந்த ஆன்மீகப் பயிற்சிகள், புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர் பாரிசில் கல்வி பயின்றபோது அந்த அனுபவத்தை முழுவதும் எழுதி முடித்தார். இந்த ஆன்மீகப் பயிற்சிகளே, இப்போதும் இயேசு சபையினரால் ஒரு மாத தியானத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மன்ரேசா குகையில் முழுமையாக மனமாற்றம் அடைந்தபின்னர், புனித பூமிக்குப் பயணம் மேற்கொண்டார் அவர். அங்கு தங்கியிருந்த 11 ஆண்டுகள், இலத்தீன் மொழி இலக்கணம் மற்றும் மறைக்கல்வியையும் கற்றுத் திரும்பினார்.

பாரிசில் புனித இஞ்ஞாசியார்

புனித இஞ்ஞாசியார், புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பிய பின்னர், தனது 34வது வயதில் பார்சலோனா, மத்ரித் நகருக்கு அருகிலுள்ள Alcalá de Henares, பிரான்சின் பாரிஸ்  (1528-35) ஆகிய நகரங்களின் பல்கலைக்கழகங்களில் 11 ஆண்டுகள் கல்வி கற்றார். இவர், 1528ம் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டுகள் பாரிசில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றபோது, அவரின் வயது 43. பாரிசில் அவருடன் தங்கி கல்வி கற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் உட்பட ஆறு இளையோரை, இவரது வாழ்வு மிகவும் கவர்ந்தது. "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்? (மத்.16:26)" என்ற நற்செய்தி திருச்சொற்களை, புனித இஞ்ஞாசியார்,  புனித சவேரியாரைப் பார்த்து அடிக்கடி கூறியதால், புனித சவேரியாரின் வாழ்வுப் பாதை மாறியது என அனைவரும் அறிவர். பாரிசில் கல்வி கற்ற சமயத்தில், ஒரு சபையை நிறுவ வேண்டுமென்ற ஒரு காட்சியையும் இஞ்ஞாசியார் கண்டார். எனவே, 1534ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, பாரிசின் மோன்மார்ட் இயேசுவின் திருஇருதய ஆலயத்தில், தனது ஆன்மீகப் பயிற்சிகளின் அடிப்படையில், அந்த ஆறு இளையோருடன் தியானம் செய்தார்.  ஏழ்மை, கற்பு ஆகிய இரு வார்த்தைப்பாடுளையும், தனது ஆறு நண்பர்களுடன் சேர்ந்து கொடுத்தார். பின்னர், புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு அங்கு நற்செய்தியை அறிவிப்பது எனவும் அவர்கள் உறுதி எடுத்தனர். இந்த தங்களது உறுதி நிறைவேற வாய்ப்பு இல்லையெனில், திருத்தந்தை, பணிக்கும் எந்த திருத்தூதுப் பணியையும் ஏற்பதாக அவர்கள் வாக்குறுதி எடுத்தனர்.

சபை அங்கீகராம்

இதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, 1537ம் ஆண்டில், அவர்கள் எழுவரும், உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். புனித இஞ்ஞாசியார், 1539ம் ஆண்டில் தனது சபைக்குரிய சட்ட வரைவுத் தொகுப்பை உருவாக்கினார். இவர்களின் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு, திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இச்சபைக்கு அங்கீகாரம் அளித்தார். இயேசு சபையும் பிறந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் இஞ்ஞாசியார், சபையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தனது சபைக்கு, எந்தவித குறிப்பிட்ட உடைகளையோ, குறிப்பிட்ட பணிகளையோ நிர்ணயிக்கவில்லை. திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பது இச்சபையின் மையமாக இருந்தது. எங்கு பணியாற்ற அழைக்கப்படுகின்றனரோ அங்கு உடனடியாகச் செல்வதற்கும், இவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1556ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி புனித லொயோலா இஞ்ஞாசியார் இறைபதம் அடைந்த சமயத்தில், அதாவது இயேசு சபை ஆரம்பித்த 16 ஆண்டுகளில், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் புதிய உலகில், அச்சபையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் இருந்தனர். இயேசு சபையில், 1626ம் ஆண்டில், 15,544 பேரும், 1749ம் ஆண்டில் 22,589 பேரும் இருந்தனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.   

17 July 2019, 14:06