பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை, பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை, பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு 

நீர்த்தேக்கம் கட்டுவதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் ஆதரவு

உலகம் எதிர்கொள்ளும் வெப்பத்தைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழலின் நலன் கருதியும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, நாடெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் சிறுபான்மை சமுதாயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, அந்நாட்டில் நீர்த்தேக்கம் ஒன்றைக் கட்டுவதற்கு, 35,250 டாலர் காசோலையை, கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள், பிரதமர் இம்ரான் கான் அவர்களிடம் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் மக்களவை கிறிஸ்தவ உறுப்பினர் Jamshed Thomas அவர்களுடன், அந்நாட்டு ஆயர் பேரவை தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் குழு, பிரதமர் இம்ரான் கான் அவர்களை, ஜூலை 04, இவ்வியாழனன்று சந்தித்து, இந்நிதியை வழங்கியது.

கராச்சி, ஹைதராபாத், கெட்டா, முல்ட்டான், ஃபாய்சலாபாத், லாகூர் இஸ்லாமபாத்-இராவல்பிண்டி ஆகிய மறைமாவட்டங்களில் திரட்டப்பட்ட இந்நிதி உதவியை, பிரதமரிடம் அளித்த அக்குழு, இந்த சிறந்த பணிக்கு ஆதரவளிக்க வேண்டியது எமது கடமை என்று தெரிவித்தது.

தண்ணீர், மனிதரின் வாழ்வுக்கு அடிப்படை தேவை என்றும், தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு தீவிரமாக முயற்சிகள் எடுக்கப்படவில்லையெனில், நாம் வறட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அக்குழு எச்சரித்தது.

2018ம் ஆண்டு ஜூலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி Mian Saqib Nisar அவர்கள், பாகிஸ்தானில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை வலியுறுத்தி, நீர்த்தேக்கங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கும், அக்குழு பாராட்டு தெரிவித்தது.

இதற்கிடையே, உலக அளவில் எதிர்கொள்ளப்படும் வெப்பத்தைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழலின் நலன் கருதியும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, ஏற்கனவே, நாடெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2019, 15:16