தேடுதல்

Vatican News
திருத்தந்தை 3ம் பவுல் திருத்தந்தை 3ம் பவுல்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறிஸ்தவமும் சீர்திருத்தமும்-பகுதி 10

சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, புதிய துறவு சபைகளுக்கு அங்கீகாரம் அளித்தார். 1540ம் ஆண்டில் இவர் இயேசு சபையினருக்கு அனுமதி அளித்தார். 1538ம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் 8ம் ஹென்ரியை, திருஅவைக்குப் புறம்பாக்கினார், திருத்தந்தை 3ம் பவுல்

மேரி தெரேசா – வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து சீர்திருத்த சபை பிரிந்த பின்னர், அத்திருஅவையில் சீர்திருத்தம் இடம்பெற்ற காலங்களில், திருத்தந்தை 3ம் பவுல் (திருத்தந்தையாக 1534–1549), திருத்தந்தை 4ம் பவுல் (1555 to 1559), திருத்தந்தை 4ம் பயஸ் (திருத்தந்தையாக 1559-1565), திருத்தந்தை 5ம் பயஸ் (திருத்தந்தையாக 1566 - 1572), திருத்தந்தை 3ம் கிரகரி (திருத்தந்தையாக 1572 - 1585), திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தையாக 1585 - 1590) போன்றோர் பணியாற்றியுள்ளனர். இந்தச் சீர்திருத்த காலத்தில் நான்காவது திருத்தந்தையாகப் பணியாற்றிய, திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள்,  பிரிந்த கிறிஸ்தவ சபைக்குப் பதில்கூரும் முறையில், கத்தோலிக்கத் திருஅவையில், மிகுந்த துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்தவர்களில் முதன்மையானவராக நோக்கப்படுகிறார். இத்திருத்தந்தை கொண்டுவந்த சீர்திருத்தங்கள், நூற்றாண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையை வடிவமைப்பதற்கு உதவின. குறிப்பாக, பிரிந்த கிறிஸ்தவ சபை இறையியலுக்குப் பதிலளிக்கும் விதமாக, கத்தோலிக்கக் கோட்பாடுகளை இவர் உறுதி செய்தார். Alessandro Farnese என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், அக்காலத்தில், இத்தாலிய அரசியல் உலகில் புகழ்பெற்றிருந்த குடும்பத்தில், 1468ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்தார். இவர், உரோம், பிளாரன்ஸ், பீசா ஆகிய நகரங்களில் மனிதப் பண்பாட்டு இயல் கல்வி கற்றார்.  இவர் பிளாரன்ஸ் நகரில் இருந்தபோது, டஸ்கன் மாநிலத்தை ஆட்சி செய்த Medici குடும்பப் பரம்பரையைச் சேர்ந்த முதுபெரும்தந்தை லொரென்சோ, பிற்காலத்தில் திருத்தந்தையராகப் பணியாற்றிய 10ம் லியோ, 7ம் கிளமென்ட் போன்றோரின் தொடர்பும் இவருக்குக் கிடைத்தது.

திருத்தந்தை 3ம் பவுல்

திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், 1492ம் ஆண்டில் திருஅவைப் பணியில் சேர்ந்தார். இவர், அப்போதைய திருத்தந்தை 6ம் அலெக்சாந்தர் அவர்களின் கீழ், உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். 1493ம் ஆண்டில் கர்தினாலாகவும் இவர் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்கள், இவரை, 1509ம் ஆண்டில், பீசா நகரின் ஆயராக நியமித்தார். எனினும் இவர், 1519ம் ஆண்டுவரை ஆயராகத திருப்பொழிவு செய்யப்படவில்லை. எழுச்சி மிகுந்த இளைஞராக இருந்த இவருக்கு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு, மூன்று மகன்களும் பிறந்தனர். இருந்தபோதிலும், ஏறத்தாழ 1513ம் ஆண்டில் இவரது வாழ்வு முற்றிலும் மாறியது. பார்மா ஆயராக இவர் பணியாற்றியவேளையில், அம்மறைமாவட்ட முதன்மைக்குரு Bartolomeo Guidiccioni அவர்களின் அறிவுரையால், அந்தப் பெண்ணோடு உள்ள உறவை முறித்து, பார்மா மறைமாவட்டத்தின் சீர்திருத்தத்திற்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தார். 5வது இலாத்தரன் பொதுச்சங்கத் தீர்மானங்களை தனது மறைமாவட்டத்தில் செயல்படுத்த முயற்சித்தார். 1519ம் ஆண்டில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர், உரோம் தலைமையகத்தைச் சீர்திருத்தும் பிரிவில் முன்னணி உறுப்பினராகச் செயலில் இறங்கினார் திருத்தந்தை 3ம் பவுல்.  

திருத்தந்தை 3ம் பவுல் அவர்களுக்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய 6ம் ஏட்ரியன் அவர்களும், சீர்திருத்த மனநிலையைக் கொண்டிருந்தவர். இத்திருத்தந்தை 1523ம் ஆண்டில், உயிர்துறந்தார். அவருக்குப்பின் திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்கள், 11 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் உயிர்துறந்தபின், 1534ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருஅவையின் சீர்திருத்தத்திற்குப் பெரிதும் உதவுவார், பொதுச்சங்கத்தை நடத்துவார் என்பது இவரிடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இவர், 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற கலை-இலக்கிய மறுமலர்ச்சியில், கலைகளின் பாதுகாவலராக இருந்து, தனக்கு முந்தைய திருத்தந்தையரின் திட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில், மைக்கிள் ஆஞ்சலோ அவர்கள் வரைந்த, இறுதித் தீர்வு ஓவியம் முழுமை பெற, இவர் ஆதரவளித்தார். வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயப் பணிகள், மீண்டும் தொடர்ந்து நடைபெறச் செய்தார். 1527ம் ஆண்டில் பேரரசர் 5ம் சார்லஸ் காலத்தில், உரோம் நகர் சூறையாடப்பட்டதில், நகரில் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்படுவதை ஊக்குவித்தார். வத்திக்கான் நூலகத்தை, மனிதப்பண்பாட்டியியலாளரின் கட்டுப்பாட்டில் வைத்தார், திருத்தந்தை 3ம் பவுல்.     

திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், தனது சீர்திருத்த எண்ணங்களுக்கு உண்மையுள்ளவராய் விளங்கினார். தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பொதுச்சங்கம் ஒன்று கூட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும், அது குறித்த தனது திட்டத்தையும் வெளிப்படுத்தினார். அதற்கு உதவியாக, தனது பாப்பிறைப் பணியின் தொடக்க காலங்களிலே, கர்தினால்கள் அவையை முழுமை பெறச் செய்தார். திருஅவையைச் சீர்திருத்துவதற்குத் தங்களை உண்மையிலேயே அர்ப்பணிக்கும் நோக்கம் கொண்டவர்களை இந்த அவையில் இணைத்தார். இவ்வாறு இவர் கர்தினால்கள் அவையில் இணைத்தவர்களில், ஜான் பிஷர் ஒருவர். இவர், பின்னாளில் இங்கிலாந்தில் அரசர் 8ம் ஹென்ரியால் தூக்கிலிடப்பட்டார். மற்றொருவர், Gian Pietro Carafa, இவர் பிற்காலத்தில் திருத்தந்தை 4ம் பவுலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழ்பெற்ற சீர்திருத்தவாதி Gasparo Contarini, புகழ்பெற்ற மனிதப்பண்பாட்டியியலாளர் Jacobo Sadoleto, இன்னும், அரசி மேரி அவர்களால் இங்கிலாந்தில் கத்தோலிக்கம் நிலைநிறுத்தப்பட்ட காலத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றிய Reginald Pole, பிற்காலத்தில் திருத்தந்தை 2ம் மார்செலுசாகப் பணியாற்றிய, செர்வினி என முக்கியமான பலரை கர்தினால்கள் அவையில் சேர்த்தார்.

திரிதெந்து பொதுச்சங்கம்

திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், 1536ம் ஆண்டில் கர்தினால்கள் அவையில் இணைத்த பலர், பொதுச்சங்கம் கூட்டப்படுவதற்கு நல்ல பரிந்துரைகளை வழங்கினார்கள். இவர், தனது பணி காலத்தில், பிரிந்த கிறிஸ்தவ சபையின் தாக்கம் பரவாமல் இருக்கவும், கத்தோலிக்கப் போதனைகளைப் பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 1542ம் ஆண்டில், உரோமன் விசாரணை நீதிமன்ற பேராயத்தை உருவாக்கினார். பாப்பிறையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரிந்த கிறிஸ்தவ சபை போதனைகளைப் போதித்தார்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை விசாரிக்கும் நோக்கத்தை இது கொண்டிருந்தது. மேலும், சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, புதிய துறவு சபைகளுக்கு அங்கீகாரம் அளித்தார். 1540ம் ஆண்டில் இவர் இயேசு சபையினருக்கு அனுமதி அளித்தார். 1538ம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் 8ம் ஹென்ரியை, திருஅவைக்குப் புறம்பாக்கினார். 1534ம் ஆண்டில் திருத்தந்தை கிளமென்ட் அவர்களால் இது அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திருத்தந்தையே அதை உறுதி செய்தார். 1537ம் ஆண்டில், மாந்துவாவிலும், 1538ம் ஆண்டில், விச்சென்சாவிலும் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். ஆனால், அரசியல் பதட்டநிலைகளால் அவற்றை நடத்த முடியவில்லை. இறுதியில் 1544ம் ஆண்டில் பிரான்சுக்கும், இஸ்பெயின் அரசர் 5ம் சார்லசுக்கும் இடையே இடம்பெற்ற Crépy அமைதி உடன்பாட்டால், 1545ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திரிதெந்து பொதுச்சங்கத்தைத் தொடங்கினார், திருத்தந்தை 3ம் பவுல். இப்பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் நோயினால் தாக்கப்பட்டதால், இது, பொலோஞ்ஞா நகரில் நடைபெற பரிந்துரைத்தார். ஆனால் அரசர் சார்லஸ் அதற்கு அனுமதி தரவில்லை. எனவே, இதன் எட்டாவது அமர்வுக்குப்பின், 1547ம் ஆண்டில் அதனை முடிவடையச் செய்தார். 1553ம் ஆண்டுவரை இப்பொதுச்சங்கம் மீண்டும் கூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜென்மப் பாவம், விவிலியத்திற்கும், மரபுக்கும் இடையேயுள்ள உறவு, வுல்காத்தா இலத்தீன் விவிலியத்தின் அங்கீகரிப்பு, ஏற்புடைமை போன்றவை குறித்த, திரிதெந்து பொதுச்சங்கத் தீர்மானங்களை வெளியிட்டார் திருத்தந்தை 3ம் பவுல்.

கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளை நிலைநிறுத்த உழைத்த திருத்தந்தை 3ம் பவுல் அவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 1549ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி உயிர்துறந்தார். புனித பேதுரு பசிலிக்காவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

10 July 2019, 12:56